தவனின் முதிர்தருமுனியும்வழுவறு தனதிலறனுடைவனிதையும் துவனியறமனமகிழ்வொடினிதறு சுவைகொளமுதடுதொழிலராய். |
(இ-ள்.) அவனை - அப்புதல்வனை, இடு பலி அருளுக -
(அவ்வரக்கனுக்கு) இடவேண்டிய நரபலியாகச் செலுத்துவையாக, என - என்று,
மொழிஅளவில் - (குந்தி) சொன்னவளவில்,- மறலிஉம் உளைவு உற சிவனை
வழிபடு மகவை அருளிய செனக செனனியர் நிகர் என - யமனும் வருந்தும்படி
சிவபிரானைப் பூசித்த (மார்க்கண்டேயனென்ற) குமாரனைப் பெற்ற தந்தையும்
தாயும் போல, தவனில் முதிர் தரு முனிஉம்வழு அறு தனது இல் அறன்உடை
வனிதைஉம் - தவவொழுக்கத்தில் முதிர்ந்த (அவ்வீட்டுக்குஉடையவனான)
அந்தணனும் தவறில்லாத அவனது இல்லறவாழ்க்கையையுடைய மனைவியும்,
மனம் மகிழ்வொடு - மனமகிழ்ச்சிகொண்டவர்களாய், துவனி அற - (அழுகை)
ஒலி நீங்க, அறு சுவை கொள் அமுது இனிது அடு தொழிலர்ஆய் -
ஆறுவகைஉருசியும்பொருந்திய உணவை இனிமையாய்ச் சமைக்குந்தொழிலை
யுடையவராக,- (எ-று.)-"பண்டி கெழுமிய பண்டமே" என வருங் கவியோடு
முடியும். ஆய் - ஆக என்ற எச்சத்தின் திரிபு.
'மறலியு முளைவறச் சிவனை வழிபடு மகவு' என்பததிற் குறித்த கதை:-
மிருகண்டுமுனிவனது தவப்பயனால் பதினாறுபிராயமே யுடையவனாகச் சிவபிரான்
வரமளிக்கப் பிறந்த மார்க்கண்டேயன் இடைவிடாது சிவபூசனை செய்துகொண்டு
வளர்ந்து வருகையில், பதினாறுபிராயம் முற்று மளவிலே மாதாபிதாக்கள் 'இனி
இவனுக்கு யமனால் இறுதிநேருமே!' என்று மிகக்கலங்கிநிற்க,
அந்தமார்க்கண்டேயன் சிவபூசை செய்கையில் கூற்றுவன் வந்து காலபாசத்தாற்
கட்டியிழுக்க, அவன் அப்பொழுது பரமசிவனைச் சரணமடைய, அப்பெருமான்
யமனைக் காலால் உதைத்துத்தள்ளி முனிமகனுக்கு என்றும் பதினாறாகத்
தீர்க்காயுசு கொடுத்தருளினனென்பது. அக்குமரன் சிவானுக்கிரகத்தால்
ஊழ்வினையையும் கடந்து உய்வு பெற்றதனால், அத்தாய்தந்தையர் துயரம் நீங்கி
மிகவும் மனமகிழ்வுற்றார்.
மறல் - கொடுமை; அதனையுடையவன் - மறலி. ஜநகஜநநீ என்ற
வடசொற்கள் - தமிழில் சனக சனனி எனத் திரிந்து, மோனைப்
பொருத்தத்திற்காக 'செனக செனனி' என எகரம் பெற்றன. இல்லறம் - 'இலறம்'
எனச் சந்தவின்பம் நோக்கித் தொகுத்தல் விகாரப்பட்டது. இச்செய்யுள் -
குறுஞ்சீர்வண்ண முடையது; அதாவது - குற்றெழுத்துப்பயில்வது. 38,39,40,
இச்செய்யுகளிலும் இதுகாண்க. இதற்குச் சந்தக்குழிப்பு 38- ஆங் கவிக்குக்
கூறியவாறே கொள்க.
48.- அப்பொழுது சமைக்கப்பட்ட உணவின் மிகுதி.