பிடிக்க அடங்கா வில்லின் பருமைதனை குறித்து-ஒரு கையினாற் பிடித்தற்கு அடங்காத அவ்வில்லின் பருத்ததன்மையைக்கருதி, மனம் பதைக்க போனார்-(தம்தம்) மனம் திடுக்கிடத் திரும்பிப் போய்விட்டார்கள்; பலரும் - பல அரசர்கள், மலர் கை படுத்தி - தாமரைமலர்போன்ற (தம்) கைகளாற் பிடித்து, பெயர்க்க மாட்டார்- அசைக்கவும் மாட்டாதவர்களாய், பணை தோள் நொந்து- பருத்த தோள்கள் நோவப்பெற்று, அமையும் என பயந்து நின்றார்-இதுபோதுமென்று அஞ்சி நின்றார்கள்; பலரும் -பல அரசர்கள், எடுத்து-(அவ்வில்லைக் கையாற் பிடித்து) நிலைபெயரச்செய்து, (அவ்வளவிலே), அணி மணி நாண் பூட்ட வாரா பரிசொடு அதன் வலிமை பகர்ந்தே -அழகிய உறுதியான நாணியைப்பூட்ட (த் தம்மால்) இயலாத தன்மையையும் அவ்வில்லின்வலிமையையுஞ் சொல்லிக்கொண்ட, விட்டார் -(அம்முயற்சியைக்) கைவிட்டார்கள்; (எ- று.)-மற்று - அசை; வினைமாற்றுமாம். இதுமுதல் நான்கு கவிகளில், மேன்மேலுயர்ச்சியணி தோன்ற ஒன்றன்மேலொன்று உயர்த்திச்சொல்லிக்கொண்டு செல்கின்றனராதலால், அதற்குஇணங்க, 'எடுத்து' என்பதற்கு-நிலைபெயர்த்து என்று உரைத்து, அதனை 'பகர்ந்து' என்பதனோடு இயைக்க. இச்செய்யுளின் முதலடியிற் கூறியவர், செருக்கிச்சென்று அந்தவில்லின் நிலைமையைப் பார்த்தமாத்திரத்தோடுமீண்டவர்; இரண்டாமடியிற் கூறியவர், பார்த்துக் கையிற்பிடிக்கக்கருதி அதன் கைக்கடங்காப்பருமையைக்குறித்து மனம்வருந்தி மீண்டவர்; மூன்றாமடியிற் கூறியவர், கைகளாற்பிடித்து அதனை நிலைபெயர்க்க மாட்டாமல் தோள்நொந்து அஞ்சி மீண்டவர்; நான்காமடியிற் கூறியவர், கைகளாற்பிடித்து நிலைபெயர்த்துப் பின்பு யாதொன்றுஞ் செய்யமாட்டாமையால் தமதுவலிமையின்மையையும் அதன் வலிமையையுங் கூறிக்கொண்டே கைவிட்டவர் எனக்காண்க. (525) 51. | வல்லியம்போனடந்துதனுவிருகையாலும் வாரியெடுத் தெதிர்நிறுத்தி மல்லல்வாகுச்; சல்லியனுநாணேற்றமுடியாதந்தத்தனுவுடனேதன்றனுவுந்தகர வீழ்ந்தான், வில்லியரின்முன்னெண்ணத்தக்கவின்மை வேந்தடுபோர்ப்பகதத்தன்வில்வேதத்தில், சொல்லியவாறெடுத்தூன்றிமற்றைக்கையாற் றொல்வலிநாணியுமெடுத்துத்தோளுஞ் சோர்ந்தான். |
(இ-ள்.) மல்லல் - வலிமையைக்கொண்ட, வாகு-தோள்களையுடைய, சல்லியனும்-, வல்லியம் போல் நடந்து - புலிபோல (வலிமையோடு) சென்று, தனு- வில்லை, இருகையால்உம் வாரி எடுத்து எதிர் நிறுத்தி - இரண்டுகைகளாலும் வாரியெடுத்து (த் தன்) எதிரிலே நிற்கச்செய்து, (அதன்மேல்), நாண் ஏற்ற முடியாது -நாணியைப்பூட்ட முடியாமல், அந்த தனுவுடனே-அவ்வில்லுடனே, தன் தனுஉம் தகரவீழ்ந்தான் - தனது உடம்பு நொருங்கக் கீழ் வீழ்ந்திட்டான்; வில்லியரில் முன்எண்ணத்தக்க வின்மை - வில் வீரர்களுள் முதலில்வைத்து எண்ணத்தக்க வில்லின்திறமையையும், வேந்து அடு போர்-அரசர்களை அழிக்கின்ற போரையுமுடைய,பகதத்தன்-, வில் வேதத்தில் சொல்லிய ஆறு எடுத்துஊன்றி- தனுர்வேதத்திற்சொல்லியுள்ளபடி ஒருகையால் (வில்லை) எடுத்து |