பக்கம் எண் :

256பாரதம்ஆதி பருவம்

63.-வீமன்மங்களஸ்நாநஞ்செய்தலும்,
சூரியன்அஸ்தமித்தலும்.

ஏகசக்கரவனத்திருந்ததிறல் யாதுதானனையிமைப்பினில்
சாகமுட்டியினடர்த்துமாமுனிவர் தம்பதிப்புறனடுத்ததோர்
வேகரிக்கடுவனத்திலிட்டுமல ரோடைமூழ்கவிறல்வீமனும்
மோகரித்தவுணரைத்தடிந்துகடன் முளரிநாயகனுமூழ்கினான்.

     (இ-ள்.) விறல் வீமன்உம் - வலிமையையுடைய வீமனும், ஏக சக்கரம்
வனத்து இருந்த திறல் யாதுதானனை - ஏகசக்கரமென்னும் பெயரையுடைய
காட்டிலிருந்த வலிமையையுடைய அரக்கனாகிய பகனை, இமைப்பினில் -
ஒருமாத்திரைப் பொழுதிலே [மிக விரைவிலே], சாக இறக்கும்படி, முட்டியின்
அடர்த்து - முஷ்டியுத்தஞ்செய்து கொன்று, (பின்பு அவனுடலை), மா முனிவர்தம்
பதி புறன் அடுத்தது வே கரி கடு ஓர் வனத்தில் இட்டு - சிறந்த அந்தணர்கள்
வசிக்கிற அந்த வேத்திரகீயநகரத்தின் வெளிப்புறத்தைச் சார்ந்ததான
(பிணங்கள்) வெந்த கரிகளையுடைய கொடிய ஒரு காட்டிலே [மயானத்திலே]
போகட்டு, மலர் ஓடை மூழ்க - பூக்களையுடைய ஒரு நீரோடையிலே
ஸ்நாநஞ்செய்ய,- முளரி நாயகன்உம் - தாமரைக்குத் தலைவனான சூரியனும்,
அவுணரை மோகரித்து தடிந்து - (மந்தேகரென்ற) அசுரர்களை
வீராவேசங்கொண்டு கொன்று, கடல் மூழ்கினான் - (மேல்) கடலில்
நீராடினான் [அஸ்தமித்தனனென்றபடி]; (எ-று.)

     வீமன் அரக்கனைக் கொன்றுஓடையில்நீராடுமளவிலே, சூரியன்
அஸ்தமித்தானென்றவாறு. வீமன் பகனைப்பொருது கொன்ற பொழுது அசுத்தி
நீங்கும்பொருட்டு ஏற்றநீரில் மூழ்கியமைபோல, சூரியன் அசுரர்களைப்பொருது
கொன்றபொழுது அசுத்தி நீங்கும் பொருட்டு நீரில்முழ்குவானாயின னென
உவமையணி தொனித்தலை யுணர்க. முன்பு வீமனுக்கு உதயசூரியனையும் [செ-
19], உச்சசூரியனையும் [செ-57] உவமைகூறியவர், இங்கு அஸ்தமனசூரியனை
உவமை கூறினார். ஏகசக்கரவனம் - ஏகசக்கர நகரத்தைச்சார்ந்தவனமென்ன
இடமுண்டு.

     மந்தேகாருணம் என்னும் தீவில் வாழும் மந்தேகர் என்னும் அரக்கர்கள்
உக்கிரமான தவத்தைச் செய்து பிராமனிடத்து வரம் பெற்று அதனாற் செருக்கி
எப்பொழுதுஞ் சூரியனை வளைந்து எதிர்த்துத்தடுத்துப்
போர்செய்கின்றனரென்றும், அந்தணர்கள் சந்தியாகாலங்களில் மந்திரபூர்வமாகக்
கையில் எடுத்துவிடும் அருக்கிய தீர்த்தங்கள் வச்சிராயுதம்போலாகி
அவர்கள்மேல் விழுந்துஅவர்களை அப்பால்தள்ளிச் சூரியனது சஞ்சாரத்துக்குத்
தடையில்லாதபடி செய்கின்றனவென்றும், அப்படி அந்தணர்கள்செலுத்தும்
அருக்கியத்தின் ஆற்றலால் சூரியமண்டலத்தினிடையே ஒரு செந்தீ எழுந்து
சொலிக்க அத்தீயில் அவ்வரக்கர்கள் விளக்கில் விட்டில்போலவிழுந்து
ஒழிகின்றனரென்றும் நூல்கள்கூறும். 'முளரிநாயகன் அவுணரை மோகரித்துத்
தடிந்து' - அந்தணர்கள் அருக்கியப்பிரதானஞ்செய்ய அதனால்
தன்னிடம்எழுந்துவிளங்கும் சுவாலையைக்கொண்டு சூரியன் அவ்வரக்கர்களை
அழித்து என்க.