பக்கம் எண் :

350பாரதம்ஆதி பருவம்

எடுத்து மோத -வேகத்தோடு உயர்த்தியடித்தலால்,-உடுக்கள் உம் நாள்உம்
கோள்உம்-மிகப்பலவாகிய தாரகைகளும் (அசுவினி முதலிய இருபத்தேழு)
நட்சத்திரங்களும் (சூரியன் முதலிய ஒன்பது) கிரகங்களும், இந்த நகர் வழி
போக-இந்த நகரத்தின்வழியே செல்லுதற்கு, உள்ளம்உம் உடல்உம் சேர நடுக்கு
உறுகின்ற-(அச்சத்தால்) மனமும் உடம்பும் ஒருசேர நடுக்கமடைகின்றனவாம்;
என்பார்-; (எ- று.)

     இந்நகரத்தின் உபரிகைகளின் மீது நாட்டிய கொடிகளின் மிக்க உயர்வை
உணர்த்துதற்கு, 'அக்கொடிகளின் சீலைகளைக் காற்று விசையோடு வலிய அடித்து
அசைத்தலால் அவை தம் மீது தாக்கி வருத்து மென்ற கருத்தால் சகலகிரகநட்சத்திர
தாரகைகளும் இந்நகரத்தின் மேலாகச்செல்லுதற்கு அஞ்சும்' என்றார்:
உயர்வுநவிற்சியணி. நாள்-நாளையுணர்த்துகிற நட்சத்திரத்திற்கு ஆகுபெயர்.
கோள் -(காலத்தை அளந்து) கொள்வது: கிரகம்.                      (618)

35.துதையளிமுரலும்வாசச் சோலையின்பொங்கர்தோறும்
விதமுறவெழுந்துகாள மேகங்கள்படிதனோக்கிக்
கதிர்மணியகழிமாமே கலையுடைநகரமாதின்   
புகைநறுமலர்மென்கூந்தல் போலுமாகாண்மினென்பார்.

     (இ-ள்.) துதை அளி முரலும் - நெருங்கிய வண்டுகள் ஒலிக்கின்ற, வாசம்
சோலையின்-நறுமணமுள்ள சோலைகளின், பொங்கர்தோறும்-மரக்கொம்புகளின்மே
லெல்லாம், விதம் உற எழுந்து காளமேகங்கள் படிதல்-பலபகுப்பாக எழுந்து
கருநிறமான மேகங்கள் படிந்திருத்தலை, நோக்கி- பார்த்து,- '(இது), கதிர் மணி அகழி
மா மேகலை உடை நகரம் மாதின் - ஒளியைக்கொண்ட இரத்தினங்களையுடைய
அகழியாகிய பெரிய மேகலாபரணத்தை யுடைய இந்நகரமாகிய பெண்ணினது, புகை
நறு மலர் மெல் கூந்தல் போலும் ஆ(று)-அகிற்புகையூட்டிய நறுமணமுள்ள
மலர்களைச் சூடிய மெல்லிய கூந்தலை யொத்திருக்குந் தன்மையை, காண்மின்-
காணுங்கள்,' என்பார் - என்று (தம்மில் ஒருவரை நோக்கி யொருவர்)
சொல்வார்கள்;(எ- று.)

     அந்நகரத்துச்சோலைகளின் மரங்கள்மீது படிகின்ற காளமேகங்களை,
அந்நகரமாகிய பெண்ணின் கரிய கூந்தல்மயிர்கள் போலுமென்றார்;
தற்குறிப்பேற்றவணி. அகழிக்கு இரத்தினம், கரைகளிற் பதிக்கப்பட்டவை.
மேகலை-எட்டுக்கோவையுள்ள இடையணி: இடையணியென்ற மாத்திரமாய்
நின்றது.                                                    (619)

36.ஈட்டியமணியும்பொன்னு மெழில்பெறப்புடைகடோறும்
பூட்டியசிகரிசாலப் புரிசையின்புதுமைநோக்கிக்
கோட்டியநகரியென்னுங் குலக்கொடிமன்றலெய்தச்
சூட்டியசூட்டுப்போலத் துலங்குமாகாண்மினென்பார்.

     (இ-ள்.)  ஈட்டிய - தொகுக்கப்பட்ட, மணிஉம்-இரத்தினங்களையும்,
பொன்உம்- பொன்னையும், எழில்பெற - அழகு உண்டாக,