(இ-ள்.) முக்கண் அற்புதன் முனிந்த ஊர் மூவரோடு ஒப்பான் - மூன்று திருக்கண்களையுடைய விசித்திரசக்தியுடையவனான சிவபிரான் கோபித்து எரித்த திரிபுரத்தில் (எரியாது தப்பிய) மூன்று அரசர்களோடு ஒப்பவனாகிற வீமசேனன், அ கணத்திடை - அந்தக் கணப்பொழுதிலே, அன்னையில் அணுகி - தாயினிடஞ்சென்று, ஆங்கு அவரை - அவ்விடத்திலுள்ள அவரெல்லோரையும், பொக்கென கொடு - விரைவாக உடன்கொண்டு, தொக்க சித்திரம் தூண் அடி துவாரம்ஏ வழி ஆ போய்-மிக்க சித்திரங்களையுடைய ஒரு தூணின் கீழுள்ள சுரங்கமே வழியாகச் சென்று, அகல் வனத்திடை புகுந்தான் - பரந்த இடிம்பவனத்திற் சேர்ந்தான்; (எ-று.) அவரைக் கொடுபோய் அகல்வனத்திடைப் புகுந்த விவரம் அடுத்த சருக்கத்தின் இரண்டாங்கவியில் விளங்கும். சிவபிரான் திரிபுரசங்காரஞ் செய்தபொழுது மற்றை யசுரர்கள்போலச் சினனது உபதேசத்தாலும் புத்தனது போதனையாலும் சிவத்துவேஷிகளாகாமல் சிவபக்திமுதிர்ந்திருந்ததனால் சுதர்மன் சுசீலன் சுபுத்தி என்ற மூன்று அசுரர்கள் அந்நகைத்தீக்கு இலக்காகாமல் தப்பிப் பிழைத்துச் சிவபிரானை வேண்டி அக்கடவுளருளால் அவனது கோயில்வாயில் காக்கும் பணியைப் பெற்றன ரென்று அறிக. "முப்புரங்களை முக்கணன் முனிந்தநாள் மூவரம்முழுத்தீயில், தப்பினருளார்" என்பர், மேல் காண்டவதகனச்சருக்கத்தும். அம்மூவர் திரிபுரத் தெரியினின்று தப்பியுய்ந்தமை போல, வீமன் அரக்கு மாளிகைத்தீயினின்று தப்பியுய்தலால், 'முக்கணற்புதன் முனிந்தவூர் மூவரோடொப்பான்' என்றார். (405) 132.-கண்டவர் பாண்டவரும் குந்தியும் எரிந்தன ரென்றல். புரிந்ததீயினைக் கண்ணினீரவித்திடப்புகுந்து பரிந்தநெஞ்சினைமீண்டு மப்பாவகன்சுடவே கரிந்தகோயிலிற் காரிருள்புலர்ந்தபின்கண்டோர் எரிந்துவீழ்ந்தனரைவரும்யாயு மீண்டென்றார். |
(இ-ள்.) கார் இருள் புலர்ந்த பின் - கரிய இருள் நீங்கிப் பொழுதுவிடிந்தபின்பு-, புரிந்த தீயினை கண்ணின் நீர் அவித்திட-பற்றிய நெருப்பை(த் தங்கள்) கண்களினின்று பெருகும் சோகநீர் தணிக்கும்படி, கரிந்தகோயிலில் புகுந்து - தீந்துபோன அம்மாளிகையினுள்ளே பிரவேசித்து,- மீண்டுஉம் - அங்ஙனம் அவிந்தபின்பும், அ பாவகன் - அந்த அரக்குமாளிகை நெருப்பு, பரிந்த நெஞ்சினை - (பாண்டவர்பக்கல்) அன்புகொண்ட (தங்கள்) மனத்தை, சுட - வருத்த, கண்டோர் - பார்த்தவர்களெல்லோரும்,- ஐவர்உம் யாய்உம் ஈண்டு எரிந்து வீழ்ந்தனர் என்றார்- 'பஞ்சபாண்டவர்களும் அவர்கள் தாயான குந்தியும் இங்கு எரிந்தொழிந்தனர்' என்றே சிந்தித்தார்கள்; (எ-று.) பொழுதுவிடிந்தபோது எரிந்துபோன மாளிகையை வந்து பார்க்கையில், ஊரவர்களின் கண்களினின்று பெருகிய நீரினால் அந் நெருப்பு அவிந்தது என்ற உயர்வுநவிற்சியணியால், பாண்டவர்கள் பக்கல் மிக்க அன்பு கொண்ட அந்நகரத்துச் சனங்களது |