தந்துரை புனைந்துரை பாயிரம்" என்றார், பவணந்திமுனிவரும். இந்தத் தற்சிறப்புப்பாயிரத்திற் கூறப்படும் விஷயம், கடவுள் வணக்கமும், நூல்நுதலும் பொருளுமாம்: இதனை, "தெய்வவணக்கமுஞ் செயப்படுபொருளும், எய்தவுரைப்பதுதற்சிறப்பாகும்" என்பதனாலறிக. 1. கடவுள் வாழ்த்து. நீடாழி யுலகத்து மறைநாலொ டைந்தென்று நிலைநிற்கவே வாடாத தவவாய்மை முனிராசன் மாபார தஞ்சொன்னநாள் ஏடாக வடமேரு வெற்பாக வங்கூரெ ழுத்தாணிதன் கோடாக வெழுதும்பி ரானைப் பணிந்தன்பு கூர்வாமரோ. |
(இதன் பொருள்.) நீடு ஆழி உலகத்து - பெரிய கடலாற் சூழப்பட்ட உலகத்திலே, 'மறை நாலொடு - நான்கு வேதங்களுடனே, ஐந்து- (இது) ஐந்தாவதுவேதமாகும், ' என்று நிலை நிற்க - என்று வழங்கும்படி நிலைத்து நிற்குமாறு, வாடாததவம் வாய்மை முனிராசன் மாபாரதம் சொன்ன - அழியாத தவத்தின்மெய்ம்மையையுடைய இருடியர்க்கு அரசனான வியாசமுனிவன் மகாபாரதத்தைச்சொல்லிவந்த, நாள் - காலத்தில்,- வடமேரு வெற்பு ஆக ஏடு ஆக -வடக்குத்திசையிலுள்ள மேருமலை முழுதும் (அந்நூலை) எழுதும் ஏடாகுமாறும், தன்கோடு அம் கூர்எழுத்து ஆணி ஆக - தன்னுடைய (வாயில் முளைத்துள்ள) தந்தமேஅழகிய கூரிய எழுத்தாணி யாகுமாறும், (அந்தத் தந்தத்தைப் பிடுங்கிக்கையிற்கொண்டு), எழுதும்- (மகாபாரதம் முழுவதையும்) எழுதின, பிரானை - விநாயகக்கடவுளை, பணிந்து - வணங்கி, அன்புகூர்வாம் - அன்புமிகுவாம்; (எ - று.) அரோ -ஈற்றசை. "பாரத: பஞ்சமோவேத:" என்பது காண்க. பிரமன்தோன்றி 'மகாபாரதத்தையெழுதுமாறு கணேசனை நினைப்பாய்' என்ன, வியாச முனிவன் அங்ஙனமே கணேசனைத் தியானித்துப் பாரதத்தை எழுதுமாறு வேண்டிக்கொள்ள, அவ்வேண்டுகோட்கு இணங்கி விநாயகக் கடவுள் எழுதினா னென அறிக. மகாபாரதத்தையெழுதின கடவுளாதல்பற்றி ஏற்புடைக் கடவுள் வணக்கமாக விநாயகரைக் கவி வணங்குகின்றாரென்க. வெற்புஆக என்ற இடத்து 'ஆக' என்பது -எல்லாம் என்ற பொருளைக் குறிப்பிக்கவந்தது: ஊராக அவனுக்குப்பகை என்றஇடத்துப்போல: இனி, வெற்பு ஏடாக, ஆகவம் கூர் தன் கோடு எழுத்தாணி ஆகஎன்று பிரித்து எடுத்து-போரில்மிக்க தன்னுடைய தந்தக் கொம்பு எழுத்தாணியாகஎன்று உரைப்பாருமுளர். மாபாரதம் சொன்ன நாள் எழுதும்பிரான் என்றுவிநாயகரைக் கூறியதனால், யான் தமிழ்ப்படுத்த இதனையும் இடையூறின்றி முடியுமாறுஅவன் அருள்வனென்ற கருத்துக் குறிப்பிக்கப்படும். 'மாமேரு' என்றும் பாடம்.சிலபிரதிகளில், இந்தச் செய்யுளும் அடுத்த செய்யுளும், இந்நூலாசிரியரின் குமாரர்பாடிய சிறப்புப் பாயிரத்திற் காணப்படுகின்றன. முதலிரண்டுகவிகள்- பெரும்பாலும் முதல் நான்கு சீர்கள் காய்ச்சீர்களும் ஈற்றுச்சீரொன்று கனிச்சீருமாகிவந்த கலிநிலைத்துறைகள். |