(இ-ள்.) தேசிக ஈசன் அருளினால் வந்து - (அவ்வரங்கிற்குத் தலைவனாக விளங்கும்) குருசிரேஷ்டனான அந்தத் துரோணனது அனுமதிபெற்று (அதனால்) வந்து, சிந்தை அன்புடன் பணிந்து - (அவனை) மனப்பூர்வமான பக்தியோடு வணங்கி, வெம் சராசனம் வணக்கி - கொடிய வில்லை வளைத்து,- இந்திரன்குமாரன் முன் வீரவாளியால் யாது யாது இயற்றினான் அந்த அந்த நிலைஉம் ஏஉம் அவனின் விஞ்சல் ஆயினான் - இந்திரனது மகனான அருச்சுனன் முன்பு திறமையுடைய அம்புகளால் எந்தெந்தவகைத்தொழிலைச் செய்தானோ அததற்குஉரிய நிலையிலும் அந்தந்த அம்பைச் செலுத்துதலிலும் அவ்வருச்சுனனினும் மேம்படுதலை உடையவனானான்; (எ-று.) "அர்ச்சிதேந குருணாநுமோதிதோ - தாரயந் தநு ரதிஜ்யதாம் கதம் அத்புதம் வ்யதித யத்யத் அர்ஜு ந:- தத்த தப்யதிகம் ஆததாந ஸ:" என்ற பாலபாரதத்தை யொட்டி இப்போது கூறிய பொருளே யேற்றதாதலறிக. தேசிகன் -பரசுராமனென்பாருமுளர். 63.-அதுகண்டு அனைவரும்வியக்கத் துரியோதனன்களிக்க அருச்சுனன்நாணுதல். கணைகள்போயிலக்கடைந்தவுறுதிகண்டுகண்களித்து இணையில்வீரனென்றதன்றிருந்தராசமண்டலம் பிணையன்மாலைவிசயனண்ணல்பெற்றிபற்றிநாணினான் துணைவரோடுவரிகழற்சு யோதனன்களிக்கவே. |
(இ-ள்.) கணைகள் - (கர்ணனுடைய) பாணங்கள், போய் - சென்று, இலக்கு அடைந்த- (குறித்த) இலக்கில் தவறாதுபட்ட, உறுதி - திறத்தை கண்டு - பார்த்து,- அன்று இருந்த ராசமண்டலம் - அப்பொழுது (அச்சபையில்) இருந்த அரசர்களதுதிரள், கண்களித்து - கண்கள் களிப்பப்பெற்று, இணை இல் வீரன் என்றது- (அவனை) ஒப்பற்றவீரனென்று கொண்டாடிற்று: (அதனால்), வரி கழல் சுயோதனன் - கட்டிய வீரக்கழலையுடைய துரியோதனன், துணைவரோடு - (தனது) தம்பிமார்களுடனே, களிக்க - களிப்படைய,- பிணையல் மாலை விசயன் - பின்னல்மாலையைத் தரித்த அருச்சுனன், அண்ணல் பெற்றி பற்றி நாணினான் - பெருமையிற்சிறந்தவனான அக்கர்ணனது திறமையைக்குறித்து வெட்கமடைந்தான்; (எ-று.) "தம்மினுங், கற்றாரைநோக்கிக் கருத்தழிக கற்றவெல்லாம், எற்றேயிவர்க்கு நாமென்று" என்றபடி, வில்திறத்தில் தேர்ந்த அருச்சுனன் தன்னினும் மேம்பட்ட கர்ணனதுதிறத்தைக் கண்டு நாணங்கொண்டன னென்க. இலக்கு= லக்ஷ்யம். அண்ணல் - (தனது) தமையன் எனக்கொள்ளினுமாம். (337) 64.-கர்ணன் அருச்சுனனைத்தன்னோடு தொந்தயுத்தஞ் செய்யஅழைத்தல். மருவநின்றருக்கன்மைந்தன்வானநாடன்மகனைநாம் இருவருந்தனுக்கொள்போரியற்றவம்மினென்றலும் குருகுலந்தழைக்கவந்தகுமரனன்புகூரவே உருகிநன்றெனத்தழீஇயுகந்துளந்தருக்கினான். |
|