பக்கம் எண் :

410பாரதம்ஆதி பருவம்

     (இ-ள்.) யதி - அந்த அருச்சுன சன்னியாசி, உரைத்த - கூறிய, சொல் -
சொல்லை,கேட்டலும் - கேட்டவுடனே, யாதவி - யதுகுலத்திற் பிறந்தவளான
சுபத்திரையின், நுதல் வாள் மதி - நெற்றியாகிய ஒளியுள்ள சந்திரன், வியர்த்தது-;
வாய்குமுதம் மலர்உம் - வாயாகிய செவ்வாம்பல்மலரும், துடித்தது-; புதிய கச்சு
அணிகுரும்பைகள் - புதிய கச்சையணிந்த குரும்பை போன்ற தனங்கள், புளகம்
அரும்பின- மயிர்க்கூச்சு எறிந்தன; பதிஇடத்து - நாயகன் சமீபத்திலிருக்கும்போது,
அரிவையர்க்கு - மகளிர்க்கு, உளம் - மனம், ஆகுலம்படாதுஓ -
சஞ்சலமாதலையடையாதோ? (எ-று.)

     அருச்சுனன் அருகிலிருத்தலாற் சுபத்திரையின்மனம் கலக்கமுற்றதென்று
முதல்மூன்றடிகளிற் கூறிய பொருளை ஈற்றடியிற் கூறிய பொதுப்பொருளாற்
சமர்த்தித்தார்; வேற்றுப்பொருள்வைப்பணி. நுதல் வாண்மதிவியர்த்தது,
வாய்க்குமுதமலர்துடித்தது என்பன - பரிணாமாலங்காரமென்னும் திரிபுஅணி:
நுதலைவாண்மதியாகவும் வாயைக் குமுதமாகவும் உருவகஞ்செய்தாரெனின்,
அவைவியர்த்தல் துடித்தல்என்ற தொழில்நிகழ்ச்சிக்கு ஏற்றனவாகாமை காண்க.
கச்சணிகுரும்பை - உருவகநவிற்சி.                              (700)

70.- அச்சமயத்தில் அருச்சுனன் சுபத்திரையைக்
கைப்பிடித்தல்.

உகவைமுத்தமென்பவளமு நீலமுமொளிர
அகவுபச்சிளந்தோகைபோ னின்றவவ்வணங்கை
மிகவிருப்பநோய்வளர்தலின் மெலிந்ததோள்விசயன்
தகவுடைத்தனதடக்கையால்வளைக்கரந்தகைந்தான்.

     (இ-ள்.)  உகவை - மகிழ்ச்சியினால், முத்தம்மெல் பவளம்உம் -
முத்துக்களையுடைய மென்மையான பவழம்போன்றசிவந்த வாயும், நீலம்உம் -
நீலோற்பலமலர்போன்ற கண்களும், ஒளிர - விளங்க, அகவு பசு இள
தோகைபோல்நின்ற - (கார்ப்பருவத்தில்) ஆடுகின்ற பசுநிறமான
இளமயில்போல (க் களித்து) நின்ற,அ அணங்கை - அந்தப்பெண்ணை
[சுபத்திரையை], விருப்பம் நோய் - மிகவளர்தலின் மெலிந்த தோள் விசயன் -
ஆசைநோய் மிகுதியாகவளர்ந்ததனாலிளைத்த தோள்களையுடைய அருச்சுனன்,
தகவு உடை தன தடகையால் - அழகையுடைய தனது நீண்ட கையினால், வளை
கரம் தகைந்தான் -வளையலை யணிந்த கையைப் பிடித்தான்;

     வாயிற் பல்லினொளிசிறிது வெளித்தோன்றும்படி யுண்டான புன்னகையிலும்
பார்வையிலும் காதற்குறிப்பு நன்குவெளிப்பட வென்பது, முதலடியின் கருத்து.
'முத்தம் 'என்றது, பற்களை. பவளம், நீலம் - உவமையாகுபெயர்கள்.      (701)

71.- அச்செய்தியைத் தோழியர் தேவகிக்குத் தெரிவித்தல்.

தகைந்தபோதுயிர்ச்சேடியர் தவிர்கெனச்சிலசொல்
பகர்ந்துபோயொருமாதவிப் பந்தரிற்புகுந்து
புகுந்தநீர்மையைத்தேவகி யறியுமாபுகன்றார்
அகைந்தபல்பெருங்கிளைஞரி லார்கொலோவறிந்தார்.