சராசந்தன் வெகு கோபங்கொண்டு கிருஷ்ணனை வமிசத்தோடு கொல்ல வேண்டுமென்று அநேகம்பெருஞ்சேனையோடு எதிர்த்து வந்து கண்ணன் எழுந்தருளியிருந்த மதுராபுரியை வளைத்துப் பெரும் போர்செய்து பலராமகிருஷ்ணர்களாலும் யாதவசேனையாலும் தானும் தன்சேனையும் வெல்லப்பட்டவனாய் ஓடிப்போயினான்; இங்ஙனம் பதினெட்டுமுறை மீண்டும் வருவதுபொருவது தோற்பது ஓடுவதாய்ப் பங்கப்பட்டபின் கோபாவேசமுற்றுப் பலமானபெருஞ்சேனையைத் திரட்டிக்கொண்டு ஒருகால் போருக்கு வந்தான். அச்சமயத்திலேயே, யவன தேசாதிபதியான காலயவனன் பலபராக்கிரமங்களாற் செருக்குக்கொண்டு கிருஷ்ணபல ராமர்களையே தான் எதிர்த்தற்குஏற்ற பலவான்களென நாரத முனிவரால் அறிந்து சேனையைச் சித்தஞ்செய்துகொண்டு போரின் பொருட்டு மதுரைக்கு வந்தான். அப்பொழுது கண்ணன் ஏக காலத்தில் இருதிறத்தாரோடு பெரும்போர்செய்தால் யாதவ சேனைக்கு நாசமுண்டாகக்கூடுமென்று நினைத்துச் சமுத்திரராசனைப் பன்னிரண்டுயோசனை தூரம் இடம்விடும்படி கேட்டு மேல்கடலிடையே பகைவர் உட்புகவொண்ணாதபடி மிகவும் பாதுகாவலுடையதான துவாரகாநகரத்தை நிருமித்து மதுரையிலிருந்த சனங்களை யெல்லாம் அந்நகரத்திற்கொண்டுசேர்த்துத் தானும் துவாரகைசேர்ந்து அங்கேயே எழுந்தருளியிருந்தன னென்பது வரலாறு. கண்ணன் இங்ஙன் செய்தது, பகைக்குப்பயந்து பங்கப்பட்டதாகவே முடிதலால், சராசந்தனுக்கு அஞ்சிக் கண்ணன் மதுரைவிட்டுத் துவாரகைக்கு ஓடின னென்று ஓரபவாதம் பரவியது. மது என்னும் அரசனால் முதலிற் சீர்திருத்தி யாளப்பட்டதாலும், கண்ணுக்கு இனியதாயிருத்தலாலும், மதுரா என்று பெயர். இங்குக் குறித்தது,வடமதுரை.த்வாரவதீ என்ற வடசொல், துவாரபதி யெனவிகாரப்பட்டது. (துவரை எனவும் திரியும்.) இவையிரண்டும் முத்திதரும் நகரினுட்சேர்ந்தவை. 'போர்வந்தெதிர்த்தால்' என்பதும், 'துவாரகையினில்' என்பதும் பாடம். (518) 44.-இது, பகதத்தனைக் குறித்தது. பனைக்கைப்பிறைவெண்கோட்டயிரா வதமேபோலும்பகட்டிலிவன் வினைக்கட்புகுந்தாலெதிர்நின்று வேறாரிவனைவெல்கிற்பார் முனைக்கட்செங்கட்டீயுமிழு முகத்தான்மாதேபகதத்தன் தனக்குத்தானேநிகரென்னத் தருக்கொடீண்டேயிருக்கின்றான். | (இ - ள்.) மாதே-அழகியபெண்ணே! தனக்கு தான்ஏ நிகர் என்ன - தனக்குத்தானே ஒப்புமை (தனக்கு ஒப்பாவர் யாருமில்லை) என்று எண்ணி, தருக்கொடு - செருக்குடனே, ஈண்டுஏ இருக்கின்றான் - இங்கே இருக்கின்றவன், பகதத்தன்-; முனைக்கண்-போர்க்களத்திலே, செம் கண் தீ உமிழும் - (மிக்க கோபத்தாற்) சிவந்தகண்களினின்றும் நெருப்புப்பொறியைச் சொரிகின்ற, முகத்தான்- முகத்தையுடையவனாகிய, இவன்-, பனை கை - பனைமரம்போன்ற துதிக்கையையும், பிறை வெள் கோடு - பிறைச்சந்திரன் போன்ற |