பக்கம் எண் :

குருகுலச் சருக்கம்21

கொடுத்திட்டு, நீர் கொண்மின் - நீங்கள் கைக்கொள்ளுங்கள், ' என்ன -
என்றுவேண்ட,- மைந்தர் யாவர்உம் மறுத்திட- (பூருவை யொழிந்த மற்றைப்)
புதல்வர்யாவரும் (அவ்வேண்டுகோட்கு இசையாது) மறுத்துவிட,- பூரு -
பூருவென்பவன், அவன்தன் - அந்த யயாதியினுடைய, இந்தமூப்பினை - இந்த
முதுமைப்பருவத்தை, கவர்ந்து - பெற்றுக்கொண்டு, தன் இளமைஉம் ஈந்தான் -
தன்இளமைப் பருவத்தையும் (அந்தத் தந்தைக்குக்) கொடுத்தான்; (எ -று.)

     சுக்கிராசாரியர் சபித்தபோது யயாதிமன்னவன் சாபவிமோசனங்கேட்க,
அவர்வேண்டுமானால், இந்த ஜரையை[மூப்பை] அயலார்க்குப்
பண்டமாற்றுப்போற்கொடுக்குமாறு அருள்புரிந்தா ரென்று வியாசபாரதத்திற்
கூறியுள்ளது. உசனார் - 'ஆர்' உயர்த்தற் கண்வந்தது: சபித்திட்டமைபற்றிய
வெகுளியினால் இழித்தற்கண் வந்த தென்பாருமுளர். உசன் = உசநஸ்.     (31)

24.-பூருவினிளமைகொண்ட யயாதி, மனஞ்சலிக்கக் காமவின்ப
நுகர்ந்து பின் அந்தப்பூருவுக்கு இளமையைத் தந்திடுதல்

விந்தைபூமகண்முதலிய மடந்தையர்விரும்ப
முந்தைமாமணம்யாவையும் பலபகன்முற்றிச்
சிந்தையாதரந்தணிந்தபின் சிந்தனையின்றித்
தந்தைமீளவுமிளமைதன் றனயனுக்களித்தான்.

     (இ -ள்.) விந்தை - வீரலட்சுமியும்,பூமகள் - பூமிதேவியும், முதலிய-,
மடந்தையர்- பெண்டிரும், விரும்ப - விருப்பங்கொள்ள, (இளமையைப்பெற்று),
தந்தை - (பூருவின்)தகப்பனான அந்த யயாதி, முந்தை மா மணம் யாவைஉம் -
பழமையான(வாத்ஸ்யாயநம் என்ற நூலிற் கூறிய) சிறந்த
கரணங்களெல்லாவற்றையும், பல பகல்முற்றி - பல தினங்களில் நுகர்ந்து
திருத்தியடைந்து, சிந்தை ஆதரம் தணிந்த பின் -மனத்திலிருந்த இச்சை
அடங்கிய பின்பு, சிந்தனை இன்றி- (காமவின்பத்தில்) நசையற்று,
மீளஉம் - மீண்டும், இளமை - (தான் பூருவினிடத்துப்பெற்ற) இளமையை, தன்
தனயனுக்கு அளித்தான் - தன்புத்திரனாகிய அந்தப் பூருவுக்கே கொடுத்திட்டான்;
(எ-று)

     இளமைப்பருவம் வந்ததற்கு ஏற்ப, வீரம் முதலியனவும் உடம்பில்
தோன்றியதனால்,வீரத்துக்குஉரிய தேவதையாகிய வீரலட்சுமியும்,
வீரத்தினாற்காக்கப்படுபவளாகியபூமிதேவியும் ஆகிய இம்மடந்தையரும்
சன்மிட்டைபோலவே இந்த யயாதியினிடத்து.விருப்பங் கொள்ளலானார்களென்பது
முதலடியின் பொருள். வீரலட்சுமிவிந்தியமலையில் வசிப்பவளென்ற
காரணத்தினால் "விந்த்யவாஸிநீ" என்று ஒரு பெயர்பெறுவள்: அச்சொல் 'விந்தை'
என்று சிதைந்து வந்தது. மணமென்பது - மகளிரோடுகூடும் கல்வி வகைகளை:
அவை கரணங்க ளெனப்படும்.                                                 (32)

25.- பின்பு அரசவுரிமை முதலியவற்றை யயாதி பூருவுக்கே அளித்தல்.

இடியுமாறுகொணெடுமொழி யயாதியன்றிவற்கே
முடியுமாலையுமுத்தவெண் கவிகையுமுரசும்