பக்கம் எண் :

திரௌபதி மாலையிட்ட சருக்கம்315

     (இ-ள்,) மாலை மார்பா-மாலையையணிந்த மார்பையுடைய துருபதராசனே!
தருமன் - யமதருமராசனும், பவனன்-வாயுதேவனும், தினம் நாதன் தனயர் தம்பால்-
பகற்பொழுதுக்குத் தலைவனாகிய சூரியனுடைய புத்திரர்களான அசுவினீதேவர்களும்
ஆகிய இந்நால்வர்களின் சம்பந்தத்தால், வரும்-பிறந்த, இந்த நால்வர் -யுதிட்டிரன்
வீமசேனன் நகுல சகதேவர்கள் என்கிற நான்குபேரும், அவர் நால்வர்உம்-முன்னமே
பிலத்தில் அடைபட்டிருந்த அந்த நான்கு இந்திரர்களுமாவர்; தெருமந்த இந்த சிலை
வீரன்-(பகைவர்மனம்) சுழலுதற்குக் காரணமான இந்த வில்லைக் கையிலேந்திய
வீரனான அருச்சுனன், இ தேவர்க்கு எல்லாம் பெருமன்-கீழ்க்கூறிய
தேவர்களுக்கெல்லாம் அரசனான இந்திரன்: பிறப்பிற்கு - இவன் பிறந்ததற்கு
அவனே-இந்திரனே, முன்-முன்பு, பிதாஉம் ஆனான்- தந்தையுமாயினான்;
(எ- று.)

     தேவவைத்தியர்களாகிய அசுவினீதேவர், பெண்குதிரைவடிவங் கொண்டு
வனத்திலொளித்திருந்த சமிஜ்ஞைஎன்னும் மனைவியினிடத்துக் குதிரைவடிவமாய்ச்
சேர்ந்த சூரியனுக்குப் பிறந்த இரட்டைப்பிள்ளைகளாதலால், 'தினநாதன்தனயர்'
எனப்பட்டனர். 'தம்மால்' என்றும் பாடம் உண்டு.                        (561)

87.இம்மாதுதொல்லையருமாதவத் தெல்லைகண்ட
அம்மாதிவள்காதலரைவரு மாகவென்று
தெம்மாதர்முற்பூண்கவர்மன்னன் றெளியுமாறு
வெம்மாதவத்தோன்பெருஞான விழியுமீந்தான்.

     (இ-ள்.)  இ மாது-இந்தப் பெண் (திரௌபதி),-தொல்லை-முற்பிறப்பில்,
அரு மாதவத்து எல்லை கண்ட-அரிய பெரிய தவத்தின் எல்லையைக் கண்ட
(தவத்தைமுற்றுஞ்செய்த), அ மாது- அந்த இந்திரசேனையென்னும் பெண்ணாவள்:
(ஆதலால்),ஐவர்உம்-இந்தப்பாண்டவர் ஐந்துபேரும், இவள் காதலர் ஆக-
இவளுக்குக்கணவராகக்கடவர், என்று-என்று சொல்லி, தெவ் மாதர் முன் பூண்
கவர் மன்னன்தெளியும் ஆறு-பகைவர்களுடைய மனைவியர்களின், மங்கலநாணைக்
களைகின்றபாஞ்சாலராசன் நன்குதெளியும்படி, வெம்மாதவத்தோன்-
கொடிய(செய்தற்கரிய)பெருந்தவத்தைச்செய்தவனான அந்த வியாசமுனிவன்,
பெருஞான விழிஉம் ஈந்தான் - (அவ்வரசனுக்குச்) சிறந்தஞானக்கண்ணையுங்
கொடுத்தருளினான்;

     பாண்டவரைவரும் திரௌபதியும் என்ற இவர்களது முற்பிறவி வரலாற்றை
வியாசன் துருபதனுக்கு எடுத்துக்கூறித் தெளிவித்ததுமல்லாமல், இவ்வுண்மையை
அத்துருபதன் தானே தெளிந்துகொள்ளும்படி அவனுக்குத்திவ்வியமான
ஞானக்கண்ணையும் தனது தவமகிமையால் அருளின னென்பதாம். இவ்வரலாறு
முழுதையும் வியாசன் துருபதனைத் தனியே அழைத்துச் சென்று
அவனுக்குமாத்திரமே கூறின னென முதனூல் தெரிக்கும்.

     மாங்கலியசூத்திரம் 'முற்பூண்' எனப்பட்டது. பகைவர்களைத் தவறாது
கொல்பவனென்ற பொருளில் 'தெம்மாதர்முற்பூண் கவர் மன்னன்' என்றது -
பிறிதினவிற்சியணி. 'மெய்ம்மாதவத்தோன்' என்றும் பாடம்.           (562)