13.-பாதாளஞ்சென்ற வீமனை அங்குள்ள நாகங்கள் கடித்தல். ஓதவான்கடலிடை யொளித்தவெற்பெனப் பாதலந்தனில்விழு பவனசூனுவை வேதனைப்படுத்தினர் விடங்கொள்கூரெயிற்று ஆதவப்பணமணி யரவினஞ்சிறார் |
(இ-ள்.) ஓதம் வான் கடலிடை ஒளித்த வெற்பு என - அலைகளையுடைய பெரியகடலிலே மறைந்த மலைபோல, பாதலந்தனில் விழு - (கங்காநதியிலுள்ள பிலத்துவாரத்தின் வழியாய்ப்) பாதாளலோகத்திற் போய்விழுந்த, பவன சூனுவை - வாயுகுமாரனான வீமனை,- (அங்குள்ள), விடம்கொள் கூர் எயிறு - விஷம்பொருந்திய கூரிய பற்களையும், ஆதவம் பணம் மணி - சூரியகாந்திபோல விளங்குகிற படத்திலுள்ள மாணிக்கத்தையுமுடைய, அரவின் அம்சிறார் - நாகர்களின் அழகிய பிள்ளைகள் [பாம்புக்குட்டிகள்], வேதனைப்படுத்தினர் - கடித்துவருத்தினார்கள்; (எ-று.) ஆதவம்= ஆதபம்; வெயில். நாகராவார் - படமும் வாலுமுடையராய் மனிதவடிவமுந் தெய்வப்பிறப்புமானதொரு சர்ப்பசாதியார். (287) 14.-அப்பாம்புகளின் விஷத்தால் முந்தின விஷம் நீங்குதல். முற்படுகொடுவிட முளையெயிற்றுகும் பிற்படுவிடத்தினாற் பெயர்ந்துபோதலின் மற்படுபுயகிரி வடப்பிணிப்புமற்று அற்படுமிருள்புல ரலரியாயினான். |
(இ-ள்.) முன் படு கொடு விடம் - (வீமனுடம்பில்) முன்பு பொருந்திய கொடிய (உணவின்) விஷம், முளை எயிறு உகும் பின் படு விடத்தினால் - (சிறுநாகங்களின்) முளைத்த பற்களினின்று சொரிந்த பிந்தின விஷத்தால், பெயர்ந்து போதலின் - நீங்கிப் போனதனால்,- (வீமன்),- மல் படு புயம் கிரி வடம் பிணிப்புஉம் அற்று- வலிமை மிக்க மலைகள்போன்ற (தனது) தோள்களிற் கயிற்றாற்கட்டிய கட்டும் (தனது உடல்வலிமையால்) துணிபடப்பெற்று, அல் படும் இருள் புலர் அலரி ஆயினான் - இரவில் உண்டாகும் இருளைக்கெடச்செய்த சூரியன் போன்றான்; (எ-று.) கொடுவிடமும் கடும்பிணிப்பும் அற விளங்கிய வீமனுக்கு, இருளறவிளங்கிய சூரியனை உவமைகூறினார். ஸ்தாவரவிஷமான நஞ்சுணவிற்குச் சங்கம விஷமான அரவினங்கடித்துஏற்றிய விஷம் மாற்றாயிற்றென்க. புயகிரி - முன்பின்னாகத்தொக்க உவமத்தொகை. 'முனையெயிற்று' என்றும் பாடம். (288) 15.- வீமனுக்கு வாசுகி அன்போடு அமிருதமூட்டுதல். வாசுகிதனக்கிவன் வரவுணர்த்தலும் ஆசுகன்மதலையென் றறிந்துமற்றவன் தேசுறுபொற்குடந் தெரிந்துபத்தினால் ஏசறுமமுதெலா மினிதினூட்டினான். |
|