பக்கம் எண் :

138பாரதம்ஆதி பருவம்

106.- மாத்திரிசுவர்க்கம்புக, குந்தி கணவனதுஈமக்கடனை முடித்தல்.

தங்கையவள்வானுலகு தலைவனுடனெய்திக்
கங்கைவனமூழ்கியுயர் கற்பவனம்வைகப்
பங்கயநெடுந்துறை படிந்துதன்மகாரான்
மங்கையிவளுங்கடன் முடித்தனள்வனத்தே.

     (இ-ள்.) தங்கையவள் - தனக்குப்பின் கணவனுக்கு வாழ்க்கைப்பட்டவளான
மாத்திரி, வான் உலகு - சுவர்க்கலோகத்தை, தலைவனுடன் - கணவனுடனே,
எய்தி - அடைந்து, கங்கை வனம் மூழ்கி - ஆகாச கங்கையின் நீரிலே முழுகி,
உயர் கற்பவனம் வைக - சிறந்த (வானுலகத்துக்) கற்பகவனத்து நிழலிலே
தங்கினளாக,- மங்கை இவள்உம் - குந்தியென்கிற இந்த மடத்தையும், பங்கயம்
நெடுந் துறைபடிந்து - தாமரையையுடைய பெரிய நீர்த்துறையிலே மூழ்கி, தன்
மகாரால் - தன் புத்திரரைக்கொண்டு, வனத்தே - அந்தக்காட்டில், கடன் - (தன்
கணவனுடைய) ஈமக்கடனை, முடித்தனள் - நிறைவேற்றினாள்; (எ - று.)

     மாத்திரி கங்கைநீரில்மூழ்கிக் கற்பகவனத்தே தங்க, குந்தியும்
பங்கயத்துறைநீரில் மூழ்கி வனத்தே தங்கினா ளென ஒரு நயந்தோன்றக்
கூறியவாறு.                                                   (261)

107.- சதசிருங்கமுனிவர்கள் குந்தியை மக்களோடு
அஸ்தினாபுரியிற் சேர்த்தல்.

காசிபன்முதற்கடவுள் வேதியர்கருத்தால்
ஆசிபெறுமப்புதல்வ ரைவரொடுமன்றே
ஏசல்பிரதைக்கொடியை யிறைநகரினுய்த்தார்
தேசிகரின்முற்றொழு தகுஞ்சதசிருங்கர்.

      (இ-ள்.) தேசிகரின் - ஆசிரியரைப்போல, முன் தொழுதகும் -
முதலில்தொழத்தக்க, சதசிருங்கர் - சதசிருங்கபருவதத்தில் வசிப்பவரான,
காசிபன் முதல் கடவுள் வேதியர் - காசிபன் முதலாகிய கடவுளர் போன்ற
அந்தணர்,- கருத்தால் - (தம்) மனப் பூர்வமாகக் கூறும், ஆசி வாழ்த்தை,
பெறும் - பெற்ற, அ புதல்வர் ஐவரொடுஉம் - அந்த ஐந்துபுத்திரரோடும்,-
ஏசுஇல் பிரதைகொடியை- குற்றமற்ற கொடி போன்ற பிரதையென்பாளை, இறை
நகரின் - அரசனுடைய அஸ்தினாபுரியிலே, உய்த்தார் - கொண்டுசேர்த்தார்;
(எ-று.)

     சதசிருங்கரென்பார் புத்திரரோடு பிரதையை வேதியர்கருத்தால்
அத்தினபுரியில் உய்த்தாரென்று இச்செய்யுளுக்குப் பொருள் கூறுதல்
முதனூலுக்குப்பொருந்தாது. அன்றே - ஈற்றசை: பாண்டுவின் அந்திமக்கடன்
முடிந்த அன்றைக்கே எனினுமாம். பாண்டவர் அத்தினாபுரியைச் சேர்ந்தபோது
தருமபுத்திரனுக்கு வயசு பதினாறு, வீமனுக்குப் பதினைந்து, அருச்சுனனுக்குப்
பதினான்கு, இரட்டையர்க்குப் பதின்மூன்று என்றும், பாண்டுவின் தகன
ஸம்ஸ்காரமே சதசிருங்கபர்வதத்தில் நடந்ததாக மற்றை உத்தரகிரியைகள்
அஸ்தினாபுத்திலே திருதராஷ்டிரன் முதலியோராற் செய்விக்கப்பட்டன வென்றும்
வியாசபாரதத்தால் விளங்கும்.                                     (262)