பக்கம் எண் :

வேத்திரகீயச் சருக்கம்227

கொண்ட, அடல் புலி பிணவு - வலிமையையுடைய ஒரு பெண்புலி, அன்பினில்
கலையை நயப்பதுஏ - ஓர் ஆண்மானை அன்பினால் விரும்புவதா! பேதை -
அறிவில்லாதவளே! மானுடன் பேசுகிற்பதுஏ - (அரக்கியாகிய உன்னோடு) ஒரு
மனிதன் பேசுவதா? (எ-று.)

     முன்னிரண்டடிகட்கு ஏற்ப அடற்புலிப்பிணவைக்கலை நயப்பதே என்ற
இடத்து உருபுபிரித்துக்கூட்டப்பட்டது:எடுத்துக் காட்டுவமையணி. ஏகாரங்கள்
நான்கும் - வினாவகையால், வியப்பையும் தகுதியின்மையையும்விளக்கும்.
'உணவினாசையாற்கொல்ல வந்த நீ' என்றதனால் - நீ மானுடராற்சேர்த்துக்
கொள்ளத்தக்கவளல்லையென்றும், 'கங்குல்வாணர்தங் கடனிறப்பதே' என்றதனால்
இப்போது அரக்கராலும் பஹிஷ்காரஞ்செய்யத்தக்கவளானா யென்றும் அரக்கியை
மருட்டியவாறு. கங்குல்வாணர் - இரவில் மிக்கவலிமையுடையவராய்த் திரிபவர்:
அரக்கர்க்கு வடமொழியில் 'நிசாசரர்' என ஒருபெயர் வழங்குதல் காண்க. இங்கே
'கங்குல் வாணர் கடன்' என்றது, மனிதரை உணவாகக்கொள்ளுதலை. பிணவு -
பெண்மைப்பெயர்; இது, பிணா என்பதன் விகாரம்.                    (421)

12.- இதுவும் அது: வீமனை நோக்கிய வீரவாதம்.

வாரடாவுனக்கியாதுதானர்தம் மகளடுக்குமோவானமாதர்
                                          தோள்,
சேரடாமலைந்துயிரைமெய்யினை தின்றுதேவரூர்சேருவிப்பன்
                                           யான்,
போரடாதுனோடாளியேறுபுன் பூஞைதன்னுடன்பொர
                                   நினைக்குமோ,
பாரடாவெனாண்மையையரக்கர்கைப் பட்டபோதில்யார்பாரில்
                                        வைகினார்.

     (இ-ள்.) வார் அடா - அடேஎ! (போருக்கு) வா; உனக்கு-, யாது தானர்தம்
மகள் - இராக்கதப்பெண், அடுக்கும்ஓ - தகுவளோ? யான்-, மலைந்து -
போர்செய்தழித்து, மெய்யினை தின்று - (உன்) உடம்பைத் தின்று, உயிரை -
(உன்) உயிரை, தேவர் ஊர் சேருவிப்பன் - தேவலோகத்திற் செலுத்துவேன்:
(அப்பொழுது அங்கு), வானம் மாதர் தோள் சேர் அடா - (உனக்கு உரியராகுந்)
தெய்வ மகளிரது தோளைத் தழுவடா; உனோடு போர் அடாது - உன்னுடன்
போர்செய்தல் (எனக்குத்) தகாது: ஆளி ஏறு புல் பூஞைதன்னுடன் பொர
நினைக்கும்ஓ - ஆண்சிங்கம் எளிய பூனையுடனே போர் செய்ய நினைக்குமோ?
என் ஆண்மையை பார் அடா - என்னுடைய வீரத்தைப்பாரடா; அரக்கர்
கைபட்ட போதில் யார் பாரில் வைகினார் - இராக்கதரது கையில்
அகப்பட்டபொழுது பூமியில் உயிருடன் இருந்தவர் ஆர்? [எவருமில்லை];
(எ-று.)

     மூன்றாமடியில் எடுத்துக்காட்டுவமையணியும், நான்காமடியில்
வேற்றுப்பொருள்வைப்பணியும் காண்க. போரிற் புறங்கொடாது இறந்தவர்
வீரசுவர்க்கமடைந்து தேவமாதரைக் சேர்வரென்பது நூற்றுணிபு. வா  அடா
என்பது எதுகைநோக்கி இடையில் ரகர மெய்விரிந்து 'வாரடா' என நின்றது.
அடா - இகழ்ச்சிவிளக்கும் இடைச்சொல்; முன்னிலையாண்பால் விளியடையாய்
வரும்; இதன் பெண்பால் - 'அடி'. யாதுதாநர்-வடசொல். யாதுவென்னும்
ஒருபெயரையுடையவரென்று உறுப்புப் பொருள்.                   (422)