உடுத்தல், உறங்கல் முதலிய தொழில்களைச்செய்யும் பொழுதும் இடைவிடாது சிந்தித்தல். இது தன்னை நினைத்தமாத்திரத்தில் முத்தியளிக்குந் தலமாதலால், அவ்வுண்மையுணர்ந்தோரால், பற்றற்றே தொழவேண்டு மென்ற நியதி யில்லாமல், பற்று அறாத பொழுதும் தொழப்படு மென்க. தாம்தாம் கடவுளென்னுங் கருத்துக்கொண்டு ஒருவர்க்கொருவர் பகைமைபூண்டு போர்தொடங்கிய பிரம விஷ்ணுக்களின்மாறுபாட்டை ஒழிக்கும்பொருட்டுப் பரமசிவன் அவ்விருவருக்கும் நடுவில் ஒரு பெரிய சோதிமலைவடிவமாய்த் தோன்றி நின்றன னென்றும், பின்பு சுருங்கிய அந்த அக்கினிமலையே திருவண்ணாமலை யென்றும், அது அழல்வண்ணமாய்ச் சிவந்திருத்தலால் 'அருணகிரி' எனப் பெயர் பெற்றதென்றும் சைவநூற்கொள்கை. அருணாசலம் -அருண + அசலம்: தீர்க்க சந்திபெற்ற வடமொழித்தொடர். அசலம் - சலியாதது: மலை. (646) 16.-பெண்ணையாற்றில் நீராடி, திருக்கோவலூர்ப் பெருமானைத் தொழுதல். உருகுங்கமழ்நெய்பாலிரு பாலுங்கரையொத்துப் பெருகுந்துறையேழேழு பிறப்புங்கெடமூழ்கிக் கருகுங்கருமுகின்மேனியர் கவிஞானியர்கண்ணிற் பருகுஞ்சுவையமுதானவர் பாதந்தலைவைத்தான். |
(இ-ள்.) உருகும் - உருகுகிற, கமழ் - நறுமணம் வீசுகிற நெய் - நெய்யும், பால்- பாலும், இரு பால்உம் - இரண்டுபக்கங்களிலும், கரை ஒத்து பெருகும் - கரையினளவுக்குச்சரியாகப் பெருகப்பெற்ற, துறை - (பெண்ணையாற்றின்) துறையிலே, ஏழ் ஏழு பிறப்புஉம் கெட மூழ்கி- எழுமையையுடைய எழுவகைப்பிறப்பும் ஒழியும்படிநீராடி,-கருகும் கரு முகில் மேனியர் - மிகக்கறுத்த காளமேகம் போன்ற திருமேனிநிறத்தை யுடையவரும், கவி ஞானியர் கண்ணின் பருகும் சுவை அமுது ஆனவர் - கவிபாடவல்லவர்களும் தத்துவஞானமுடையவர்களுமான முதலாழ்வார் மூவரும் தம்கண்களால் பிரதியக்ஷமாகக் கண்டு நுகர்ந்த இன்சுவையுடைய அமிருதம்போன்றவருமான திருக்கோவலூ ரெம்பெருமானுடைய, பாதம் - திருவடிகளை,தலைவைத்தான்-(தனது) முடியின் மேற்கொண்டு வணங்கினான்; (எ-று.) திருக்கோவலூரென்பது - நடுநாட்டிலுள்ள திருமாலின் திருப்பதி இரண்டனுள் ஒன்றும், தென்பெண்ணையாற்றின் தென்கரையிலுள்ளதுமாகிய திவ்வியதேசம். இங்குப்பெருமாள் திருநாமம் - தேகளீசன், திரிவிக்கிரமன், ஆயனார்; தாயார் திருநாமம்-பூங்கோவல் நாச்சியார், பூங்கோயிலாள். ஏழேழுபிறப்பு- "எழுமையெழு பிறப்பு" என்றார், திருக்குறளில்: ஒருபிறப்பிற் செய்த வினையின் பயன் ஏழுபிறப்புவரையிலும்தொடருமென்பது நூற்கொள்கை. வினைவசத்தால் உயிர்கட்கு நேரக்கூடியஏழுவகைப்பிறப்பு-தேவர், மனிதர், மிருகம், பறவை,ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம்என்பன. 'ஏழேழுபிறப்புங்கெட' என்றது- இனி எந்தப்பிறப்பிலும் ஒருகாலும் |