காவினிடத்துக் கள்ளுண்டவரின் தன்மை ஏற்றிக் கூறப்பட்டது. மதுவயர்தல் - வேனிற்பருவத்தைப் பெறுதலும், கட்பருகுதலும்: தலைநடுங்குதல் - மேலிடம் நடுங்குதலும், தலையென்ற உறுப்பு நடுங்குதலும்: கால்தடுமாறல் - காற்றுவீசுதலும், காலென்னும் உறுப்புத் தடுமாறலும். கட்பருகுவோர்க்கு உடலில் சிவப்பு நிறந் தோன்றுதலும், கள்ளின் புதுமணத்திற்காக வண்டு மொய்த்தலும், புதுமணம் உலாவுதலும், தலைநடுங்குதலும், கால் தடுமாறுதலும் நிகழ்வதுபோல, வேனிற்பருவத்தைப்பெற்ற காவுக்குப் புதுத்தளிரால் மெய்சிவப்பேறுதலும், புதுத்தேன் பொருட்டு வண்டு மொய்த்தலும், புத்தரும்புகள் அலர்வதால் புதுமணம் பரந்துலாவுதலும், மேற்புறம் அசைதலும், கால்தடுமாறலும் [காற்றுத் தடுமாறுதலும்] தோன்றினவென்க. இச்செய்யுள் - சிலேடையை யங்கமாகக்கொண்டுவந்த வேற்றுப்பொருள்வைப்பணியாகும். (247) 93. | பைந்தடந்தாளான்முன்னம் பருகியபுனலைமீளச் செந்தழலாக்கியந்தண் சினைதொறுங்காட்டுஞ்சீரான் முந்தியவசோகுசூத முதலியதருக்களெல்லாம் இந்திரசாலம்வல்லோ ரியற்கையினியற்றுமாலோ. |
(இ-ள்.) பைந் தட தாளால் முன்னம் பருகிய புனலை மீள செந்தழல் ஆக்கி - பசிய பெரிய தாளினால் முன்பு உட்கொண்ட நீரை மீளவும் செந்நிறத்தழலாகச்செய்து, அம் தண் சினை தொறு உம் காட்டும் சீரால் - அழகிய குளிர்ந்த கிளைதோறும் காட்டுகின்ற சீர்மையினால், முந்தியஅசோகு சூதம் முதலிய தருக்கள் எல்லாம் - (சோலையில்) முற்பட்டுள்ள அசோகு மா முதலிய விருட்சங்கள்யாவும், இந்திரசாலம்வல்லோர் இயற்கையின் - இந்திரசால வித்தையில் வல்லவர்கள் செய்யும் தன்மைபோல, இயற்றும் - தொழிலைச் செய்வனவாம்: (எ -று.) ஆல்ஓ - வியப்பைக் குறிக்கும் இடைச்சொற்கள். தாளாலுண்டபுனலைக் கிளைதோறும் செந்தழலாக்கிக்காட்டுவதால், இந்திரசாலம்வல்லோர்செய்கைபோலும் இத்தருக்களின் செய்கையென்றார். இந்திரசாலம் - மாயவித்தை. கிளைதோறும் செந்நிறத்தளிர்கள் தோன்றியதைச் செந்தழலாக்கிக்காட்டுஞ்சீர் என்றது - தற்குறிப்பேற்றவணி. 'மீள' என்றசொல்லாற்றலால், 'அக்நேராப:' [தீயிலிருந்து நீர்] என்ற காரணகாரியமுறைமாறியமைதொனி. (248) 94. | பரந்தெழுசூதபுட்ப பராகநல்லிராகமிஞ்ச முரண்படுசிலைவேள்விட்ட மோகனச்சுண்ணம்போன்ற புரிந்ததொல்யோகமாக்கள் புந்திநின்றுருகத்தொட்ட அருந்தழற்கணைகள்போல வலர்ந்தனவசோகசாலம். |
(இ-ள்.)பரந்து எழு - பரவியெழுகின்ற, சூதபுட்ப பராகம் - மாம்பூவின் தூளிகள், நல் இராகம் மிஞ்ச - சிறந்த காதல் விஞ்சும் படி, முரண்டு படு சிலை வேள் - மாறுபட்ட வில்லையேந்திய மன்மதன், விட்ட - (யௌவனப் பருவத்தையுடையார்மேல்) எய்த, மோகனம் சுண்ணம்போன்ற - மோகனாஸ்திரத்தின் பொறியைப்போலும்: அசோககாலம் - அசோகமலர்த்திரள்,- புரிந்த தொல் யோகம் மாக்கள் - செய்த சிறந்த பழமையான யோகத்தையுடைய மானுடர், புந்தி நின்று உருக - அறிவு குன்றியுருகும்படி, |