86.- மாத்திரிக்கு இரண்டுபுத்திரர் ஒருசேரப் பிறத்தல். மருவருங்குழலியாயு மறையினால்வரிசைபெற்ற இருவருமொருவர்போல வின்புறமணந்தபோதில் பருவரலியாதுமில்லாப் பாலகரிருவர்சேரக் கருவிளைந்துதித்தார்யாருங் கண்ணெனக்காணுநீரார். | (இ-ள்.) மரு வரும் குழலி - நறுமணம் பொருந்திய கூந்தலை யுடையளான மாத்திரி, ஆயும் மறையினால் - தியானித்துக் கூறிய வேதமந்திரத்தினால், வரிசை பெற்ற இருவர்உம் - சிறப்புப்பொருந்திய (தேவவைத்தியர்களாகிய) அசுவினீதேவ ரிரண்டுபேரும், ஒருவர் போல - ஒருத்தர்போல (வந்து), இன்புறமணந்த போதில் - (மாத்திரி) இன்பமடைய (அவளைச்) சேர்ந்தசமயத்தில், பருவரல் யாதுஉம் இல்லா - துன்பமென்பது சிறிதுமில்லாமல், பாலகர் இருவர்சேர கரு விளைந்துஉதித்தார்-இரண்டு குழந்தைகள் ஒரு சேரக் கருப்பத்திலே முதிர்ந்து வெளிப்பட்டார்கள்: யார்உம்கண் என காணும் நீரார் - (அந்தக் குழந்தைகள்) யாவராலும் கண்ணெனக் கருதும்படியான நற்குணமுள்ளவர்; (எ-று.) (241) 87.- ஐந்துமைந்தரால் பாண்டு மகிழ்ச்சியடைந்து வாழ்தல். சசிகுலநகுலனென்றுந் தம்பிசாதேவனென்றும் விசயனோடெண்ணும்வீமன் மேதகுதருமனென்றும் அசைவறுசிங்கசாபமனையவரைவராலும் வசையறுதவத்தின்மிக்கான் மகிழ்ச்சியால்வாழ்வுபெற்றான். |
(இ-ள்.) சசிகுலம் - சந்திரகுலத்துத்தோன்றிய, நகுலன் என்று உம் தம்பி சாதேவன் என்றுஉம் - (அவன் ) தம்பியாகிய சகதேவனென்றும், விசயனோடு - அருச்சுனனுடனே, எண்ணும் - (யாவராலும்) மதிக்கப்படுகின்ற, வீமன் - வீமனும், மேதகு தருமன் என்றுஉம் - மேன்மைபெற்ற தருமபுத்திரனும் என்றும், அசைவு அறு சிங்கசாபம் அனையவர் ஐவரால்உம் - சோர்தலில்லாத சிங்கக்குட்டியை யொத்தவரான ஐந்துகுமாரர்களாலும், வசை அறுதவத்தின் மிக்கான் - குற்றமற்ற தவத்தினால் மிக்கவனான பாண்டு, மகிழ்ச்சியால் - மகிழ்ச்சிகொண்டு, வாழ்வு பெற்றான்-; (எ-று.) (242) 88.- குமாரர்கள் விளையாடுதல். தாதியர்மருங்குந்தந்தை தடமணிமார்பும்பெற்ற பேதையர்கரமுநீங்காப் பெற்றியின்வளர்ந்தபின்னர்ப் போதகமடங்கல்புல்வாய் புலிமுதல்விலங்கொடோடி வேதியர்முன்றிறோறும் விழைவிளையாடலுற்றார். |
(இ-ள்.) (சிலகாலத்தில்), தாதியர் மருங்குஉம் - செவிலித்தாயரின் இடுப்பையும், (சிலகாலத்தில்), தந்தை தட மணி மார்புஉம் - தந்தையாகிய பாண்டுவின் விசாலமான அழகியமார்பையும், (சிலகாலத்தில்), பெற்ற பேதையர் கரம்உம் - (தம்மைப்) பெற்ற பேதைமைக் குணமுடையவரான தாய்மாரின்கையையும், நீங்கா - நீங்காத, பெற்றியின் - தன்மையோடு, வளர்ந்தபின்னர் - வளர்ந்த பின்பு,- போதகம் - யானைக்கன்றும், மடங்கல் - சிங்கமும், புல்வாய் - மானும், புலி - புலியும், |