43. | மாவின்பாலேயன்றி மரபுக்குரியமைந்தன் ஆவின்பால்கண்டறியா னதனால்வருந்தியந்தக் கோவின்பாலெய்துதலுங் கோமான்யார்நீயென்ன நாவின்பாலானடுங்கி நானுன்னண்பனென்றேன். |
(இ-ள்.) மரபுக்கு உரிய மைந்தன் - (எனது) வமிசத்துக்கு உரிய அப்புதல்வன், மாவின் பால்ஏ அன்றி - மாப்பாலையே யல்லாமல், ஆவின் பால் கண்டு அறியான் - பசுவின்பாலைக் கண்டும் அறியான்: அதனால் - அந்தக்காரணத்தால், (நான்), வருந்தி - மனம்வருந்தி, அந்த கோவின்பால் எய்துதலும் - (ஒருபசுப்பெற்றுவரக்கருதி) அந்த யாகசேனராசனிடத்திற் சென்றவளவிலே, கோமான் - அவ் வரசன், யார் நீ என்ன - 'நீ யார்?' என்று (முகமறியாதவன் போல என்னை) வினவ,- (அதுகேட்டவுடனே), நடுங்கி - மிகக்கூசி, நாவின் பாலால் நான் உன் நண்பன் என்றேன்- (எனது) வாயால் 'நான் உன் சிநேகிதன்' என்று சொன்னேன்; (எ-று.) மாவின்பால் - மாவைக் கரைத்துக் காய்ச்சிப் பால்போலச் செய்த உணவு; ஒருவகைக் கஞ்சி: முதனூலிலும் 'பிஷ்டரஸம்' என்றே கூறப்பட்டிருக்கின்றது. 'நாவின்பாலால்' எனவேண்டாது கூறியது, என் நா இங்ஙன் எளிமை கூறுதற்கு உரியதன் றெனற்கு: இனி, நாவின்பாலால் நடுங்கி எனஎடுத்து, இங்ஙன் பேசின அவனது நாவின் செயலால் யான் நடுங்கி யெனவுமாம். (317) 44. | மன்னன்யானீமுனிவன் மரபாலெனக்குமுனக்கும் என்னநண்புண்டென்ன வேசிநகைசெய்திகழ்ந்தான் அன்னதுருபன்றன்னை யவையிலரசர்கேட்பச் சொன்னவாய்மைநீயே சோர்ந்தாயானோசோரேன். |
இதுவும் அடுத்த கவியும் - குளகம் (இ - ள்.) (அதுகேட்டு அந்தயாகசேனன் என்னை நோக்கி). 'மரபால் - சாதியினால், மன்னன் யான் - நானோ அரசன்: நீ முனிவன் - நீயோ அந்தணன்: எனக்குஉம் உனக்குஉம் என்ன நண்புஉண்டு - எனக்கும் உனக்கும் என்னசிநேகம் இருக்கிறது?' என்ன - என்றுசொல்லி, ஏசி - பழித்து, நகை செய்து - சிரித்துப் பரிகாசம் பண்ணி, இகழ்ந்தான் - அலட்சியஞ் செய்தான்: அன்ன துருபதன் தன்னை - அந்தத் துருபதராசனை நோக்கி, (நான்), அவையில் அரசர் கேட்ப - அவன் சபையிலுள்ள அரசர்களெல்லாங் கேட்கும்படி, 'சொன்ன வாய்மை நீஏ சேர்ந்தாய் - சொன்னவார்த்தையை நீயே தவறினாய்: யான்ஓ சோரேன் - நானோ தவறேன்; (எ-று.) - இச்செய்யுளில் 'துருபன் தன்னை' என்பதும், 'கேட்ப' என்பதும், அடுத்த செய்யுளில் வரும் 'என்றேன்' என்னும் முற்றைக் கொள்ளும். நீ முன்பு எனக்குப் பாதியரசுகொடுப்பதாக வாக்குத்தத்தஞ் செய்ததைத் தவறினையே யாயினும், நான் இப்பொழுது உன் விஷயமாகச் சொல்லும் சபதத்தைத் தவறாது நிறைவேற்றுவேன் என்பது, ஈற்றடியின் கருத்து: துருபதனென்பது, யாகசேனனுக்கு வழங்கும் வேறொருபெயர். துருபன் = துருபதன்: விகாரம். ஏ - பிரிநிலை. ஓ - தெரிநிலை. 'அன்ன நிருபன்' எனவும் பாடம். (318) |