தறுகட்குருவின்றலைதுணிக்கத் தகவோர் மகவுந் தனஞ்சயன்றோள் உறுகைக்கொருபூங்கன்னியையும் பெறுவான் வேண்டியுற்றிரந்தான். |
(இ-ள்.) மறுகில் - வீதிகளிலே, பணிலம் தவழ் - சங்குகள் தவழும்படியான,
பழனம் வளம் - கழனிகளின் நீர்வளத்தையுடைய, நாடு - பாஞ்சாலதேசத்தை,
உடையான் - உடையவனான யாகசேனன்,- தறுகண் குருவின் தலைதுணிக்க தக
- வன்கண்மையையுடைய துரோணாசாரியனது தலையை வெட்டுதற்குத்
தகுதியாக, ஓர்மகஉம் - ஓர் ஆண்பிள்ளையையும், தனஞ்சயன்தோள் உறுகைக்கு
(தக)- அருச்சுனன் தோள்களை அணைதற்குத் தகுதியாக, ஒரு பூ கன்னியைஉம்
- அழகிய ஒரு பெண்ணையும், பெறுவான் - பெற, வேண்டி - விரும்பி,- முறுகு
புரி வெம் கலைக்கோட்டு முனிஏ போலும் முனிவரரை- மிகவும் முறுக்குள்ள
அழகிய கலைமானினது கொம்பு போன்ற ஒரு கொம்பைத் தலையிலுடைய
ரிசியசிருங்கமுனிவனையே யொத்த சிறந்தமுனிவர்களை, உற்று - நாடியடைந்து,
எதிர்வணங்கி- (அவர்களை) எதிரிலே நமஸ்கரித்து, இரந்தான் - பிரார்த்தித்தான்;
தனது முகத்தின்மேலே மான்கொம்பு போன்ற கொம்பொன்றையுடைய
ஒருமுனிவர்க்கு, அக்காரணத்தால், வடமொழியில் ரிச்யச்ருங்கரென்றும், தமிழிற்
கலைக்கோட்டுமுனி யென்றும்பெயர்; அவர் - காசியபமுனிவனது குமாரர்களுள்
ஒருவராகிய விபாண்டகரென்பவரது குமாரர்; கல்விகேள்விகளிலும்
தவவொழுக்கத்திலும் வைராக்கியத்திலும் மிகச்சிறந்தவர்: கோசலதேசத்தில்
அயோத்தியாநகரத்தில் அறுபதினாயிரம் வருஷம் அரசாண்ட தசரதசக்கரவர்த்தி
புத்திரபாக்கியமின்றி வருந்தியபொழுது, தனது குலகுருவாகிய வசிஷ்டர்
சொன்னபடி அக்கலைக்கேட்டு முனிவரைக் கொண்டு அசுவமேதயாகம்
புத்திரகாமயாகமுஞ் செய்விக்க, அம்முனிவரருளால் சக்கரவத்திக்கு இராமபிரான்
முதலிய சிறந்த குமாரர் நால்வர்தோன்றின ரென்ற வரலாறு, இராமாயணத்திற்
பிரசித்தம். அம்முனிவர்போலவே உயர்ந்த மக்களை யாக மூலமாக
உண்டாக்கவல்ல மகாமுனிவர்களைநாடி வேண்டின
னென்பார், 'கலைக்கோட்டுமுனியேபோலுமுனிவரரை யுற்றிரந்தான்' என்றார்;
அம்முனிவர்கள் பெயர், அடுத்த கவியில் விளங்கும். 'மறுகிற்
பனிநித்திலந்தவழும் வளநாடு' என்றும் பாடம். (358)
85.- உபயாசனும் யாசனும் துருபதனுக்காக வேள்விசெய்தல்.
ஆறுமுகனைப்பயந்தநதி யலையாற்குளிர்வதொருகானில் ஈறிறவத்தோருபயாசன் யாசனெனும்பேரிருவோரும் கூறுமுறையிற்சடங்கியற்றிக் கோவின்வழக்கப்பெருவேள்வி நூறுமகத்தோனிகரரசை நோன்மைக்கிசையப்புரிவித்தார். |
(இ-ள்.) ஆறுமுகனை பயந்த நதி - ஆறுமுகங்களையுடைய சுப்பிரமணிய
மூர்த்தியைப் பெற்ற கங்காநதியினது, அலையால் - அலைகளினால், குளிர்வது -
குளிர்ச்சிபெறுவதான, ஒருகானில் - ஒரு காட்டில், ஈறுஇல் தவத்தோர் -
எல்லையில்லாத தவத்தைச் செய்ப