பக்கம் எண் :

200பாரதம்ஆதி பருவம்

     அரணி - தீக்கடைகோல்; அத்திக்கட்டை முதலிய சில. 'நெருப்பு
அரணியினின்று தோன்றியே அவ்வரணியை அழிக்கின்ற தன்றோ? என்ற
உபமானம், திட்டத்துய்மன் துரோணனிடத்தினின்று வில்வித்தை கற்றே பின்பு
அவனை அழிப்பவனாகிறான் என்ற உபமேயக் கருத்தை விளக்குதலால்,
பிறிதுமொழிதலென்னும் அணி. சிறப்புப் பொருளைப் பொதுப்பொருள்
சமர்த்திப்பதாக இல்லாமையால், இது, வேற்றுப்பொருள்வைப்பணியாகாது.
துரோணன் தனக்குத் திட்டத்துய்மனால் மரண மென்று தெரிந்தும், விதிப்பயன்
தவறாதென்பதை நோக்கியும், அவனுக்குத்தான் கல்வி கற்பித்துக்
கொடுக்கமாட்டே னென்றால் அவனுக்கு அஞ்சினானென்ற பழிமாத்திரமே
மிஞ்சுமென்று கருதியும் மனத்திற்களங்கமின்றி அவனுக்கு வில்வித்தை
முழுவதையுங் கற்பித்தன னென்க. 'கலைசொல்பவன்பால்' என்றும்பாடம். (367)

94.-திருதராட்டிரனும் விதுரனும் தருமனை இளவரசுக்கு உரியனென
மதித்தல்.   

இவ்வா றமைந்தாங் கைவருட னீரைம் பதின்மர் நனிவளர
மைவான் மீதிற் பல்கோடி மன்வந் திறைஞ்சிப் புடைசூழத்
தெவ்வா றியவெம் பெருஞ்சேனைத் திருதராட் டிரனுந் தம்பியுமற்
றொவ்வாரிவற்கென்று திட்டிரனை யொழுக்கத் தழகாலுட்கொண்டார்.

     (இ-ள்.) இ ஆறு அமைந்து - (யாகசேனனுடைய செயல்கள்) இங்ஙனம்
நிகழ,- ஆங்கு - அவ்விடத்தில் [அஸ்தினாபுரியில்], ஐவருடன் ஈர் ஐம் பதின்மர்
- பஞ்சபாண்டவர்களும் துரியோதனாதியர் நூற்றுவரும், நனி வளர - நன்றாய்ச்
செழித்து வளர்ந்துவர,- மைவான் மீனின் - கருநிறமுள்ள வானத்திற்
காணப்படும் நக்ஷத்திரங்கள் போல, பல்கோடி மன் - அநேக கோடிக்கணக்கான
அரசர்கள், வந்து இறைஞ்சி புடை சூழ - திரளாகவந்து வணங்கிப் பக்கங்களிற்
சூழ்ந்து நிற்க, தெவ் ஆறிய வெம் பெரு சேனை - பகைவர்கள்
அடங்குதற்குக்காரணமான கொடி பெரிய சேனையையுடைய, திருதராட்டிரனும்-,
தம்பிஉம்- அவன் தம்பியான விதுரனும், இவற்கு மற்று ஒவ்வார்என்று -
இவனுக்கு வேறு எவரும்ஒப்பாக மாட்டாரென்று, உதிட்டிரனை -
தருமபுத்திரனை, ஒழுக்கத்து அழகால் உள்கொண்டார் - (அவனது)
நல்லொழுக்கத்தின் அழகினால் மதித்தார்;

     அமைந்து - அமைய: எச்சத்திரபு. ஐவர், ஈரைப்பதின்மர் -
தொகைக்குறிப்பு. 'தெவ்வாற்றிய', 'திருதராட்டிரனுந்தந்தையும்' என்றபிரதிபேதம். (368)

                            வேறு.

95.- வீடுமன் தருமபுத்திரனை மதித்தல்.

பூதிந லந்திகழ் பூரு குலத்திற்
காதிப னாகி யனங்கனை வென்றோன்
நீதியி னாலு நிறைந்தன னுண்ணூல்
ஓதிய கேள்வி யுதிட்டிர னென்னா.