பிறந்து வருந்தாதபடி என்றவாறு. கண்ணிற்பருகும் - நாவின்வினையைக் கண்ணின் மேல் ஏற்றியது, ஒருவகையுபசாரவழக்கு; தாகங் கொண்டவன் ஆதரத்தோடு நீர்பருகுவதுபோல மிக்க அன்போடு கண்களாற் காணும் என்க. பால் என்ற சொல் வெவ்வேறு பொருளில் அடுத்துவந்தது-மடக்கு என்னுஞ் சொல்லணி. ஒளவையார் திருக்கோவலூர்க்குச் செல்லும்பொழுது, அங்குப் பெண்ணையாற்றங்கரையிலுள்ள பாரி யென்னும் இடையனது குடிசைக்குள் நுழைய, மழையில் நனைந்து குளிர்நடுக்கங்கொண்டு வந்த அந்த ஒளவையார்க்கு, அக்குடிசையிலிருந்த அவன்பெண்களான அங்கவை சங்கவை யென்றமங்கையர் இருவரும் அன்போடு ஆடையும் உணவும் கொடுத்து உபசரிக்க, அதனால் மகிழ்ச்சிகொண்ட ஒளவையார் அவர்கட்குச்செல்வம் பெருகும்படி கவிபாடியதோடு, அக்கன்னிகைகளைத் தக்கவரனுக்கு மணம்புரிவிக்க விரும்பி, தெய்விகனென்னும் அரசனுக்குக் கொடுப்பதாக நிச்சயித்துச் சேரசோழ பாண்டியர்களைச் சீட்டுக்கவியெழுதி யனுப்பி வருவித்து, விவாகத்திற்குவேண்டியன வெல்லாஞ்சித்தஞ் செய்து மணத்தைச் சிறப்பாக நடத்தும்பொழுது பெண்ணைநதியை நோக்கி, இம் மணவிருந்துக்கு வேண்டிய பால் நெய்யாகப் பெருகிவரும்படி "முத்தெறியும் பெண்ணை முது நீரதுதவிர்ந்து, தத்திய நெய்பால் தலைப்பெய்து -குத்திச், செருமலைதெய்வீகன்றிருக்கோவ லூர்க்கு, வருமளவிற் கொண்டோடி வா" என்ற ஒருவெண்பாப்பாட, அத்தெய்விகவாக்கின்படி அந்நதி நிறைய நெய்யும் பாலும் பெருகியதென்பது. இங்கு குறித்த கதை. பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்ற முதலாழ்வார் மூவரும், ஓடித்திரியும் யோகியர்களாய், செஞ்சொற்கவிகளுமாகி, தம்மில் ஒருவரையொருவர் அறியாமல் தனித்தனியே பலவிடத்தும் சஞ்சரித்து வருகையில், ஒருநாள் சூரியாஸ்தமன மானபின் பொய்கையாழ்வார் திருக்கோவலூரையடைந்து, அங்கு மிருகண்டு முனிவரது திருமாளிகையிற் சென்று அதனது இடைகழியிற் சயனித்துக்கொண்டிருந்தார். பின்னர்ப் பூதத்தாழ்வாரும் அவ்விடத்திலே சென்று சேர,பொய்கையாழ்வார், 'இவ்விடம் ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம்' என்றுசொன்னபின், அவ்வாறே அவ்விருவரும் அங்கு இருந்தனர். அதன்பிறகு பேயாழ்வாரும் அவ்விடத்தை அடைந்திட, முன்னையரிருவரும் 'இவ்விடம் ஒருவர்படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம்' என்று கூற, அங்ஙனமே அம்மூவரும் அவ்விடத்திலே நின்றுகொண்டு எம்பெருமானுடைய திருக்கலியாணகுணங்களை ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டும் கேட்டுக்கொண்டும் மகிழ்ந்திருந்தனர். அவர்களை ஆட்கொண்டு அவர்களால் உலகத்தை உய்விக்கவேண்டுமென்று நினைத்து அம்மூவரையும் ஓரிடத்திற் சேர்த்த திரிவிக்கிரமமூர்த்தி அவர்களை அநுக்கிரகிக்கும் பொருட்டு அப்பொழுது பேரிருளையும் பெருமழையையும் உண்டாக்கிப் பெரியவடிவத்தோடு அவர்களுடன்சென்று நின்று பொறுக்கவொண்ணாத அதிக நெருக்கத்தைச் செய்தருளினான். |