கழல் - கால்களின், உதையினால் - உதையால்,- வாள் நிருதன் - கொடிய அவ்வரக்கன், விலா ஒடிந்து - விலாப்புறம்முறிந்து, தடமார்பு ஒடிந்து - பரந்தமார்புமுறிந்து, மிடல் வெரின் ஒடிந்து - வலிமையையுடைய முதுகு முறிந்து, படு வெம் பிணம் புலால் அளைந்த இரு கவுள் ஒடிந்து - உயிரற்ற பயங்கரமான பிணங்களின் தசை பொருந்திய இரண்டு கன்னங்களும் முறிந்து, பொரு புயம்ஒடிந்து - போர்செய்கிற தோளும் ஒடிந்து, ஒத்த கடைவாய் நிலா எழும் கொடிய எயிறு ஒடிந்து,- (தம்மில் ஒன்றோடொன்று) ஒத்த கடைவாய்களில் வெள்ளொளி விளங்குகிற கோரதந்தங்கள் முறிந்து, செயல் இன்றி நிற்க - ஒருசெயலுமில்லாமல் நிற்க,- (எ-று.)- 'விழுத்தி' என வருங் கவியோடு தொடரும். 'விலாஒடிந்து ... நிருதன் நிற்க' - சினைவினை முதல்வினை கொண்டு முடிந்தது. உலாவரும் = உலாவும்; வா - துணைவினை: 'உலாவிவரும்' என்பது விகாரப்பட்டதெனினுமாம். விலா - வயிற்றின்பக்கம். 'வெரிந்', 'புலாலளைந்த விருகை யொடிந்து ', 'கடை பொய்த்தவாய்' என்றும் பாடம். (471) 62.- பகனைக் கொன்று வீமன் ஊருக்கு மீளுதல். உண்டியற்றயரும்யாதுதானனடி யுண்டுமெய்த்தளர்வொழிந்தபின் மண்டியிட்டெதிர்விழுத்திமார்பினிப மத்தகத்திடைமடங்கலின் திண்டிறற்பெருமிடற்றைவன்பினொடுதிருகிவீசியொருசெங்கையால் பண்டியிற்கடிதினிட்டுமாருதி புகுந்தனன்பழையபதியிலே. |
(இ-ள்.) உண்டி அற்று அயரும் யாது தானன் - உணவில்லாமற் சோரும் அரக்கனாகிய பகன், அடி உண்டு - (இவ்வாறு வீமனது) காலடி [உதை] பட்டு, மெய் தளர்வு ஒழிந்த பின் - உடம்பின் சோர்வு நீங்கின பின்பு, மாருதி - வாயுகுமாரனான வீமன், இபம் மத்தகத்திடை மடங்கலின் - யானையின் தலையில் சிங்கம் (பாய்தல்) போல, எதிர் விழுத்தி மார்பின் மண்டி இட்டு - (அவனை) எதிர்த்துக் கீழே தள்ளி அவன் மார்பின்மேல் மண்டியிட்டு உட்கார்ந்துகொண்டு, ஒரு செம் கையால்- (தனது) சிவந்த ஒருகையினால், திண் திறல் பெரு மிடற்றை வன்பினொடு திருகி வீசி - மிக்கவலிமையையுடைய (அவனது) பெரிய கழுத்தை வலிமையோடு திருகியெறிந்து, கடிதின் பண்டியில் இட்டு - (அவனுடைய உடம்பை) விரைவாகப் பண்டியிலே போகட்டு, பழைய பதியில் புகுந்தனன் - பழமையான அவ்வேத்திரகீயநகரத்துக்குத் திரும்பிவந்தான்; (எ-று.) உணவில்லாததனாலேயே சோர்வுற்ற அவ்வரக்கன் அதன்மேல் உதையும்பட்டுத் தளர்ந்து நிற்கிற நிலையில் அவனை மேலுந்தாக்கி வதைத்தல் நீதியன் றென்று வீமன் சிறிதுபொழுது போரொழிந்து நின்று, அவன்சோர்வு தீர்ந்த பின்னரே மீண்டும் எதிர்த்தன னென்க. மண்டியிடுதல் - இருகால் முடக்கிநிற்கும் நிலை. வேத்திரகீயநகரத்திலுள்ளார் பார்த்துத் துன்பம்நீங்கி மனம்மகிழ்தற்பொருட்டு அவ்வரக்கனுடலைப் பண்டியிலிட்டுக் கொணர்பவனானான். எதிர் = எதிர்த்து: வினைப்பகுதியே வினையெச்சப்பொருள்தந்தது; இனி, எதிரிலே என்றும் பொருள்கொள்ளலாம். அடியுண்டு என்ற விடத்து 'உதையுண்டு' என்றும் பாடமுண்டு. (472) |