(இ-ள்.) உள் அடங்கிய மனத்திற்குள் அடங்கியிருக்கிற, காமம் வெம் கனல் - காமமாகிய கொடியநெருப்பு, புறத்துஓடி- வெளியேசென்று, கொள்ளைகொண்டு - கவர்ந்துகொண்டு, உடல் மறைத்துஎன - உடலைமறைத்தாற்போல, கூறைஉம் - காவிவஸ்திரமும், தான்உம் - தானுமாக, மெள்ளவந்து-, தன் கடி மனை மேவிய - தன்னுடைய சிறப்புள்ள மனையிலேபொருந்திய, கள்ளம்வேடம்வஞ்சனை - பொய்யாகச் சன்னியாசிவேடம்பூண்டுள்ள வஞ்சகத்தையுடையனான அருச்சுனனை, கற்புஉடை கன்னி - கற்பினையுடைய கன்னிகையான சுபத்திரை, அறிந்திலள் - அறித்தாளில்லை; (எ-று.) சன்னியாசிவேடம்பூண்டுவந்துள்ளவன் அருச்சுனனே யென்பது சுபத்திரையாலறியப்படவில்லையென்பதாம். காஷாயவஸ்திரந் தரித்திருப்பதை, உள்ளேயிருக்கிற காமக்கனல் புறத்திலும்வந்து அருச்சுனனைக்கொள்ளை கொண்டதோஎன்னுமாறுள்ளது எனத் தன்மைத்தற்குறிப்பேற்றவணிபடக் கூறினார். கனலும் காவியாடையும் செந்நிறமாதல், இங்கன் வருணித்தற்கு ஒருகாரணம். சுபத்திரையைப் பிறரறியாமல்மணப்பதற்கே இந்தவேடம்பூண்டிருத்தலால், 'கள்ளவேடவஞ்சன்' என்றது. இதுமுதல் இருபத்தொரு கவிகள் - பெரும்பாலும் முதற்சீரும் ஐந்தாஞ்சீரும் மாச்சீர்களும், மற்றை மூன்றும்விளச்சீர்களுமாகிய கலிநிலைத்துறைகள். (689) 59.- இரவில் அருச்சுனன்ஓரறையிற் படுக்க, மற்றோரறையிற் சுபத்திரை தன்பாங்கியருடன் துயிலுதல். ஈங்குவந்ததென்றவப்பய னென்றுகொண்டெண்ணி ஆங்குவந்ததொருமனையிடை யருந்தவன்றுயிலத் தூங்குகண்ணினள்சுபத்திரை தோழியர்பலரும் பாங்குவைகமற்றொருமனை புகுந்துகண்படுத்தாள். |
(இ-ள்.) 'ஈங்கு - இங்கே, வந்தது- (சுபத்திரை) வந்தது, என்தவம் பயன்,- 'என்றுகொண்டு எண்ணி - என்று நினைத்து, அருந்தவன் - அரிய சன்னியாசிவேடம்பூண்ட அருச்சுனன், ஆங்கு - அங்கே, உவந்து - மகிழ்ந்து, ஒருமனையிடை - ஓரறையிலே, துயில - நித்திரைசெய்வான்போலிருக்க,- சுபத்திரை-,தூங்கு கண்ணினள் - நித்திரைக்குறிப்புத்தோன்றியகண்ணினளாக, (உடனே), மற்றொருமனைபுகுந்து - வேறோரறையிலே சேர்ந்து, தோழியர் பலரும்-, பாங்கு வைக -அருகே தங்கியிருக்க, கண்படுத்தாள் - துயில்பவளானாள்; (எ-று.)-என்றுகொண்டுஎன்பதில், 'கொண்டுஎன்பது அசைநிலை. (690) 60.- இதுமுதல்மூன்றுகவிகள் - அருச்சுனனுடைய காம தாபத்தைத் தெரிவிக்கும். புடவியெங்கணும்புதையவான் பொழிதருபுனலால் அடவியாரழலவியவு மவிந்திலதையோ தடவிவாடைமெய்கொளுத்திடத் தனஞ்சயற்கணங்கின் விடவிலோசனக்கடைதரு விரகவெங்கனலே. |
|