பக்கம் எண் :

திரௌபதி மாலையிட்ட சருக்கம்307

     நீக்குக நீக்குக - அடுக்கு, துணிவுப்பொருளது, ஸ்ருதி என்ற வடசொல் -
எழுதாக்கிளவியாய்க் குருசிஷ்ய கிரமத்திலே கர்ணபரம்பரையாக வழங்குவ தென்று
காரணப் பொருள்படும்.                                         (546)

72.-ஒருத்தியை ஐவர்மணத்தற்குக் காரணங் கேட்பாயென்று
வியாசர் கூறலுறல்.

தொழுதுபொற் றவிசி னேற்றிச் சூழ்ந்தன னிருந்துகேட்ப
முழுதுணர் கேள்வி ஞான முனிகுலத் தரசு போல்வான்
பழுதறு கன்னி தன்னைப் பாண்டவ ரைவ ருக்கும்
எழுதரு மறையின் வேள்வி யியற்றுதற் கியற்கை கேண்மோ.

பதினாறுகவிகள் - ஒருதொடர்.

     (இ-ள்.) (இங்ஙனம் எழுந்தருளிய வேதவியாசமுனிவனைத் துருபதராசன்),
தொழுது - நமஸ்கரித்து, பொன் தவிசின் ஏற்றி- பொன்மயமான சிங்காசனத்தில்
எழுந்தருளப்பண்ணி, சூழ்ந்தனன் இருந்து-(அவனைப்) பிரதக்ஷிணஞ்செய்து
இருந்துகொண்டு, கேட்ப-கேட்க,-முழுது உணர் கேள்வி ஞானம் முனி குலத்து
அரசுபோல்வான் - எல்லாவற்றையும் அறிந்த நூற்கேள்வியையும்
தத்துவஞானத்தையுமுடைய முனிவர்கூட்டத்துக்கு ஓர் அரசன்போல்
தலைமைபெற்றவனான அம்முனிவன்,-பழுது அறு கன்னிதன்னை - குற்றமற்ற
கன்னிகையான இந்தத்திரௌபதியை, பாண்டவர் ஐவருக்குஉம் - பாண்டவர்கள்
ஐந்துபேருக்கு, எழுது அரு மறையின் - எழுதுதற்கு அரிய (எழுதாக்கிளவியாகிய)
வேதத்தின் விதிப்படி, வேள்வி இயற்றுதற்கு - மணஞ்செய்வித்தற்கு(க்காரணமான),
இயற்கை - இயல்பை, கேண்மோ - கேட்பாயாக; (எ- று.)- 'சூழ்ந்தனரிருந்து' என்றும்
பாடம்.

     இச்செய்யுளில், கேட்ப, போல்வான் என்றவற்றிக்கு முடிக்குஞ்சொல்,
மேல் 87-ஆங்கவியில் வருகிற 'என்று' என்பது.                      (547)

வேறு.

73.- இனி, 15-கவிகள்-திரௌபதியின் முற்பிறப்புவரலாறு
கூறும்.

மூளா ரழலுற் பவித்தாளிவண் முற்ப வத்தில்
நாளா யணியென் றுரைசால்பெரு நாம மிக்காள்
வாளார் தடங்க ணவட்காரண வாணர்க் கென்றும்
கேளான மௌற்கல் லியனென்பவன் கேள்வ னானான்.

     (இ-ள்.) மூள்-மூண்டெரிகிற, ஆர்-நிறைந்த, அழல்-யாகாக்கினியில்,
உற்பவித்தாள் - தோன்றியவளான, இவள் - இத்திரௌபதி, முன் பவத்தில்-
முற்பிறப்பில், நாளாயணி என்று உரை சால் பெரு நாமம்மிக்காள் -
நாளாயணியென்றுபுகழ் நிறைந்தபெருமையையுடைய பெயரினாற் சிறந்தவள்; வாள்
ஆர் தட கண் அவட்கு - வாட்படைபோன்றபெரிய கண்களையுடைய அவளுக்கு,
ஆரணவாணர்க்கு என்றும் ஆன மௌற்கல்லியன் என்பவன் - அந்தணர்களுக்கு
எப்பொழுதும் தலைவனான மௌத்கல்ய னென்னும் முனிவன், கேள்வன் ஆனான்-
கணவனாயினான்; (எ - று.)