பக்கம் எண் :

238பாரதம்ஆதி பருவம்

(தன்) தாயாகிய இடிம்பையுடன், பெற்ற பிள்ளை - அவள்பெற்ற மகனான
கடோற்கசன், ஏகினான் - (இடிம்பவனத்துக்குச்) சென்றான்;

     வீமன், இடிம்பையை மணக்கும்போது கூறிய வாக்குப்படியே மகன்
பிறந்தபின் அவள் அவனைவிட்டு நீங்கின ளென்பதை, முதனூலால் அறிக.
இங்கே, 'பிறையெயிற்றியாய்' என்றது, அவளது இயல்பாகிய அரக்கிவடிவத்தை.
'இறைவ' என்றும், 'இப்படி விடைதருக' என்றும் பாடமுண்டு.          (442)

33.- பாண்டவர் பிராமணவேடங்கொண்டு வேத்திரகீயஞ் சார்தல்.

சாத்திரமறைதெரி முனிவர்தன்மையின்
காத்திரிமாறியக் காவல்வேந்தரும்
கோத்திரஞ்சூத்திரங் குடியுரைத்துளார்
வேத்திரகீயமா நகரின்மேயினார்.

     (இ-ள்.) அ காவல் வேந்தர்உம் - (பூமிமுழுவதையுங்) காக்குந் தொழிலுக்கு
உரிய அரசர்களாகிய அந்தப்பாண்டவர்களும், சாத்திரம் மறை தெரி முனிவர்
தன்மையின் காத்திரம் மாறி - சாஸ்திரங்களையும் வேதங்களையும் அறிந்த
அந்தணர்களுடைய வேடமாக வடிவம்மாறி, கோத்திரம் சூத்திரம் குடி
உரைத்துளார்- (அவ்வேடத்திற்கு ஏற்றபடி) ஒரு கோத்திரத்தையும்
சூத்திரத்தையும் குடிப் பெயரையும் கற்பித்துச் சொல்லிக்கொண்டு, வேத்திரகீயம்
மா நகரில்-, மேயினார் - போய்ச் சேர்ந்தார்கள்; (எ-று.)

     வேத்திரகீயநகரத்திற் சேர்ந்தாரென்று பாலபாரதமும் கூறும். பாண்டவர்
சேர்ந்தநகரம் ஏகசக்கரநகரமென்பதும், அங்கு இவர்களுறைந்தஇடம்
வேத்திரகீயமெனப்படுமென்பதும் வியாசபாரதத்தாற் பெறப்படும். ஆகவே,
வேத்திரகீயமா நகரம் என்பதற்கு - வேத்திரகீயம் என்ற இடத்தைத் தன்னிற்
கொண்ட ஏகசக்கரநகரமெனப் பொருள்காணலாம். சாஸ்திரம் - தருக்கம்
வியாகரணம் வேதாந்தம் முதலியன. கோத்திரம் - பாரத்வாஜம், ஆத்ரேயம்
போல்வன. சூத்திரம் - ஆபஸ்தம்பம், ஆச்வலாயநம் போல்வன. குடிப்பெயர்
ஏற்றபடி  கண்டுகொள்க.                                        (443)

34.- அவர்கள்வரவுக்கு அவ்வூரந்தணர் மகிழ்தல்.

அந்தணரைவரும் யாயுமந்நகர்
வந்துழியதிதியர் வரவுகாண்டலும்
முந்துபுமுந்துபு முகமன்கூறினார்
செந்தழல்வேள்விகூ ராதிதேவரே.

     (இ-ள்.) அந்தணர் ஐவர்உம் - பிரமணராகிய பாண்டவர் ஐந்துபேரும்,
யாய்உம் - அவர்கள் தாயும், அ நகர் வந்த உழி - அந்த நகரத்திற்கு வந்த
பொழுது,- அதிதியர் வரவு காண்டலும் - அந்த விருந்தினர்களுடைய
வருகையைக் கண்டவளவிலே, செம் தழல் வேள்வி கூர் ஆதிதேவர் -
செந்நிறமான அக்கினியினிடத்து யாகஞ் செய்தலில் மிக்கவர்களான [சிறந்த]
பிராமணர்கள், முந்துபு முந்துபு முகமன் கூறினார் - ஒருவரினும் ஒருவர்
முற்பட்டு எதிர்கொண்டு வந்து உபசாரவார்த்தை சொன்னார்கள்; (எ-று.)