யாகத்தையு முடைய அந்தணர்கள் (மகிழ்ந்து) ஆரவாரித்தார்கள்; வானோர் - தேவர்களும், வாசம் நறு மலர் சொரிந்து-பரிமளமுள்ள நல்ல பூக்களை மேற்சொரிந்து, ஆர்த்தார்-; (எ- று.)- 'தழல் வேள்வி' எனவும் பாடம். இலக்கைத் தங்கள் சாதியானொருவன் எய்துவீழ்த்தியப்பெருமையுற்றன னென்றுகருதியதனால், அந்தணர்கள் மகிழ்ந்து ஆரவாரித்தார்கள். நிலவுலகத்தில் விசேஷமான செய்கைகள் நடக்கும்போது அவற்றை மேலிருந்துகாணுதலும் மலர்மாரிசொரிதலும், தேவர்களியல்பு. இரட்டுறமொழிதல் என்னும் உத்தியால் முதலடிக்கு - கீழ் அரசர்கள் விற்கோடியை யெட்ட நாணியைக் கொண்டுசென்ற மார்பளவு சாணளவு விரலளவு மயிரளவு என்னும் எல்லைகளெல்லாம் கீழ்ப்பட்ட அவற்றின்மேல் உரிய இடத்தில்தான் நாணியைப்பூட்டியென்றும், அவ்வரசர்களுடைய நாணங்கள் இழிவு பெற (அவர்கட்கு மானபங்க முண்டாம்படி) தான் நாண்பூட்டி யென்றும் கருத்துக்கொள்க. அரசர்களால் எய்துவிழுத்த முடியாத இலக்கை இவன் எய்து வீழ்த்துமளவிலே அவர்களுடைய மனவெழுச்சி ஒழிதலால், 'இலக்கை யவையோர் தங்களூக்கமுடன் விழவெய்தான்' என்றார்; இது, புணர்நிலையணி. 'ஆர்த்தார்' என்ற சொல் ஒருபொருளிலேயே மீண்டுவந்தது. சொற்பொருட்பின்வருநிலையணி. (531) 57.-திரௌபதி அருச்சுனனுக்கு மணமாலை சூட்டுதல். தாஞ்சாரற்கரியதனுவளைத்தானென்று தரணிபர்தம்முகங்கருகத் தனுவினோடும், பூஞ்சாரன்மணிநீலகிரிபோனின்ற பூசுரனையிவனவனே போன்மென்றெண்ணிப், பாஞ்சாலர்பதிகன்னியிருதன் செங்கட்பங்கயத்தாற்பாங்காகப் பரிந்துநோக்கித், தேஞ்சாரநறுங்கழுநீர்ச்செய்யதாமஞ் செம்மணிகாலருவியெனச் சேர்த்தினாளே. |
(இ-ள்.) 'தாம் சாரற்கு அரிய - தாங்கள் அருகிற்செல்லுதற்கு அருமையான, தனு - வில்லை, வளைத்தான்-(இவன்) வளைத்திட்டான், ' என்று - என்ற காரணத்தால், தரணிபர் தம் முகம் கருக - அரசர்கள் தங்கள்முகம் கருகிவாட, தனுவினோடுஉம்- (கையிற்பிடித்த) வில்லுடனே, பூ சாரல் மணி நீலகிரி போல்நின்ற- பொலிவுள்ள சாரல்களையுடைய அழகிய நீலமலைபோல நின்ற, பூசுரனை - அந்த அந்தணனை, பாஞ்சாலர்பதி கன்னி - பாஞ்சாலதேசத்தார்க்கு அரசனாகிய துருபதனுடைய பெண்ணான திரௌபதி, இவன் அவன்ஏ போன்ம் என்று எண்ணி- `இவன் அந்த அருச்சுனனேயாவன்' என்று நினைத்து, இரு தனசெம் கண் பங்கய்ததால் பாங்கு ஆக பரிந்து நோக்கி - தாமரைமலர்போன்ற சிவந்ததனது இரண்டு கண்களாலும் நன்றாக அன்புகொண்டு பார்த்து, தேம் சாரம் நறு கழுநீர் செய்ய தாமம்-இனிய தேனையுடைய வாசனை வீசுகிற செங்கழுநீர் மலர்களால் தொடுக்கப்பட்ட சிவந்த மாலையை, செம்மணி கால் அருவி என - சிவந்த மணிகளைக் கொழித்துக்கொண்டுவருகிற மலையருவிபோலத்தோன்ற, சேர்த்தினாள்-(அவன் மார்பில்) இட்டாள்; (எ-று.) |