சோகக்கண்ணீர்ப்பெருக்கின் மிகுதியைக்கூறியவாறு. வேடர் ஐவரும் அவர்கள் தாயும் எரிந்துகிடந்ததைக்கண்டு பாண்டவரைவரும் குந்தியும் எரிந்து கிடந்தன ரென்று கருதின ரென்க; அத்தன்மை, அடுத்த கவியில் விளங்கும். இறந்தனரென்ற பொருளில் 'வீழ்ந்தனர்' என்றது, மங்கலவழக்கு. இரண்டாம் அடிக்கு - நெருப்பு மாளிகையைச் சுட்டதன்றி, மீண்டும் இரங்கிய தம்மனத்தைச் சுட என்று நயந்தோன்றக்கூறினார். (406) 133.- இச்செய்தியறிந்து அரசர்கள்பலரும் வருந்துதல். விருத்தராய்விடமிடச்செலைவேடருந்தாயும் இருந்ததீமதியமைச்சனோ டிறந்தமையுணரார் திருந்துமாமதிப்பாண்டவர் செயலுமற்றறியார் வருந்தினார்தமதுயிரிழந் தெனப்புவிமன்னர். |
(இ-ள்.) புவி மன்னர் - பூமியிலுள்ள அரசர்கள்,- விருந்தர் ஆய் விடம் இட செல் - புதியவர்களாய் (த் துரியோதனன் கட்டளையின்படி பாண்டவர்க்கு) விஷங்கொடுக்க வந்த, ஐ வேடர்உம் - ஐந்து வேடர்களும், தாய்உம் - (அவர்கள்) தாயான வேட்டுவச்சியும், இருந்த தீ மதி அமைச்சனோடு - (முன்னமே அங்கு) இருந்த துர்ப்புத்தியுடைய மந்திரியாகிய புரோசனனுடனே, இறந்தமை - மரித்ததை. உணரார் - அறியாவர்களாய்,- மற்று -மற்றும், திருந்து மா மதி பாண்டவர் செயல்உம் அறியார் - திருத்தமுற்ற சிறந்த அறிவையுடைய பாண்டவரது செய்கையும் அறியாதவர்களாய், - தமது உயிர் இழந்து என வருந்தினார் - (பாண்டவரை யிழந்தோ மென்றே கருதியதனால்) தமது உயிரை யிழந்தாற்போல வருந்தினார்கள்; பாண்டவர்க்கு விஷங்கலந்த தேனைக் கொடுத்துக் கொல்லும் படி துரியோதனனால் அனுப்பப்பட்ட ஐந்து வேடர்களும் அவர்கள் தாயும் அன்று அங்கு வந்திருந்து தீயின்வாய்ப்பட்டு இறந்தன ரென்பதை இதனால் அறிக. விருந்தர் = விருந்தினர். மற்று - வினை மாற்றுமாம். பாண்டவர்செயல் - அரக்குமாயிகையைத் தீக்கொளுவித் தப்பிச்சென்று உய்ந்தமை (407) 134. இச்செய்தியறிந்த முனிவர்கள் முதலியோர் வருத்தம். போதுபட்டிருள் புகுந்தொளி போனவானகம்போன் மாதுபட்டபார்மடந்தைதன் மதிமுகமழுங்கத் தீதுபட்டதுகுருகுலச் செல்வமென்றிரங்கி ஏதுபட்டனமுனிவரர் முதலினோரிதயம். |
(இ-ள்.) முனிவரர் முதலினோர் இதயம் - சிறந்த இருடிகள் முதலானவர்களுடைய மனங்கள், 'போது பட்டு - பொழுது சாய [சூரியன் அஸ்தமிக்க], இருள் புகுந்து - இருள் வர, ஒளி போன - ஒளி நீங்கிய, வான் அகம் போல்-ஆகாயம்போல, மாது பட்ட பார் மடந்தை தன் மதி முகம் மழுங்க - அழகுபொருந்திய பூமிதேவியினது சந்திரன்போன்ற முகம் ஒளிமழுங்கும்படி, குருகுலம் செல்வம் தீதுபட்டது - குருகுலத்தினது செல்வம் பழுதுபட்டது,' என்று-, இரங்கி - விசனமுற்று, ஏது பட்டன - என்ன பாடுபட்டன! (எ-று.) |