நான்காவது வேத்திரகீயச்சருக்கம். வேத்திரகீய மென்னும் இடத்தில் நிகழ்ந்த செய்கையைச் சொல்லும் சருக்கமென்றுபொருள், பாண்டவரும் குந்தியும் இடிம்பவனஞ் சார்ந்ததும், அங்குத் தம்மைக்கொல்லும்படி இடிம்பனென்னும் பேரரக்கனால் அனுப்பப்பட்ட இடிம்பி வந்து வீமனைக் கண்டு காமுற்று ஆசைவார்த்தைபேசியதும், அதுகண்டுசினந்து வந்து பொருத இடிம்பனை வீமன் கொன்றதும், பின்பு தாயின் நியமனப்படி வீமன் இடிம்பியை மணந்ததும், வியாசமுனிவர் வந்து பாண்டவர்க்கு இதோபதேசஞ்செய்ததும், இடிம்பி கடோற்கசனென்னுங் குமாரனைப் பெற்றதும், பாண்டவர் வேத்திரகீயஞ் சார்ந்து ஓர் அந்தணன்மனையில் வசிக்கையில் அவ்வூரவர்க்கு இடையூறு இயற்றிவந்த பகனென்னும் அரக்கனை வீமன் போர் செய்து கொன்றொழித்ததும், இதிற் கூறப்படும். 1.-தெய்வவணக்கம்: கவிக்கூற்று, சீத நாண்மலர்க் கோயின் மேவுசெந் திருவி னாயகன் றேவ நாயகன் வேத நாயகன் பூத நாயகன் விரத நாயகன் விபுத நாயகன் போத காதிபன் முதலை வாயிடைப் பொறைத ளர்ந்துமுன் பொதுவிலே[நினைத்து ஆதி மூலமே யென்ன முன்வரு மாதி நாயக னடிவ ணங்குவாம். |
(இ-ள்.) சீதம் - குளிர்ச்சியுள்ள, நாள் புதிய [அன்றுமலர்ந்த], மலர் - தாமரைமலராகிய, கோஇல் - சிறந்த இடத்தில், மேவு - வீற்றிருக்கிற, செம் திருவின் - செம்மையுடைய இலக்குமிக்கு, நாயகன் - தலைவனும், தேவ(ர்) நாயகன் - தேவர்கட்குத் தலைவனும், வேதம் நாயகன் - வேதங்களுக்குத் தலைவனும,் பூதம் நாயகன் - பிரபஞ்சத்துப் பொருள்களுக்கெல்லாம் தலைவனும், விரதம் நாயகன் - விரதங்கட்குத் தலைவனும், விபுத(ர்) நாயகன் - விசேஷபுத்தியுடைய முனிவர்க்குத் தலைவனும், முன் - முன்பு, போதக அதிபன் - கஜேந்திரராழ்வான், முதலை வாயிடை - முதலையின்வாயிலே யகப்பட்டு, பொறை தளர்ந்து - வலிமைகுன்றி, நினைந்து - தியானித்து, பொதுவில் ஆதிமூலமே என்ன - பொதுப்பட 'ஆதிமூலமே!' என்று கூவியழைக்க, முன் வரும் - அந்த (யானையின்)முன்னே எழுந்தருளி யருள்செய்த,ஆதி நாயகன்- (எல்லா வுயிர்கட்கும்) முதல்தலைவனுமாகிய திருமாலினது, அடி - திருவடிகளை, வணங்குவாம் - நமஸ்கரிப்போம்; (எ-று.) விரதநாயகன் - விரதானுட்டானஞ் செய்வார்க்கு அவ்விரதங்கட்கு ஏற்றபடி அருள்செய்யுந் தலைவ னென்க. சீவகசிந்தாமணியில் "யானையு ளரசன்" என்றார்போல, 'போதகாதிபன்' என உயர்திணைவாய்ப்பாட்டாற் கூறினார்; இது, சிறப்புப்பற்றிவந்த திணைவழுவமைதி: சிறந்ததை அரசனென்றல், மரபு. ஆதிமூலம் - முதற்பொருள்களுக்கெல்லாம் முதற்பொருள். இதுமுதல் பதினைந்துகவிகள் - பெரும்பாலும்இரண்டு நான்கு ஆறாஞ்சீர்கள் விளச்சீர்களும், மற்றையவை மாச்சீர்களுமாகிவந்த எண்சீராசிரியவிருத்தங்கள். (411) |