(இ-ள்.) அணங்கு போல்வார் - தெய்வமகளிர் போன்ற மாதர்கள்,- பாராமல்- (தாங்கள்) பாராமலும், நகையாமல் - சிரியாமலும், பாடாமல் - இசைபடாமலும், ஆடாமல் - நர்த்தனம் ஆடாமலும், பாதம் செம் கை சேராமல் - காலையும் சிவந்தகையையும் சேராமலும், முக ராகம் வழங்காமல் - நட்புச்செய்யாமலும், இகழாமல் - இகழாமலும், செம் வாய் ஊறல் நேராமல் - சிவந்தவாயினால் எச்சிற்படச்சுவையாமலும், நிழலதனை நிகழ்த்தாமல் - நிழலைச் செய்யாமலுமிருக்கையிலே,மலர்ந்து-, அழகு நிறைந்த நீழல் ஆராமம் தொறும் தங்கள் அவயவம் போல்வன-அழகுநிறைந்த நிழலையுடைய சோலைகளிலெல்லாம் தங்களுடைய உறுப்புக்கள் போலஉள்ளனவான மலர் அரும்பு தளிர் முதலியவற்றை, கொய்தார் - பறித்தார்கள்; (எ-று.) உத்தமவிலக்கணமுடைய மகளிர் பார்க்க மாமரமும், அவர்கள் நகைக்க முல்லையும், பாடக் குருக்கத்தியும், ஆடப் புன்னையும், உதைக்க அசோகமும், அணைக்கக் குராவும், நட்புற ஏழிலைம்பாலையும், நிந்திக்கப் பாதிரியும், சுவைக்க மகிழும், நிழல்படச் சண்பகமும் தளிர்த்து அரும்பிப் பூப்பன வென்றல், கவிஞர்மரபு. இவை மகளிரால்மலர்மர மெனப்படும். "ஏடவிழ்மகிழ் சுவைக்க வேழிற்பாலை நண்புகூடப், பாடல நிந்திக்கத் தேம்படிமுல்லை நகைக்கப் புன்னை, ஆடநீள்குரா வணைக்க வசோகுஉதைத்திட வாசந்தி, பாடமாப் பார்க்க வார்சண்பக நிழற்படத் தளிர்க்கும்" என்ற சூடாமணிநிகண்டையுங் காண்க. இங்கு அம்மரங்கள் மகளிர்பார்த்தல் முதலியன செய்யாமலிருக்கையிலேயே இயல்பாய்த் தளிர்த்து அரும்பிப்பூத்துச்செழித்தன, இளவேனிலாதலி னென்க. பாதம்சேராமல் செங்கை சேராமல் எனத்தனித்தனி யியைத்து, உதையாமலும் அணையாமலும் எனப் பொருள்கொள்க. முக ராகம் வழங்குதல் - முகமலர்ச்சி காட்டி அன்புபாராட்டுதல்; எனவே, நண்பு செய்தலாயிற்று: ராகம் - ஆசை. தளிர் அரும்பு பூ என்பவை நிறமும்மேன்மையும் அழகும் பற்றி, மகளிர் உறுப்புக்கு உவமையாம். அவ்வுபமான உபமேயத்தன்மையைமாற்றி 'தங்கள் அவயவம்போல்வன' என்றது - எதிர்நிலையணி. 'தங்கள்அவயவம் போல்வன கொய்தார்' என்றதொடரின் போக்கினால், ஒப்பற்ற தங்கள்அவயவங்கட்குப் போலியாதல் பற்றிப் பகைத்து அவற்றைப் பறிப்பராயின ரென்றபொருள் தொனிக்கும். (727) 7.- சோலை நீர்நிலைஎன்ற இவற்றின் வருணனை. மாற்றாதபனிநீரான்மான்மதகுங் குமமலயவாசச்சந்தின் சேற்றாலச்சோலையெலாஞ்செங்கழுநீர்த்தடம்போன்றசிந்தைத்தாபம் ஆற்றாதகாதலருக்கமுதான விளநீராலடர்ந்தபூகத் தாற்றாலம்மரகதச்செந்துகிராலப் பொழில்போன்றதடங்களெல்லாம். |
(இ-ள்.) அ சோலைஎலாம் - அவர்கள்சென்ற அந்தச்சோலை முழுதும், மாற்றாதபனிநீரால் - மாறுபடுத்தாத [சுத்தமான]பனி நீராலும், மான்மதம் குங்குமம் மலயம்வாசம் சந்தின் சேற்றால் - கஸ்தூரி குங்குமம் மலயமலையில் தோன்றிய நறுமணமுள்ள சந்தனம் என்ற இவற்றின் சேற்றினாலும், செங்கழுநீர் தடம் |