யணிதற்குரிய நீண்ட கூந்தலைக்கொண்ட கன்னியாகுக என்று, ஆங்கு - அங்குத்தானே, ஒருகடத்தில் - ஒருபானையிலே, சேர்த்தி வைத்தான் - இட்டுவைத்தான்; (எ - று.) இதனால், இழுதைக் கொண்ட நூறு தாழியிலும் அந்தக் கோசத்தசையினையிட்டமை பெறப்படும். (227) 73.-வியாசன் காந்தாரியைநோக்கி 'என்வரத்தால் தசைகள் உருவுபெற்று நிரம்பும்வரையிற்சேமித்துவை' என்று சொல்லிப்போதல். கருவுறுதாயைநோக்கிக் கையறுமென்றுகன்றி வெருவுறல்கற்பின்மிக்காய் வேறுசெய்தசைகள்யாவும் உருவுறநிரம்பித்தாமே யுற்பவிப்பளவுங்கையால் மருவுறல்வழுவுறாதென் வரமெனவரதன்போனான். |
(இ-ள்.) கரு உறு தாயை நோக்கி - கருவுற்ற தாயைப்பார்த்து, கற்பின்மிக்காய்-! கையறும் - (நம்முடைய கருப்பம்) அழிந்திடும் என்று-, கன்றி - மனம்வாடி, வெருவுறல் - அஞ்சாதே: வேறு செய் தசைகள் யாஉம் - நூறுகூறுசெய்த தசைகளெல்லாம், உரு உற - ரூபத்தைப் பொருந்த, நிரம்பி - பூர்ணமாகவளர்ந்து, தாம்ஏ உற்பவிப்பு அளவுஉம் - தாமே தோற்றுங்காலம் வரையிலும், கையால் மருவு உறல் - கையால் (அத்தசைக் கூற்றைத்) தொடாதே: என்வரம் வழுஉறாது - என்னுடையவரம் பழுதுபடாது, ' என - என்று சொல்லி விட்டு, வரதன் - வரத்தைக் கொடுத்தவனான வியாசன், போனான்; தாழியிற்பெய்த தசைகள் உறுப்புநிரம்பித் தாமே அந்தத் தாழியைப் பிளந்துகொண்டு வெளிவரும் வரையிற் பாதுகாப்பாயென்று சொல்லிச் சென்றனன் வியாசனென்க. தாய் - காந்தாரி. (228) 74.-காந்தாரி தாழிகளிலிட்ட தசைக்கூறுகளைப் பாது காத்து உற்பவிக்கும் பருவத்தை நோக்கியிருத்தல். காம்பெனநிறத்ததோளாள் கருவயிற்றிருப்பதொப்பத் தேம்பயினறுநெய்பெய்த கலங்களைச்சேமமாக ஆம்பரிவுடனேயாற்றி யீற்றிளையடைந்துவைகும் பாம்பெனப்பருவநோக்கி யிருந்தனள் பழுதிலாதாள். |
(இ-ள்.) பழுது இலாதாள் - குற்றமற்றவளான, காம்பு என நிறத்த தோளாள்-பசியமூங்கில்போலவுள்ள நிறத்தையுடைய தோளையுடையவளான காந்தாரி, கரு - கருப்பம், வயிறு இருப்பது ஒப்ப - (தன்) வயிற்றில்தானே இருப்பதையொப்ப, தேம் பயில் நறு நெய் பெய்த கலங்களை - இனிமை பொருந்திய நறுமணமுள்ளநெய் யூற்றிய கலங்களை, சேமம் ஆக - பத்திரமாக, ஆம் பரிவுடன் ஆற்றி - பொருந்திய மனப்பரிவோடு பாதுகாத்து,- ஈற்று அளை அடைந்து வைகும் - ஈன்றமுட்டையைக்கொண்ட புற்றையடைந்து தங்குகின்ற, பாம்பு என - பாம்புபோல, பருவம் நோக்கி இருந்தனள்-; (எ-று.) உவமையாற் கொடுமை தொனிக்கும். ஈற்று - ஈனப்பட்டது: செயப்படுபொருள் விகுதி புணர்ந்துகெட்டுத் திரிந்த பெயர். (229) |