பக்கம் எண் :

அருச்சுனன்றீர்த்தயாத்திரைச் சருக்கம்391

43.-அருச்சுனன் சித்திராங்கதையினிடமாகப் பெற்ற
புதல்வனைச் சித்திரவாகனனுக்குக் கொடுத்தல்.

பன்னாளினெடும்போகம்பயின்றபின்னர்ப் பப்புருவாகனனென்
                                 னும்பைதற்றிங்கள்,
அன்னானையவள்பயந்தாள்பயந்தபோதே யம்மகவையு
                             வகையுடனவனுமீந்தான்,
தென்னாவென்றளிமுரலவேம்பிற்றண்டார்த்தேம்பரிசில்வழங்கு
                              புயத்தென்னர்கோவும்,
நின்னாலென்மரபுநிலைபெற்றதென்றுநேயமுடன்கவர்ந்து
                                  துயர்நீங்கினானே.

     (இ-ள்.) பல் நாளில் நெடும் போகம் பயின்ற பின்னர் - (இவ்வாறு)
பலநாள்பெரியஇன்பத்தை (இருவரும்) அனுபவித்தபின்பு அவள்-அச்சித்திராங்கதை,
பப்புருவாகனன் என்னும் பைதல் திங்கள் அன்னானை பயந்தாள் - பப்புருவாகன
னெனப் பெயர் பெறும் இளம்பிறைச்சந்திரன்போன்ற புத்திரனைப் பெற்றாள்;
பயந்தபோதே- பெற்றபொழுதே, அவன்உம் உவகையுடன் அ மகவை ஈந்தான் -
அவ்வருச்சுனனும் மகிழ்ச்சியோடு அப்பிள்ளையை (முன்புகுறித்தபடி சித்திரவாகன
பாண்டியனுக்கு)க் கொடுத்தான்; தென்னா என்று அளிமுரல- 'தென்னா ' என்று
வண்டுகள் ஒலித்து இசைக்க, வேம்பின் தண் தார் தேம் பரிசில் வழங்கு -
(தானணிந்த) குளிர்ந்த வேப்பம்பூமாலையிலுள்ளதேனை (அவ்வண்டுகளுக்கு)
வெகுமதியாகக் கொடுக்கின்ற, புயம் - தோள்களையுடைய, தென்னர் கோஉம் -
பாண்டியர்தலைவனான சித்திரவாகனனும், நின்னால் என் மரபு நிலைபெற்றது
என்று- 'உன்னால் எனதுசந்ததி அழிவின்றி நிலைத்தது' என்று (அருச்சுனனைநோக்கி
உபசாரவார்த்தை) சொல்லி, நேயமுடன் கவர்ந்து-அன்போடு (அப்பிள்ளையை)
வாங்கிக்கொண்டு, துயர் நீங்கினான்-(புத்திரசந்ததியில்லா திருந்ததனாலாகிய தனது)
துன்பம்  ஒழியப்பெற்றான்;(எ-று.)

     வண்டுகள் தென்னாவென்று ஒலிக்கும் இசைக்குறிப்புவாய்பாடும், 'தென்னன்'
என்பது ஈறுதிரிந்து ஈற்றயல்நீண்ட விளியாய்த் தென்னனே யென்று பொருள்படும்
ஆடுஉமுன்னிலையுமாக இருபொருள் இரட்டுறமொழித லென்னும் உத்தியால்
ஒருங்கே யமைய 'தென்னாவென்று அளிமுரல' என்றார்: 'தென்னா' என்று
பாண்டியனை விளித்து முன்னிலைப்படுத்தி இசைபாடிவரும் பாணர்களுக்கு
அவர்கள்வேண்டிய இன்னுணவுமுதலிய பரிசுகளை இருகையாலும்வழங்கும்
பாண்டியரியல்பின்படி, 'தென்னா' என்று இசை பாடி வந்தவண்டுகளுக்குப்பிரியமான
தேனைத் தோள்களில் தரித்த வேப்பம்பூமாலையினின்றுவழங்கும் பாண்டிய னென்று
பொருள்படுமாறு 'தென்னா வென்றளிமுரல வேம்பின்றண்டார்த் தேம்பரிசில் வழங்கு
புயத்தென்னர்கோ' என்றார்: ஆறறிவுடைய மக்கட்குப்போலவே
அவ்வறிவிற்குறைபாடுடையஉயிர்கட்கும் தன்னைச்சார்ந்தவிடத்துப் பரிசுகொடுக்கும்
பெருங்கொடையாளனென்பது விளங்கும். பாணர்க்கு வண்டு உவமமாதலை, சிலப்.
காதை-5, வரி 200-203-இலும் காணலாம். தென்னர் -பரதகண்டத்தின்
தென்னாடாகியபாண்டிய நாட்டை யாள்பவர். பப்ருவாஹநன்  என்றவட
மொழிப்பெயர் -பிங்கலவர்ணமான குதிரைகளை யுடையவ னென்று
பொருள்படும்.                                               (674)