39.- அந்தக் கங்கா நதிப்பெண் சந்தனுவைக்கண்டு தன் துயர்நீங்குதல். போற்றியகுரிசின்மெய் புளகமெய்தவே ஏற்றியவிழியின ளிளகுநெஞ்சினள் சாற்றயமலரயன் சாபமிவ்வழித் தோற்றியதெனவுறு துயரநீங்கினாள். |
(இ - ள்.) போற்றிய - (அந்தக்கங்காநதிப்பெண்ணைப்) புகழ்ந்து கூறின, குரிசில்- ஆண்களிற்சிறந்தவனான சந்தனுராசனுடைய, மெய் - உடம்பானது, புளகம் எய்த -மயிர்க்கூச்சையடைய, ஏற்றிய- செலுத்திய, விழியினள் - கண்களையுடையவளும்,இளகும் நெஞ்சினள்- (அந்தச்சந்தனுராசனிடத்துக்) குழைந்தநெஞ்சையுடையவளுமாகி,- மலர் அயன் சாற்றிய சாபம்- (திருமாலின் உந்திக்)கமலத்தில் வீற்றிருக்கின்ற பிரமதேவன் கூறிய சாபமொழி, இவ்வழி - இவ்விடத்து,தோற்றியது - காண்கின்றது, என - என்று, உறு துயரம் - (தான்) கொண்டதுயரத்தை,நீங்கினாள்-; (எ -று.) வருணதேவனே பிரமனது சாபத்தினால் சந்தனுவாய்ப் பிறந்தானென்றும், தான் மணக்கவேண்டியவன் இவன்தான் என்றும் கங்காநதியின் பெண்தெய்வம் உணர்ந்தாளாதலால், அவனைக் கண்டதும் ஒருவாறு துயரம் நீங்கப் பெற்றாளென்க. சாபவரலாறுமேல் 56- ஆம் பாடல்முதல் கூறப்படும். அன்பு கொண்டு பார்த்தபார்வைபட்டதனால், மெய், புளகம் எய்துவதாயிற்று. மேற்புளக மெய்தவே என்றும்பாடம். (47) 40.- சந்தனுவும் அவளிடத்து ஆதரங் கூர்தல். பொங்கியமதர்விழிப் புரிவுமாதரந் தங்கியழுகிண்முலைத் தடமுநோக்கியே இங்கிதமுறைமைநன் றென்றுவேந்தனும் அங்கிதமுடனவட் கன்புகூரவே. |
(இ - ள்.) பொங்கிய - மிக்க, மதர் - களிப்பினையுடைய, விழி புரிவுஉம் - கண்ணின் செயலாகிய குறிப்புநோக்கமும், ஆதரம் தங்கிய - விருப்பந்தங்கப்பெற்ற, முகிழ் முலை தடம்உம் - (தாமரை) மொட்டையொத்த கொங்கைத் தலமும் [கொங்கைபூரித்தலையும்], நோக்கி - பார்த்து,- இங்கிதம் முறைமை நன்று - (என்விஷயத்து இவளுடைய) குறிப்புச்செயலின் முறை இனிதாக வுள்ளது, என்று- ,வேந்தன்உம்- சந்தனுராசனும், அங்கு - அப்போது, இதமுடன் - இதமாக, அவட்கு -அந்தக்கங்கையாள் திறத்தில், அன்பு கூர - அன்பு மிக,- (எ -று.) "உசாவினான்" எனஅடுத்த கவியோடு முடியும். இங்கிதம் - குறிப்பால் நிகழும் உறுப்பின் தொழில். (48) 41.- சந்தனு, 'நீ கன்னிகையாயின் என்னை மணக்கவிருப்ப முண்டோ,' என்று கங்கையாளைக் கேட்டல். கன்னியேயாமெனிற் கடிகொள்பான்மையை என்னின்மற்றுயர்ந்தவ ரில்லைமண்ணின்மேல் உன்னினைவுரையென வுசாவினானிகல் மின்னிலைவடிகொள்வேல் வேந்தர்வேந்தனே. |
|