பக்கம் எண் :

வாரணாவதச் சருக்கம்169

45.புகன்றபடிநீயாளும் புவியும்பாதிகொள்வேன்
இகன்றசமரிலுன்னை யிரதத்துடனேகவர்வேன்
அகன்றமெய்ம்மையுடையா யறிதியென்றேனென்று
சுகன்றன்ஞானம்பெற்ற துரோணன்சொல்லக்கேட்டான்.

     (இ -ள்.) அகன்ற மெய்ம்மை உடையாய் - நீங்கின உண்மை யுடையவனே!
புகன்ற படி- (நீ முன்பு எனக்குச்) சொன்னபடி, நீ ஆளும் புவிஉம் பாதி
கொள்வேன் - நீ அரசாளும் நாட்டிலும் பாதியைக் கைக்கொள்வேன்:
(அன்றியும்), இகன்ற சமரில் - பகைமை கொண்டுசெய்யும் போரில், உன்னை
இரதத்துடனே கவர்வேன் - உன்னைத் தேர்க்காலுடனே கட்டிக்
கைக்கொள்வேன்; அறிதி - (இதனை) அறிவாய், என்றேன் - என்று சொல்லிச்
சபதஞ்செய்தேன், என்று-, சுகன்தன் ஞானம் பெற்ற துரோணன் சொல்ல -
சுகமுனிவனுக்குஉள்ள தத்துவ ஞானம்போன்ற தத்துவஞானத்தைப்பெற்றவனான
துரோணாசாரியன் சொல்ல, கேட்டான் ;(எ-று.)

     அகன்றமெய்ம்மையுடையாய் என்றது, வடமொழிநடை; சத்தியத்தை
விட்டவனே யென்று கருத்து. துரோணன் தன் வரலாறு கூறும்முகத்தால், தான்
அந்நகரியிலிருக்க உடன்பட்டதைக் குறிப்பித்தானென்க. சுகன் -
வியாசமுனிவனது புத்திரன்: அவ்வியாசபகவானின்மேம்பட்டவைராக்கியத்தையும்
உண்மையுணர்வையும் உடையவன்; பகவானது அமிசமானவன்;
பரமபாகவதர்களில் ஒருவன்; சுகப்பிரஹ்மமென்று சிறப்பித்துக் கூறப்படுபவன்.
"சுகனிகர் துரோணனொடு" என்பார், மேற்பதின்மூன்றாம்போர்ச் சருக்கத்திலும்.     

46.-கௌரவ பாண்டவரை வீடுமன் துரோணனிடம்
ஒப்பித்தல்.

கேட்டவரசனழைக்கக் கிருபனுடன்வந்திறைஞ்சும்
பூட்டுவரிவிற்றடக்கைப் புதல்வர்புதல்வர்தம்மைக்
காட்டிநீயேயிவரைக் கடிதிற்படைமைக்கல்வி
மூட்டிநின்வஞ்சினமு முடித்தியென்றுமொழிந்தான்.

     (இ - ள்.) கேட்ட - (இங்ஙனந் துரோணன் சொல்லக்) கேட்ட, அரசன் -
வீடுமன், அழைக்க - வரவழைத்ததனால், கிருபனுடன் வந்து இறைஞ்சும் -
(ஆசிரியனாகிய) கிருபாசாரியனுடனே வந்து வணங்கின, பூட்டு வரி வில் தட கை
புதல்வர் புதல்வர்தம்மை - நாணேற்றிய கட்டமைந்த வில்லையேந்திய பெரிய
கையையுடைய தனது பேரப்பிள்ளைகளை, காட்டி - (அவ்வீடுமன்
துரோணனுக்குக்) காண்பித்து, 'நீயேஇவரை கடிதில் படைமை கல்வி மூட்டி -
(இனி) நீயே இவர்களுக்கு விரைவில் ஆயுதவித்தையைக் கற்றுக் கொடுத்து, நின்
வஞ்சினம்உம் முடித்தி - (இவர்களைக்கொண்டு) உன்சபதத்தையும்
முடித்துக்கொள்வாய்,' என்று மொழிந்தான் - என்ற சொன்னான்; (எ-று.)

     புதல்வர் புதல்வர் - தன் தம்பியாகிய விசித்திரவீரியனது குமாரர்களாகிய
திருதராட்டிரன் பாண்டுஎன்பவரது புத்திரர்கள். படைமை, 'மை' - பகுதிப்பொருள்
விகுதியாம். வஞ்சினம் - துருபதனரசிற் பாதிகொள்ளலும், அவனை உயிரோடு
கட்டிக்கொணர்தலும்.