பக்கம் எண் :

306பாரதம்ஆதி பருவம்

களைத் தவிர வேறொன்றையும் எடுத்துக்கொண்டிலராக, அச்செய்தியை அறிந்தபின்
அரசன் அவர்களைப்பாண்டவரென்றேதுணிவு கொண்டனனென்க. பின்பு அவர்களும்
துருபதனது வேண்டுகோளின்படி தாம் இன்னாரென்று உள்ளபடி உணர்த்தித் தமது
நிஜரூபத்தைக் கொண்டு அரக்குமாளிகை யிருப்பின்பின் நிகழ்ந்த வரலாற்றை
அவனுக்குக் கூறின ரென முதனூலால் அறிக.                         (544)

70.- துருபதன்மணவினைதொடங்க, தருமன் 'நாங்கள் ஐவரும்
இவளை மணப்போம்' என்றல்.

கைவருசிலையின்வென்று கைப்பிடித்தவனுக்கின்றே
மைவருகண்ணினாளை வதுவைசெய்திடுதுமென்ன
நெய்வருமுனைகொள்கூர்வே னிருபனைநோக்கியாங்கள்
ஐவரும்வேட்டுமென்றா னசைவிலாவறத்தின்மைந்தன்.

     (இ-ள்.) 'கை வரு சிலையின் -(தனக்குக்) கைவந்த விற்நொழிலினால்,
வென்று-(பிறரைக்) கீழ்ப்படுத்தி, கை பிடித்தவனுக்கு - கைப்பற்றின அருச்சுனனுக்கு,
இன்றே -இன்றைத்தினமே, மைவரு கண்ணினாளை - மையிட்ட கண்களையுடைய
திரௌபதியை, வதுவை செய்திடுதும் - கலியாணஞ்செய்விப்போம்,' என்ன - என்று
(யாகசேனன்) சொல்ல,-அசைவு இலா அறத்தின் மைந்தன் - (தருமத்தினின்று)
சோர்தலில்லாத  தருமபுத்திரன், நெய் வரு முனை கொள் கூர் வேல் நிருபனை
நோக்கி -  நெய்பூசிய நுனியைக் கொண்ட கூரியவேலாயுதத்தையுடைய
அவ்வரசனைநோக்கி, யாங்கள் ஐவர்உம் வேட்டும் என்றான்- 'நாங்கள்
ஐந்துபேரும்(இவ்வொருத்தியை) மணஞ்செய்துகொள்வோம்' என்று சொன்னான்;

     யாங்கள் ஐவர்-தன்மையிற் படர்க்கைவந்த இடவழுவமைதி: 'யாங்கள்ஐவேம்'
என்று இருப்பின் வழாநிலையாம்,                                  (545)

71.- அதற்குஉடன்படாத துருபதனுக்கு வியாசர்
அறிவுறுத்தலுறல்.

தருமன்மாமதலைசொல்லாற் றளர்வுறுகாலைமாலை
நிருபநின்மனத்திலைய நீக்குகநீக்குகென்னாத்
துருபதன்முன்னர்வந்து தோன்றினன்சுருதியாவும்
விரைமலர்விதியின்மிஞ்ச விதித்தருள்வியாதனென்பான்.

     (இ-ள்.) தருமன் மா மதலை சொல்லால் - (இங்ஙனம்கூறிய) யமதருமராசனது
சிறந்த புத்திரனாகிய யுதிட்டிரனது வார்த்தையைக்கேட்டதனால், தளர்வுஉறு காலை-
(துருபதன்) வருத்தமடைந்த  சமயத்தில்,- 'மாலை நிருப - மாலையையணிந்த
அரசனே! நின்மன்றத்தில் ஐயம்நீக்குக நீக்குக-உன் மனத்தில் சந்தேகத்தை
நீக்குவாயாகநீக்குவாகாயக,' என்னா-என்றுசொல்லிக்கொண்டே, விரைமலர்விதியின்
மிஞ்ச சுருதியாஉம் விதித்து அருள்வியாதன் என்பான்-வாசனையையுடைய
(திருமாலின் நாபித்) தாமரைமலரில் தோன்றிய பிரமனினும் மேலாக
வேதங்களையெல்லாம் வகுத்தருளியவியாசனென்று பெயர்பெற்ற முனிவன்,
துருபதன் முன்னர் வந்து தோன்றினன் - அந்தத்துருபதராசனுக்கு எதிரிலே
வந்துதோன்றினான்; (எ-று.)