104.-குந்தியென்பாள் அழும்போது நற்றவரும் உருகி உளம்நெகிழ்தல். உற்றதுமருங்கொழுந னுயிருறுநலத்தால் இற்றதுமுணர்த்திவ ளிரங்கியழுமெல்லைக் குற்றமகலும்படி குணங்களைநிறுத்தும் நற்றவர்புகுந்துருகி நைந்துளநெகிழ்ந்தார். |
(இ-ள்.) உற்றதுஉம்- (தனக்கு) நேர்ந்ததாகிய கைக்மையையும், அருங் கொழுநன்உயிர் - (தன்னுடைய) அரிய கணவனுயிர், உறும் நலத்தால் - (தான்) அனுபவித்தஇன்பத்தினால், இற்றதுஉம் - அழிந்ததையும்,உணர்ந்து-, இரங்கி-, இவள் - இந்தக் குந்தி, அழும் எல்லை- அழும்போது,- குற்றம் அகலும்படி - குற்றம்தீரும்படி (நோற்று), குணங்களை நிறுத்தும் - குணங்களை (த் தம்மிடத்து) நிலை நாட்டும், நல் தவர் - சிறந்த தவத்தையுடைய முனிவர், புகுந்து - (அங்கு) வந்து, உளம் - மனம், நைந்து-, உருகி-, நெகிழ்ந்தார் - இளகப்பெற்றார்; (எ-று.) (259) 105.-புதல்வரைக்கொண்டு முனிவர் அந்திமக்கடனை நடத்தலும், மாத்திரி சிதையனலிற் குளித்தலும். அழுகுரல்விலக்கியபி னைம்மகவவையுங்கொண்டு எழுகடனிலத்தரசை யீமவிதிசெய்யப் புழுகுகமழ்மைக்குழலி பொற்புடைமுகத்தாள் முழுகினளனற்புனலின் மொய்ம்பனைவிடாதாள். |
(இ-ள்.) (வந்தமுனிவர்), அழு குரல் - அழுகுரலை, விலக்கிய பின் - தவிர்த்தபிறகு, ஐ மகவைஉம் கொண்டு - ஐந்துபுத்திரரையுங் கொண்டு, எழு கடல் நிலத்து அரசை - ஏழுகடலைக்கொண்ட பூமிக்கு அரசனான பாண்டுமன்னவனுக்கு, ஈமம் விதி - அந்திமக்கடனை, செய்ய-,- புழுகு கமழ் மை குழலி - புழுகுமணம்வீசுகின்ற கறுத்த கூந்தலையுடையவளும், பொற்பு உடை முகத்தாள் - அழகையுடைய முகத்தையுடையவளுமான மாத்திரி, மொய்ம்பனை விடாதாள் - (தன்) கணவனைப் பிரிந்திருக்கமாட்டாதவளாய், அனல் புனலின் முழுகினள் - சிதையனலாகிய நீரிலே முழுகினாள்; (எ-று.) நீர்க்கயத்துமுழுகுவதுபோல் மனமகிழ்ச்சியோடுதீயிற்குளித்திட்டாள் மாத்திரி யென்க. "காதலன்வீயக்கடுந்துயரெய்திப், போதல் செய்யா வுயிரொடு புலந்து, நளியிரும்பொய்கையாடுநர் போல, முளியெரிபுகூஉம்முதுக்குடிப்பெண்டிர்," "பெருந்தோட் கணவன் மாய்ந்தென வரும்பற, வள்ளிதழவிழ்ந்ததாமரை, நள்ளிரும் பொய்கையுந்தீயுமோரற்றே" என்பன காண்க. தன்பிழையால் கணவன் இறந்திட்டதுபற்றி, மாத்திரி, தன் புதல்வரையும் காக்குந் தொழிலைமேற்கொண்டு இருக்குமாறும் தான் அனலிற் குளிக்குமாறும் குந்திதேவியிடம் அநுமதிவேண்டிப்பெற்று, புதல்வரைத் தழுவி உச்சிமோந்து அந்தக்குந்தியின் கையிலொப்பித்து மகிழ்வோடு தீப்பாய்ந்தன ளென்று பாலபாரதம் கூறும். செய்ய = செய்விக்க: பிறவினையில்வந்ததன்வினை. (260) |