பக்கம் எண் :

வாரணாவதச் சருக்கம்187

71.-துரியோதனன் கர்ணனுக்கு அர்த்தாசனங்
கொடுத்தல்.

தானிருந்தவரிமுகஞ்செய் தாள்சுமந்ததவிசின்மேல்
ஊனிருந்தபடையினானை யுடனிருத்திவண்டுசூழ்
தேனிருந்தமாலைவாகு சிகரமீதுதெண்டிரைக்
கானிருந்தமண்டலங் கருத்தினாலிருத்தினான்.

     (இ-ள்.)(துரியோதனன்),- தான் இருந்த - தான் வீற்றிருந்த, அரிமுகம் செய்
தாள் சுமந்த தவிசின்மேல் - சிங்கத்தின் வடிவந் தோன்றச் சித்திரித்துச்
செய்யப்பட்ட கால்கள் சுமந்த பீடத்தின் மேல்[சிங்காதனத்தின்மீது], ஊன்
இருந்த படையினானை - (பகைவரது) தசைதோய்தற்குஉரிய (வேல் முதலிய)
ஆயுதங்களையுடைய கர்ணனை, உடன் இருத்தி - தன்னுடன் ஒருங்கு
வீற்றிருக்க வைத்து, - வண்டு சூழ் தேன் இருந்த மாலை வாகு சிகரம்மீது -
வண்டுகள் சூழுந் தேன்பொருந்திய மாலையை யணிந்த (அவனுடைய)
தோள்களாகிய மலையின்மேல், தெள் திரை கான் இருந்த மண்டலம் -
தெளிவான அலைகளின் தொகுதியையுடைய கடலின் நடுவிலேயுள்ளதான
பூமியின் பாரத்தை, கருத்தினால் - (தன்) மனக்கருத்தோடு இருத்தினான்-;
(எ -று.)

     தன் ஆசனத்தில் அர்த்தாசனமளித்து அதில் தன்னுடன் இருத்துதல்,
அரசர்செய்யும் ஒருபெருமரியாதை, தோள்வலிமையால் பெரிய இராச்சியத்தை
அரசாள வைத்தன னென்பது, பின்னிரண்டடியின் கருத்து. துரியோதனன்
கர்ணனுதவியைக்கொண்டு பின்பு பாண்டவரைவென்று
தனியரசாட்சிசெய்யலாமெனக் கருதினனென்பது விளங்க 'கருத்தினா
லிருத்தினான்' என்றார். இனி, இச்செய்யுளுக்கு - (துரியோதனன்) தானிருந்த
தவிசில் கர்ணனை உடன் இருத்திக் கௌரவித்து (அதனாற்) கடல்சூழ்ந்த
நிலவுலகத்து அரசாட்சிமுழுவதையும் தன்தோளில் இருப்பதாகக் கருதினான்
என்று பதவுரைகூறினும் அமையும். பாஹு சிகரம் - வடமொழித்தொடர்.
'தெண்டிரைக்கான் '- அன்மொழித்தொகையாய், கடலைக்குறித்தது.

72.- கர்ணனும் துரியோதனனுங் கூடிச் செருக்குறுதல்.

தவனன்மைந்தனுஞ்சுயோத னனுமிசைந்துதனதனும்
சிவனுமென்னநண்புகொண்டு திறலுடன்சிறந்துளார்
பவனனும்பர்நாயகன் பயந்தவீரரஞ்சவே
அவனியெங்குநமதெனக்கொள் பெருமிதத்தராயினார்.

     (இ-ள்.) தவனன் மைந்தன்உம் - சூரியன்மகனான கர்ணனும்,
சுயோதனன்உம் - துரியோதனனும்,- இசைந்து - கலந்து, தனதன் உம் சிவன்உம்
என்ன நண்புகொண்டு - குபேரனும் சிவபிரானும் போலச் சினேகங்கொண்டு,  -
திறலுடன் சிறந்துளார் - வலிமையிற் சிறந்தவர்களாய்,- பவனன் உம்பர்நாயகன்
பயந்த வீரர் அஞ்ச - வாயுவும் தேவேந்திரனும் பெற்ற வீரர்களாகிய வீமசேனனும்
அருச்சுனனும் அஞ்ச, அவனி எங்குஉம் நமது என கொள் பெருமிதத்தர் ஆயினார்
- பூமிமுழுவதும் இனி நம்முடையதேயென்று எண்ணிய செருக்கை
யுடையவராயினார்கள்; (எ-று.)