இளவண்டமி ழெழுதேடுமுன் னெதிரேறிய துறைசூழ் தளவங்கமழ் புறவஞ்செறி தண்கூடல் புகுந்தான். |
(இ-ள்.) வளவன் பதி முதல் ஆக - சோழனது இராசதானியான உறையூர்
முதலாக, வயங்கும் - சிறப்புப்பெற்றுவிளங்குகிற, பதி தோறுஉம் -
விஷ்ணுஸ்தலங்களிலெல்லாம், துளவம் கமழ் அதி சீதள தோயங்கள் படிந்துஏ -
(அத்திருமாலுக்குஉரிய) திருத்துழாயின் திருமணம் வீசப்பெற்ற மிகக்குளிர்ச்சியான
தீர்த்தங்களில் நீராடிக்கொண்டே,- இள வண் தமிழ் எழுது ஏடு முன் எதிர் ஏறிய
துறை சூழ்- இளமையையும் வண்மையையுமுடையதமிழ்ப் பாஷை எழுதப்பெற்ற ஏடு
முன்பு கரையெதிர்த்துச்சென்ற (வையையாற்றின்) துறையை யடுத்ததும், தளவம் கமழ்
புறவம் செறி - முல்லைமலர் மணம்வீசப்பெற்ற வனம் சார்ந்ததுமான, தண்கூடல் -
குளிர்ந்த மதுரையினுள், புகுந்தான்- சென்று சேர்ந்தான்; (எ-று.)-- உறையூரில்
எழுந்தருளியிருக்கிற பெருமாள் திருநாமம் - அழகியமணவாளன்; பிராட்டி -
உறையூர்நாச்சியார்.
சோழராசர்களுக்குஉரிய இராசதானிகள் *ஐந்தனுள் உறையூர் ஒன்றாதலாலும்,
அது திருவரங்கத்தையடுத்த திருமால் திருப்பதி யாதலாலும் 'வளவன்பதி'
என்றதற்கு- உறையூரென்று பொருள்கொள்ளப்பட்டது. 'வளவன்பதி முதலாக
வயங்கும்' என்றதையும், 'துளவங்கமழதிசீதள தோயங்கள் படிந்தே' என்பதையும்
நோக்கி, 'பதிதோறும்' என்பதற்கு - விஷ்ணுஸ்தலங்களிலெல்லாமென்றே
பொருள்கொள்ளவேண்டியதாயிற்று. எம்பெருமானது திருமஞ்சன திவ்விய
தீர்த்தத்தின்சம்பந்தம் பெறுதல் தோன்ற 'துளவங்கமழ்தோயம்' எனப்பட்டது.
நிலவளம் முதலிய பலவளங்களுக்குங்காரணமாகி நீர்வளம் மாறாமைக்குங்
காரணமான காவிரிநதி பாயும் நாடுடையனாய்ச் செல்வவளத்திற் சிறத்தலால்,
வளவனென்று சோழனுக்கு ஒருபெயர். 'முதலாக' என்றது-திருக்கரம்பனூர்,
திருவெள்ளறை முதலியவற்றை.
மூன்றாமடியிற் குறித்த கதை.- திருஞானசம்பந்தமூர்த்திநாயனார்
சமணர்களைவென்று சைவமதத்தை நிலைநிறுத்தும்பொருட்டுப் பாண்டிய
நாட்டுக்குச்சென்றபொழுது சமணர்கள் அரசன் முன்னிலையில் 'நாம் இரு
திறத்தேமும் நமதுசமயசித்தாந்தத்தை யெழுதிய ஏட்டை ஓடுகின்ற வையை
யாற்றிலே இடுவோம்;அவற்றில் எதிர்ந்துசெல்லும் ஏடே மெய்ப்பொருளை
யுடையது' என்றுசொல்ல, அதற்கு நாயனார் உடன்பட்டபின், சமணர்கள் "அஸ்தி,
நாஸ்தி" என்னுந்தங்கள்மதக்கோட்பாட்டை எழுதிய ஏட்டை நதிப்பெருக்கில்
இடுதலும், அதனைஅப்பெருக்கு அடித்துக்கொண்டுபோய்விட்டவுடனே, நாயனார்
"வாழ்கவந்தணர்" என்று தொடங்கும் பாசுரத்தைப் பாடி ஏட்டிலெழுதி அதே
ஏட்டைத் தமதுகையினால் வைகைநதியில் இட, அவ்வேடு நதியிலே எதிர்ந்து
நீரைக்கிழித்துக்கொண்டு சென்ற தென்பதாம்; நாலடியாரைப்பற்றிய கதையைக்
கொள்வாருமுளர்.
*சோழர்கட்கு உரிய இராசதானிகள் - காவிரிப்பூம்பட்டினம், கருவூர்,
திருவாரூர்,உறையூர், திருச்சேய்ஞலூர் என ஐந்து.