பக்கம் எண் :

366பாரதம்ஆதி பருவம்

யென்பது - வெட்சியென்னும்பொருள தாதலையும், அம்மலர்மாலை முருகனுக்கு
உரிய தாதலையும், "செச்சைக்கண்ணியன்" எனத் திருமுருகாற்றுப்படையிலுங் காண்க.
மூத்தகுமாரனாகிய விநாயகனைவிலக்குதற்கு 'இளையோன்' என்றும்,
சரவணப்பொய்கையில் தோன்றிய இளங்குழந்தைவடிவானகுமாரக்கடவுளுக்குச்
சிவபிரான் கட்டளைப்படி உமாதேவி முலைப்பால் கொடுத்தமைபற்றி
'இளையோனுகர்தீம்பான்மணநாறு முலை' என்றும், காஞ்சீபுரத்தில்
காமாட்சியம்மைக்கு உள்ளதலைமைதோன்ற 'அவளுறையுங் கச்சிப்பதி' என்றுங்
கூறினார்.                                                     (644)

14.-அந்நகரிலுள்ள திருமாலையும்சிவபிரானையும்வணங்கல்.

*அயனார்புரிமகசாலையு மணியத்திகிரிக்கே
மயனார்செய்திருக்கோயிலு மாநீழலின்வைகெண்
புயனாருறைமெய்க்கோலமு முள்ளன்பொடுபோற்றிப்
பயனார்புனனதியேழுமந் நகரூடுபடிந்தான்.

     (இ-ள்.) அயனார் புரி மகசாலை உம் (அங்குப்) பிரமதேவர் செய்த
யாகசாலையையும், அணி அத்திகிரிக்குஏ மயனார் செய் திருகோயில்உம்-அழகிய
அத்திகிரியிலே மயன் செய்த திருக்கோயிலையும், மா நீழலின் வைகு எண் புயனார்
உறை மெய் கோலம்உம் - மாமரத்தின் நிழலிலே வீற்றிருக்கின்ற
எட்டுத்தோள்களையுடைய சிவபிரான் காட்சிகொடுக்கிற திருமேனிக் கோலத்தையும்,
உள் அன்பொடு போற்றி- மெய்யன்போடு வணங்கி, அ நகரூடு - அந்த
நகரத்திலுள்ள, பயன் ஆர் புனல் நதி ஏழுஉம் - (தம்மில்மூழ்குவார்க்கு)
நற்பயன்மிகும்படியான புண்ணியதீர்த்தத்தையுடையஏழு நதிகளிழும், படிந்தான் -
நீராடினான்; (எ-று.)- இதிற்குறித்த திருமால்திருநாமம் - வரதராசர்; தாயார்
திருநாமம்- பெருந்தேவி; சிவபிரான் திருநாமம் - ஏகாமிரநாதர்; அம்பிகை
திருநாமம் -காமாட்சியம்மை.

     நெடுநாள் தவஞ்செய்தும் மனத்தூய்மைபெறாத பிரமதேவன்
ஆகாயவாணிகூறியபடி பூலோகத்தில் புண்ணியக்ஷேத்திரங்களெல்லாவற்றுள்ளும்
உத்தமமானதும்ஒன்று ஆயிரமாகப்பயன் தருவதுமாகிய சத்தியவிரதக்ஷேத்திரத்தை
யடைந்து அங்கு அநந்தசரசின் கரையிலுள்ள அஸ்திகிரியை உத்தரவேதியாகக்
கொண்டு யாகசாலையமைப்பித்து அசுவமேதயாகஞ்செய்து அதனால்
ஸ்ரீமந்நாராயணனை ஆராதிக்க, அந்த யாகாக்கினியிலிருந்து எழுந்த


     *இச்செய்யுளின் இடையிரண்டடிகள், பலஏட்டுப்பிரதிகளில்

           "மயனார்செய்திருக்கோயிலுமாமின்னினொடமரும்
           புயனாரணர்மெய்க்கோலமுமுள்ளன்பொடுபோற்றி"

என்றுகாணப்படுகின்றன. மா மின்னினொடு அமரும் புயல்நாரணர் மெய்கோலம்
என்பதற்கு - திருமகளாகிய மின்னலினுடனே பொருந்திய மேகம்போன்ற
திருமாலினது திருமேனிக்காட்சி யென்று பொருள்.