பகையொழிக்கக் கர்ணனும், கூடிக்குலாவி இன்புறத் தம்பியரும், சமயத்துக்கு ஏற்ற புத்தியுக்திகளைத் தந்திரமாகக்கூறச் சகுனியும் தக்கதுணையாயுண்டு என்றனனென்க. ஏ - தேற்றம். நான்காமடி - 'மகன்முதிரம்பிகைமகனொடு சொன்னான்' என்று சில ஏடுகளிற் காணப்படுகின்றது. முதல்= முதல்வன். (376) 103.- திருதராட்டிரன் மனம் மாறுபடுதல். பாதகனன்று பகர்ந்தமொழிக்கே பேதகனான பிதாமருளெய்தா மேதகவாழ்வுறு வில்விதுரற்கும் நாதகுநல்லுரை நதிமகனுக்கும். |
இதுமுதல் நான்கு கவிகள்-குளகம்
(இ-ள்.) பாதகன் - பாவியான துரியோதனன், அன்றுபகர்ந்த- அப்பொழுது சொன்ன, மொழிக்குஏ - சொல்லினாலே, பேதகன் ஆன - மனம்) மாறுபட்டவனாய்விட்ட, பிதா - அவன்தந்தையான திருதராட்டிரன்,- மருள் எய்தா- (இன்னது செய்வதென்று அறியாமல்)திகைப்படைந்து,- மேதக வாழ்வுறு வில் விதுரற்குஉம் - மேன்மைமிக வாழுகின்ற வில்வித்தையில்தேர்ந்த விதுரனுக்கும், நா தகு நல் உரை நதிமகனுக்குஉம் - நாவில் தக்க நல்லவார்த்தைகளையே யுடைய கங்காபுத்திரனான வீடுமனுக்கும்,- (எ-று.)- 106- ஆங் கவியில் வரும் 'கூறலும்' என்றதைக் கொள்ளும். இங்கிருந்து 125 - ஆம் பாடல்வரையில் பாலபாரதத்துக்கும் இதற்கும் வேறுபாடு காண்கின்றது: புரோசனனோடு ஆலோசித்த விவரமும், தபதி கூறிய செய்தியும் அதிற் குறிக்கப்படவில்லை. இவ்விடம், வியாசபாரதத்தைப் பெரும்பாலும் ஒட்டிக்கூறப்பட்டுள்ளது. மேதகு என்றும் பாடம். (377) 104.-இரண்டுகவிகள் - திருதராட்டிரன் விதுரனிடத்தும் வீடுமனிடத்தும் கூறும் வார்த்தை. ஈண்டினியென்செய்வ தெண்ணுமினிங்கன் பாண்டவரோடு பயின்றுறையாது தூண்டுபரித்துரி யோதனன்முதலோர் பூண்டனர்வெம்பகை வாழ்வுபொறாதார். |
(இ-ள்.) தூண்டு பரி துரியோதனன் முதலோர் - விரைவாகச் செலுத்தப்படுங் குதிரையையுடைய துரியோதனன் முதலிய என் பிள்ளைகள், இங்கன் - இங்கே, பாண்டவரோடு பயின்று உறையாது - பாண்டுகுமாரர்களோடு கலந்திராமல், வாழ்வு பொறாதார் - (அவர்களுடைய) செல்வவாழ்க்கையைப் பொறுக்கமாட்டாதவர்களாய், வெம் பகை பூண்டனர் - (அவர்களிடத்துக்) கொடிய பகைமையைக் கொண்டார்கள்; ஈண்டு இனி செய்வது என் - இங்கே இப்பொழுது (நாம்) செய்யவேண்டுவது யாது?; எண்ணுமின் - ஆலோசனை செய்யுங்கள்; (எ-று.)- வாழ்வு- பாண்டவரில் மூத்தவன் இளவரசனானமை. (378) |