13.-இதுவும் வருங் கவியும் - வீமனுக்கும் இடிம்பனுக்கும் நிகழ்ந்த போர் கூறும். என்றுசீறிமற்றிவனடுத்தல்கண் டிணையிலாவிறற்றுணைவர்நால்வரும், நின்றயாயுமற்றொருபுறத்திலே நிற்கமையல்கூர்நிருதவல்லியும், வென்றிநல்குமாவந்தவிந்தைபோல் விழிபரப்பமேல்வீமசேனனும், சென்றுகைகளாற்பற்கணாவுடன்சிதறவாயினிற்சென்றுகுத்தினான். |
(இ-ள்.) என்று - என்று சொல்லிக்கொண்டு, சீறி - கோபித்து, இவன் - இந்த இடிம்பன், அடுத்தல் - சமீபித்தலை, கண்டு-, இணை இலா விறல்துணைவர் நால்வர்உம் - ஒப்பில்லாத வலிமையையுடைய உடன் பிறந்தவர் [பாண்டவர்] நால்வரும், நின்ற யாய் உம் - (கலங்கி) நின்ற தாயும் [குந்தியும்], மற்று ஒரு புறத்திலே நிற்க வேறொரு பக்கத்திலே ஒதுங்கிநிற்க,-மையல் கூர் நிருத வல்லிஉம் - காம மயக்கம்மிக்க இராக்கதப்பெண்ணும் [இடிம்பியும்], வென்றி நல்கும் ஆ (று) வந்த விந்தைபோல்-(வீமனுக்கு) வெற்றியைக் கொடுக்கும்படி வந்த வீரலக்ஷ்மிபோல, விழி பரப்ப - கண்களைப் பரப்பிப் பார்த்துக்கொண்டுநிற்க,- வீமசேனனும்-, மேல் சென்று - (அவ்வரக்கனை) எதிர்த்துச் சென்று, பற்கள் நாவுடன் சிதற- (அவனுடைய) பற்கள் நாவோடு சிதறும்படி, கைகளால் வாயினில் சென்று குத்தினான் - (தன்னுடைய) கைகளால் (அவனுடைய) வாயிலே நெருங்கிக்குத்தினான்; (எ -று.) மற்று - அசை. வல்லி - பூங்கொடி; மகளுக்கு உவமவாகுபெயர். வீமனிடத்துக் காதல்கொண்ட இடிம்பை அப்பொழுது வீமன் இடிம்பனை வெல்ல வேண்டு மென்னுங் கருத்தோடு அவனது வெற்றியை எதிர்பார்த்து நின்றமையால், 'வென்றிநல்குமா வந்த விந்தைபோல் விழிபரப்ப' என்று குறித்தார்; தற்குறிப்பேற்றவணி. பழித்ததனால், வாயில் முதலி லடித்தான். (423) 14. | குத்தினானிவன் குணபவல்சிதன் கூர்நகக்கரங்கொண்டு வீமன்மேல், மொத்தினான் முனைந்திருவரும்பொறார் முரணுடன்சினம் மூளமூளவே, தத்தினார்பிடுங்கியமரங்களாற்சாடினார்புயச் சயிலமொன் றொடொன்று, ஒத்தினாரிரண்டம்புதங்கள்வா னுருமெறிந்ததொத் தோசைவிஞ்சவே. |
(இ-ள்.) இவன் - வீமன், குத்தினான்-;்குணபம் வல்சி - பிணங்களை உணவாக வுடைய [அரக்கனாகிய] இடிம்பன், தன் கூர் நகம் கரம்கொண்டு - கூரிய நகங்களையுடைய தன் கையால், வீமன்மேல் மொத்தினான் - வீமனுடம்பில் அடித்தான்; (இங்ஙனம்), இருவர்உம் - இவ்விரண்டுபேரும், பொறார் - மனம்பெறாதவர்களாய், முரனுடன் முனைந்து - வலிமையோடு முயன்று, சினம் மூள மூள - கோபம் மிக அதிகப்பட, தத்தினார்- பாய்ந்து தாக்கினார்கள்; பிடுங்கிய மரங்களால் சாடினார் - மரங்களைப் பெயர்த்தெடுத்து அவற்றைக்கொண்டு அடித்தார்கள்; இரண்டு அம்புதங்கள் வான்உரும் எறிந்தது ஒத்து -இரண்டுமேகங்கள் வானத்தில் இடியிடித்ததைப் போன்று, ஓசை - விஞ்ச - ஒலிமிக, புயம் சயிலம் ஒன்றொடு ஒன்று ஒத்தினார் - மலைகள் போன்ற தோள்களை ஒன்றோடொன்று (படத்) தாக்கினார்கள்; (எ-று.) |