இவர்கள் செல்லுமுன்னே இவர்கள் சம்பந்தமான தூளியும் தொனியும் சென்று அவனுக்கு இடர்விளைத்தன எனச் சமத்காரந் தோன்றக் கூறினார். ஓளி - ஒழுங்கு; இனி, நீட்டல் விகாரமாக, ஒளியெனினுமாம். (350) 77.-அதனையுணர்ந்து யாகசேனன் போருக்கு வருதல். வளைத்தசேனையானைவாசி வாயினின்றுகுமுறவே உளைத்தெழுந்துமுழையைவிட் டுடன்றசிங்கவேறுபோல் திளைத்ததன்பதாதியோடு மோகயாகசேனனும் இளைத்தநெஞ்சனன்றிநீடு புரிசைவாயிலெய்தினான். |
(இ-ள்.) வளைத்த - (இங்ஙனம் மதிற்புறத்து) முற்றுகைசெய்த, சேனை - குருசேனையிலுள்ள, யானை வாசி - யானைகளும் குதிரைகளும், வாயில் நின்று - (யாகசேனநகரத்து) வெளிவாயிலில்நின்று, குமுற - ஆரவாரஞ்செய்ய,- உளைத்து - கர்ச்சித்துக்கொண்டு, முழையை விட்டு எழுந்து உடன்ற - (தான் இருக்கிற) மலைக்குகையை விட்டுப் புறப்பட்டுக் கோபித்துவருகிற, சிங்கம் ஏறுபோல் - ஆண்சிங்கம் போல, மோக யாகசேனன்உம் - மிக்க ஆசையையுடைய துருபதராசனும், இளைத்த நெஞ்சன் அன்றி - சோர்வடைந்த மனத்தை யுடையவ னாகாமல், திளைத்த தன்பதாதியோடு - நெருங்கிய தனது சேனையோடு, நீடு புரிசை வாயில் எய்தினான் - உயர்ந்த மதில்வாயிலை அடைந்தான்; (எ-று.) பதாதி - காலாட்படை; இங்கே, சேனையென்றமாத்திரமாய் நின்றது. கொடுப்பதாகச்சொன்ன அர்த்தராச்சியத்தைக்கெடாமல் அதில் ஆசை கொண்டதனால், 'மோகயாகசேனன்' என்றார். (351) 78.-சோமகரோடு கௌரவர்க்கும், யாகசேனனோடு அருச்சுனனுக்கும் போர் நிகழ்தல். சோமகர்க்குமுடுகுசேனை சூழவந்தகுருகுலக் கோமகர்க்கும்வெஞ்சமர் விளைந்ததாண்மைகூரவே பூமகற்குமிக்கமா முனிக்குவாய்மைபொய்த்தவம் மாமகற்கும்விசயனுக்கு மன்னுபோர்வயங்கவே. |
இதுவும் அடுத்த கவியும் - குளகம். (இ-ள்.) சோமகர்க்குஉம் - சோமககுலத்து அரசர்களுக்கும், முடுகுசேனை சூழவந்த குருகுலம் கோ மகர்க்குஉம் - விரைந்து நெருங்கிய சேனைகள் சூழ வந்த குருகுலவரசகுமாரர்களுக்கும், ஆண்மை கூர - வலிமைமிக, வெம் சமர் விளைந்தது - கொடிய போர் உண்டாயிற்று; பூமகற்குஉம் மிக்க மாமுனிக்கு - பிரமதேவனினும் மேம்பட்ட பெருமையையுடைய துரோணாசாரியனுக்கு, வாய்மை பொய்த்த - சொன்ன வாக்குத் தவறின, அ மா மகற்குஉம் - அந்தச் செல்வ மகனான யாகசேனனுக்கும், விசயனுக்குஉம் - அருச்சுனனுக்கும், மன்னு போர் வயங்க - பெரும்போர் மிக,- (எ-று.)- 'குமரர் நகரி நோக்கினார் ' என வருங்கவியோடு முடியும். பாஞ்சாலராசர்கள், சோமகனென்னும் அரசனது குலத்தவராதலால், சோமகரெனப்பட்டனர்; சோமகன் - துருபதனது பாட்டான். (352) |