கண்ணன்றன்னையவமதித்துக் கழறும்புன்சொற்கார்முகத்தைத் திண்ணென்கருத்தானீங்கிவன்காண் சேதிப்பெருமான்சிசுபாலன். |
(இ-ள்.) மின்னே-மின்னல்போன்றவளே! இவன்-,- தண் அம்துளவோன் தனக்குஇளவல் - குளிர்ந்த அழகிய திருத்துழாய்மாலையையுடைய கண்ணபிரானுக்குத்தம்பியாகிய, சாத்தகி என்று எண்ணும் போசகுலம் தலைவன் - சாத்தகியென்று(எவராலும்) நன்குமதிக்கப்படுகிற போசகுலத்துக்குத்தலைவன், காண் - அறிவாய்:ஈங்கு - (அவனுக்கு) இப்பால், எவர்உம் சூழ இருக்கின்றான்- பல அரசர்கள்(தன்னைச்) சுற்றிலும் இருக்க இடையில் வீற்றிருக்கின்றவனாகிய, இவன்,- கண்ணன்தன்னை அவமதித்து கழறும் - கிருஷ்ணனை அவமதித்துச் சொல்லுகிற, புன்சொல் - இழிவான சொற்களாகிய, கார்முகத்தை - வில்லை, திண்ணென் - வலியதென்று எண்ணுகிற, கருத்தான் - எண்ணத்தையுடையவனும், சேதி பெருமான் - சேதி தேசத்து அரசனுமாகிய, சிசுபாலன்-; காண் - அறிவாய்; (எ-று.) சாத்தகி - ஸாத்யகி: சத்தியகனது புத்திரன். யதுகுலத்தரசர்களுள் வசுதேவனுக்கு உடன்பிறந்தமுறையாகிறவனும் சினியென்பானது மகனுமான சத்தியகனது குமாரனான சாத்தகி, பிராயத்திற் கண்ணனினும் இளையவனாதலால், கண்ணனுக்குத் தம்பி முறையாவன். இவனுக்குச் சிலதலைமுறைகளுக்குமுன் இக்குலத்தில் தோன்றின மகாபோசனென்கிற அரசன் அதிக தருமிஷ்டனாயிருந்தனால்அவன்வமிசத்திற்பிறந்தவர்கள் போசரென்று பிரசித்திபெறுவர். பாலபாரதத்தில் பகதத்தனைக்கூறியபின் சிசுபாலன் கூறப்பட்டுள்ளான். சிசுபாலன் - வசுதேவனது உடன்பிறந்தவளும், சேதி தேசத்து அரசனாகிய தமகோஷனுக்குப் பத்தினியுமாகிய சுருதசி-வை யென்பவளுடையமகன்.- திருமாலினதுவைகுண்டலோகத்தின் துவராபாலகராகிய ஜயவிஜயரென்பவர் ஒருசமயத்தில் ஆங்குஉட்செல்லவந்த சநகாதியோகிகளைத் தடுத்தமைபற்றி அவர்கள் வெகுண்டுகூறியசாபமொழியால் மூன்றுபிறப்புத் திருமாலுக்குப் பகைவராய்ப் பூமியிற் பிறப்பெடுத்துஅத்திருமாலின் கையாலிறப்பவராகி முதலில் இரணிய இரணியாக்ஷராகவும், அதன்பின்இராவண கும்பகர்ணராகவும், அப்பால் சிசுபால தந்தவக்கிரராகவும் தோன்றினரெனஅறிக: இச்சிசுபாலன், பிறந்தபொழுது, நான்கு கைகளையும் மூன்றுகண்களையுமுடையவனாயிருந்தான்; அப்பொழுது ஆகாயவாணி 'யார் இவனைத் தொடுகையில்இவனது கைகளிரண்டும், மூன்றாம்விழியும் மறைகின்றனவோ, அவனால் இவனுக்குமரணம்' என்று கூறிற்று; அவ்வாறே பலரும் தொடுகையில் மறைபடாத கைகளும்கண்ணும், கண்ணபிரான் தொட்ட வளவிலே மறைபட்டன; அதனால், இவனைக்கொல்பவன் கண்ணனேயென்று அறிந்த இவன் தாய் 'யாதுசெய்யினும் என்மகனைக் கொல்லலாகாது ' என்று கண்ணனை வேண்ட, அந்த அத்தையின் நன்மொழிக்கு ஒருசார் இணங்கிய கண்ணன் 'இவன் எனக்கு நூறுபிழை செய்யுமளவும் இவன்பிழையை நான்பொறுப்பேன்' |