வையையுடையவளான) உருப்பசியின் வயிற்றிலே, ஆயு என்றஒரு செம்மலை - ஆயுவென்று பேர்படைத்த செம்மைக்குணமுடைய ஒரு புத்திரனை, அளித்தான் - தந்தான்: வண் புகழ் மேய வேந்தரில்- சிறந்த புகழ் பொருந்திய அரசர்களுக்குள், இவன்ஏ - இந்தஆயுவே, தேயுஉம் - அக்கினிதேவனும், பல தேவர்உம் - பல தேவர்களும், மகிழ - உவகைகொள்ளுமாறு, வேள்வியால் மிக்கோன் - யாகத்தினால்மேம்பட்டவன்; (எ-று.) - மற்று - அசை. வேள்வியை இந்தப் புரூரவன் புத்திரனான ஆயுவென்பவன் மிகுதியாகச் செய்தானாதலால், தமக்கு அவியுணா மிகுதியாகக் கிடைப்பதுபற்றித் தேவரும், வேள்வியில் தலைமையிருத்தலால் அந்த அனற்கடவுளும் மகிழ்வாராயினர். மான் -உவமையாகுபெயர். ஊரு - தொடை: தற்சம வடசொல். (21) 14.- ஆயுவின்மைந்தன் நகுட னென்பவன். முகுடமும்பெருஞ்சேனையுந் தரணியுமுற்றுஞ் சகுடநீரெனச்சதமகம் புரியருந்தவத்தோன் நகுடநாமவேனராதிப னாகருக்கரசாய் மகுடமேந்தியகுரிசிலா யுவின்றிருமைந்தன். |
(இ - ள்.) முகுடம் உம் -(தான் அணிந்திருந்த) கிரீடமும், பெருஞ் சேனைஉம் -(ஆளுவதற்குக் கருவியான) மிக்கசேனையும், தரணிஉம் - (ஆளப்படும்) உலகமும்,முற்றுஉம் - (ஆகிய) யாவற்றிலும், சகுடம் நீர் என - சேம்பினிலையில் நீர்போல,(பற்றற்றவனாய்), - சதமகம்புரி- நூறு அசுவமேத யாகங்களைச் செய்த, அருந்தவத்தோன் - அருமையான நோன்பினையுடையவனாகிய, நகுடன் நாமம் வேல்நராதிபன் - நகுடனென்றுபேர்பெற்ற வேற்படையையுடைய மன்னவனாகி, நாகருக்கு அரசு ஆய் - தேவலோகத்தார்க்கும் அரசனாகி, மகுடம் ஏந்திய குரிசில் - தேவேந்திரன் முடியைத்தரித்த சிறந்தோன்,- ஆயுவின் திரு மைந்தன் - அந்த ஆயுவின் சிறந்த புதல்வனாவன்; (எ -று.) ஆயுவின் புத்திரன் நஹுஷன் இவன் பற்றற்றுநின்று தவத்தைச்செய்து நூறு அசுவமேதயாகமுஞ் செய்த முற்றியதனால், தேவேந்திரபதவி பெற்று வானவர்க்கரசனுமாயினா னென்பதாம். சேம்பிலையில் நீர் இருந்தும் சேம்பு அதில் ஒட்டின்றியிருப்பது போல இந்நகுஷனிடத்து முகுடம் சேனை முதலியன இருந்தும் அவற்றிற் பற்றுவையாதிருந்தமை முன்னிரண்டடிகளில் விளக்கப்பட்டது. முகுடம்- கிரீடத்தினோருறுப்பு. அது - ஆகுபெயரால், கிரீடத்தைக் காட்டிற்று.சகுடம் - சேம்பு:அதன் இலைக்கு முதலாகுபெயர். நராதிபன் - தீர்க்கசந்திபெற்றவடமொழித்தொடர். (22) 15.- நகுடன் அகத்தியசாபத்தாற் சர்ப்பமாதல். புரந்தரன்பதம்பெற்றபின் புலோமசைமுயக்கிற்கு இரந்துமற்றவளேவலின் யானமுற்றேறி வரந்தருங்குறுமுனிமுனி வாய்மையான்மருண்டு நிரந்தரம்பெரும்புயங்கமா னவனுமந்நிருபன். |
|