பக்கம் எண் :

146பாரதம்ஆதி பருவம்

யாவது - பிறராற்செய்தற்கு அரிய காரியங்களை எளிதிற்செய்து முடிக்குந் திறம்;
ஆச்சரியகரமான குணங்களுஞ் செயல்களும் எனினுமாம். இதற்கு - மாயை
போலக் கருநிறமுடையா னென்று பொருள்கூறுவாரு முளர். முளரிகளை
இறைஞ்சியென இரண்டனுருபுவிரித்தால், இரண்டு செயப்படுபொருள் வந்த
வினையாம். தேவதேவனையென முதற்பெயரில் இரண்டனுருபு வந்ததனால்,
பதமுளரிகளில் என்ற சினைப்பெயரில் ஏழனுருபு விரித்தல் தமிழ்முறை:
"முதலை ஐஉறிற் சினையைக் கண் உறும்" என்பது காண்க.

     இதுமுதல் முப்பத்தொரு கவிகள் - பெரும்பாலும் மூன்றாஞ் சீரொன்று
மாச்சீரும், மற்றைமூன்றும் விளச்சீர்களுமாகிய அளவடி நான்கு கொண்ட
கலிவிருத்தங்கள். இவற்றில் நான்காஞ்சீர் கூவிளச்சீராகவே நிற்கும்.     (275)

2.-துரியோதனன் கர்ணனைத் தனக்கு உற்றதுணையாகக்
கொள்ளுதல்.

ஆங்கவரம்முறை யயருமாயிடைத்
தீங்கொருவடிவமாந் திறற்சுயோதனன்
பாங்கிவனமக்கெனப் பரிதிமைந்தனை
வாங்குபுதழீஇயினன் வலிமைகூரவே.

     (இ-ள்.) ஆங்கு - அவ்விடத்தில் [அஸ்திநாபுரியில்], அவர் - அவர்கள்
[பாண்டவர்களும் துரியோதனாதியர்களும்], அ முறை - அவ்வாறு, அயரும் -
விளயைாடுகிற, அ இடை - அப்பொழுது,- தீங்கு ஒரு வடிவம் ஆம் திறல்
சுயோதனன் - தீக்குணமே ஒரு மனித வடிவங்கொண்டாற் போன்ற
[மிகக்கொடிய] வலிமையையுடைய துரியோதனன், வலிமைகூர - (தனக்கு)
வலிமை மிகும்படி, பரிதி மைந்தனை - சூரியனுடைய மகனான கர்ணனை, இவன்
நமக்கு பாங்கு என - இவன் நமக்கு உரியநண்ப னென்று கருதி, வாங்குபு
தழீஇயினன் - அழைத்துச் சேர்த்துக்கொண்டான்; (எ-று.)

     வீமனுடைய வலிமைக்கு ஆற்றாத துரியோதனன், தங்களுக்குப் பக்கபலம்
மிகுதற்பொருட்டு, பலபராக்கிரமங்களிற்சிறந்த கர்ணனை வரவழைத்துத் தனக்கு
ஏற்றதுணைவனாக்கிக்கொண்டனன் என்பதாம். வாங்குபு - செய்பு என்னும்
வாய்ப்பாட்டு வினையெச்சம்.                                     (276)

3.-பாண்டவரும் துரியோதனாதியரும் கங்கையில் நீர்
விளையாட்டு நிகழ்த்தல்.

ஒருபகனிலமக ளுய்யமங்குலின்
வருபகீரதிநதி வாசநீர்படிந்து
இருதிறப்புதல்வரு மியைந்தகேண்மையால்
கரையடைந்தனரிளங் கடவுளோரனார்.

     (இ-ள்.) இளங் கடவுளோர் அனார் - தேவகுமாரர்கள் போன்றவர்களாகிய,
இரு திறம் புதல்வர்உம் - (பாண்டு திருதராஷ்டிரன் என்பவர்களின்)
புத்திரர்களான இரண்டுவகுப்பினர்களும்,- இயைந்த கேண்மையால் - பொருந்திய
நண்புடனே,- ஒருபகல்-