அருமையான அழகிய ஓர் பெண்ணும், கோகனகம்மீது எழுந்த பொன்போல்வாள் - செந்தாமரைமலரினின்று மேலெழுந்த திருமகளை யொப்பவளாய், பிறந்தாள் - தோன்றினாள்; (எ-று.) கோகநதமென்ற வடசொல் திரிந்தது; கோகம் - சக்கரவாகப் பறவைகள், நதம் - கூவியொலித்தற்கு இடமானது என்று பொருள்படும் . செல்வத்துக்குரிய தலைவியாதலாலும், பொன்னிறமுடைமையாலும், பெறுதற்கருமையாலும், பொன் என்று திருமகளுக்கு ஒரு பெயர். சுருவையினால் வழங்கு என்றும், நலத்தாற் பிறந்தாளென்றும் இயையும். (364) 91.- அப்பொழுது ஆகாயத்திலெழுந்த ஓர் அசரீரிவாக்கு. மண்மேலொருத்தியரக்கர்குலம் மாளப்பிறந்தாள்வாமனுதல் கண்மேலின்றுமிவள்பிறந்தாள் கழற்காவலர்தங்குலமுடிப்பான் எண்மேலென்கொலினியென்றாங் கெவருங்கேட்பவொருவார்த்தை விண்மேலெழுந்தவன்புரிந்த வேள்விக்களத்தினிடையம்மா. |
(இ-ள்.) 'ஒருத்தி - ஒருபெண், அரக்கர் குலம் மாள - இராக்கதர் குலம் அழியும்படி, மண்மேல் பிறந்தாள்- (முன்பு) பூமியினின்று தோன்றினாள்; இன்றுஉம் - இப்பொழுதும், இவள் - இப்பெண், கழல் காவலர்தம் குலம் முடிப்பான் - வீரக்கழலையணிந்த அரசர்களுடைய குலத்தை அழிக்கும்பொருட்டு, வாமன் நுதல் கண்மேல் - சிவபிரானது நெற்றிக்கண்ணாகிய அக்கினியினின்றும், பிறந்தாள்; இனி மேல் எண் என்கொல் - இனிமேல் ஆலோசனை யாதுஉளது?' என்று-, ஒரு வார்த்தை - ஓர் அசரீரிவாக்கு, ஆங்கு - அப்பொழுது, அவன் வேள்வி புரிந்த களத்தினிடை எவரும் கேட்ப - அந்தயாகசேனன் யாகஞ்செய்த சாலையிலுள்ள எல்லோரும் கேட்க, விண்மேல் எழுந்தது - ஆகாயத்தில் உண்டாயிற்று: அம்மா - ஆச்சரியம்! (எ-று.) சனகமகாராசா யாகஞ்செய்தற்பொருட்டுச் சாலையமைத்தற்காகக் கலப்பையைக்கொண்டு பூமியை உழுதபொழுது அவ்வுழு படைச்சாலினின்று பூமியில் தோன்றிய பெண்ணான சீதையால் ராக்ஷசகுலம் முழுவதும் நாசமாயிற்றென்பது, இராமாயணத்தில் பிரசித்தம். அங்ஙனமே, யாகாக்கினியில் தோன்றிய இந்தத் திரௌபதி ஒருசமயத்தில் துரியோதனனைப் பரிகசித்து இகழ்ச்சி தோன்றச் சிரித்ததனால் அவன்மனத்திற் பெருஞ்சினத்தைமூட்டி அதுகாரணமாக அவனால் சபையில் மானபங்கப்படுத்தப்பட்டுப் பின்பு அது நிமித்தமாகப் பாரதயுத்தத்தில் பல அரசர்களும் பந்துமித்திரபரி வாரங்களுடன் இறத்தற்கு மூலமாய் நிற்றல், பாரதத்தில் பிரசித்தம். 'இனிமேல் எண் என்கொல்' என்றது, இந்நிகழ்ச்சி எவராலுந் தடுத்தற்கரியதெனத் தேற்றக் கருத்தை விளக்கும். அம்மா - வியப்பிடைச்சொல். வாமன்-அழகியவனென்று பொருள்படும். வலக்கண் சூரியனும், இடக்கண் சந்திரனும், நெற்றிக்கண் அக்கினியுமாக இறைவனுக்குக் கண் மூன்றும் முச்சுடராதலால், நெருப்பை, 'வாமனுதற்கண்' என்றது. 'கண்மேனின்றும்' என்றும் பாடம். (365) |