அந்தி மீன் அனையவள் அருளின் வாழ்த்த - பதிவிரதாதருமத்தால் அருந்ததியையொத்த அக்குந்திதேவி அருளோடு(தன்னை) வாழ்த்த, முன்பு போல் வளரும் நாளில்ஏ - முன்போல வளர்கின்ற காலத்திலே, - (எ-று.)- "கிருபனென்றுளான் (29) "இவன் குருகுலருமாரரை சிலையும் வேலும் வாளமும் பயிற்றினான்" (30) என முடியும். (302) 29.- கிருபாசார்யனது வரலாறு. கோதமன்மகன்மகன் குனிவிலாதியாம் மேதகுபடைக்கலம் யாவும்வீறொடம் மாதவன்வயிற்பயில் வரதன்வன்றிறல் கேதமில்சிந்தையான் கிருபனென்றுளான். |
(இ-ள்.) கோதமகன் மகன் மகன் - கோதமமுனிவனது குமாரனாகிய சரத்துவான் என்னும் முனிவனதுபுத்திரன்,- குனிவில் ஆதி ஆம் - வளைக்கப்படுகின்ற வில் முதலாகிய, மே தகு படைக்கலம் யாஉம் - மேன்மைமிக்க ஆயுதங்களையெல்லாம், வீறொடு - மிக்க சிறப்போடு, அ மாவதன்வயின் பயில் - பெருந்தவமுடைய அச்சரத்துவந்த முனிவனிடத்துக் கற்றுத்தேர்ந்த, வரதன் - (தன்னை வேண்டினார்க்கு) வரம் அருளத்தக்க சிறப்புடையவனும், வல் திறல் - மிக்க வலிமையையும், கேதம் இல் சிந்தையான் - களங்கமில்லாதமனத்தையு முடையவனும் ஆகிய, கிருபன் என்று - கிருபாசாரியனென்று பெயர் கூறப்பட்டு, உளான் - (ஓர் அந்தணன்) உள்ளான்; (எ-று.) கோதமனென்னும் முனிவனது குமாரனும், தான்பிறந்த பொழுது அம்புகளுடனே பிறந்ததனால் 'சரத்வாந்' என்ற பெயர் பெற்றவனுமான (சரம் - அம்பு) முனிவன் இளமையில் வேதமோதுதலினும் வில்வித்தை தேர்தலில் மிக்க விருப்புற்று அதில் நன்குதேர்ந்து பின்பு பெருந்தவஞ்செய்துவருகையில், தனது தவத்தைக் கெடுத்தற்பொருட்டு இந்திரனா லேவப்பட்டுவந்த ஜாநபதீயென்னும் தேவகன்னிகையைக் கண்டு காமுற்றதனால், அவன்விருப்பத்திற்கு ஏற்ப அருகிலுள்ள நாணற்கட்டையில் ஓராண்மகவும் ஒருபெண்மகவும் உண்டாயின. தனது தவநிலை குலைந்ததற்குக்கழிவிரக்கங்கொண்ட அம்முனிவன் உடனே அக் குழந்தைகளையும் தனதுவில் அம்புகளையும் அங்கே விட்டிட்டு அப்பாற்சென்றான். பின்பு வேட்டைக்குச் சென்ற சந்தனுமகாராஜன் கதியற்றிருந்த அக்குழந்தைகளைக் கிருபையோடு எடுத்துவந்து வளர்த்ததனால், அவர்கட்கு முறையே கிருபனென்றும் கிருபியென்றும் பெயர்கள் உண்டாயின. பிறகு ஒருகால் அந்தச் சரத்வானென்ற முனிவன் அத்தினாபுரிக்குவந்து தன் மகனான கிருபனுக்கு வில்வித்தை முழுவதையும் கற்பித்துக் கொடுத்துச்சென்றா னாதலால், கிருபன் சிறந்த வில்லாசிரியனாய் அங்கு விளங்கின னென வரலாறு அறிக. கௌதமகுலத்தார் ஆதியில் க்ஷத்திரியசம்பந்தமுடையராதலால், க்ஷத்திரியத் தன்மையோடு கூடின பிராமணர்களா யிருந்தார்களாதலின், வில்முதலிய படைக்கலங்கட்கு உரியராயினரென அறிக. |