(இ-ள்.) வாடை - வாடைக்காற்று, மெய்-உடலை, தடவி-, தனஞ்சயற்கு - அருச்சுனனுக்கு, கொளுத்திட - தாபத்தைமிகுவியாநிற்க, அணங்கின் - தெய்வப்பெண்போன்ற சுபத்திரையின், விடம் விலோசனம்கடை - விடத்தின் தன்மையைக்கொண்ட[வருத்துகின்ற] கடைக்கண்பார்வை, தரு - தந்த, விரகம்வெம்கனல் - பிரிவுத்துயராலாகிய நெருப்பானது, புடவி எங்கண்உம் புதைய -பூமிமுழுவதும்மறைந்திருக்கும்படி, வான் - மேகம், பொழிதரு - பொழிந்த, புனலால் -நீரினால், அடவி - காட்டிலுள்ள, ஆர் அழல் - நிரம்பிய அக்கினி, அவியஉம் -அவிந்திடாநிற்கவும், அவிந்திலது-: ஐயோ-!!(எ-று.) மழைக்காலமாதலால் பூமியெங்கணும் நீரில் அமிழ்ந்திடா நிற்கவே அவிதற்கரியகாட்டுத்தீயும் அவியவும், அருச்சுனனுக்குச் சுபத்திரையின் கடைக்கண்பார்வையால்தோன்றிய காமத்தீ அவிந்திலதே! அந்தோ!! என்று இரங்கிக் கூறியவாறு. காட்டுத்தீயும் அவியுமாறு புனல் பொழிந்திடவும், (விரக) வெங் கனலவியவில்லை யென்ற இது - காரணமிருக்கவும் காரியந்தோன்றாமையாகிய சிறப்புநவிற்சியணி [விஸேஷோக்தி] யாகும். ஐயோ - இரக்குக்குறிப்பு. 61. | மதனலீலையிற்பழுதற வழிபடும்பாவை வதனவாண்மதிவந்துமுன் னிற்கவுமருண்டச் சதனமேவருந்தபோதனன்றனக்குவெம்மோக விதனவல்லிருள்விடிந்தில தாரிருள்விடிந்தும். |
(இ-ள்.) ஆர் இருள்விடிந்துஉம் - (கழிதற்கு) அரியதாயிருந்த கங்குற் போது புலர்ந்தும், மருண்டு - காமமயக்கத்தைக்கொண்டு அ சதனம் மேவரும் - அந்தமனையிலே தங்கியிருக்கிற, தபோதனன் தனக்கு - சன்னியாசிவேடம்பூண்ட அருச்சுனனுக்கு, மதன(ன்) லீலையில் பழுது அற வழிபடும் பாவை - மன்மதலீலையிலே குற்றமற்ற வழிபாடும் செய்தற்கும் உரியளான சித்திரப்பிரதிமைபோன்ற சுபத்திரையின், வதனம் வாள்மதி - முகமாகியஒளியுள்ள [பதினாறு கலைகளும் நிரம்பிய] சந்திரன், வந்து-, முன்நிற்கஉம்-, வெம் மோகம் விதனம் வல் இருள் - கொடிய காமமோகத்தினால் நேர்ந்த விதனமாகிய கொடிய இருள், விடிந்திலுது - நீங்கிற்றில்லை; (எ -று.) மதிநிற்கவும்இருள்விடிந்திலது என்றது - முன்னையசெய்யுளிற் போலவே சிறப்புநவிற்சியணியாம். இதற்கு - வதனவாண்மதி, விதன வல்லிருள் என்ற உருவகவணிஅங்கமாய்வந்தது. (692) 62. | அற்றைநாண்முதலனேகநா ளகின்மணங்கமழுங் கற்றைவார்குழற்கன்னிகை வழிபடக்கருத்தால் இற்றைமாமதன்பூசலுக் கென்செய்வோமென்றென்று ஒற்றையன்றில்போன்மெய்ம்மெலிந் துள்ளமுமுடைந்தான். |
(இ-ள்.) அற்றை நாள்முதல் - அன்றைத்தினமுதல், அனேகம் நாள் - பலநாள்,அகில் மணம் கமழும் கற்றை வார் குழல் கன்னிகை - அகிலின் வாசனை வீசுகின்றதொகுதியானநீண்டகூந்தலையுடைய கன்னிகையாகிய சுபத்திரை, கருத்தால் -மனப்பூர்வ |