10. | நறைகமழ்தண்டுழாய் மாலைநாரணற்கு நண்பானநரனார் செங்கை, உறையுமலர்ச்செந்திருவுமொவ்வாத பொற்புடையா ளொருபொற்பாவை, நெறிதருபைங்குழலின்மிசை வீசியநீர் பெருக் காற்றினிறைநீர்வற்றி, அறல்படுநுண்கருமணலினரித்தொழுகுஞ் சின் னீரோடமைந்ததம்மா. |
(இ-ள்.) நறை கமழ் - வாசனை வீசுகிற, தண் - குளிர்ச்சியான, துழாய் மாலை -திருத்துழாய்மாலையையுடைய, நாரணற்கு - நாராயணனது திருவவதாரமானகண்ணபிரானுக்கு, நண்பு ஆன - சிநேகிதனான, நரனார் - அருச்சுனன், செம் கை -(தனது) சிவந்த கையினால், மலர் உறையும் செம்திருஉம் ஒவ்வாத பொற்பு உடையாள்- செந்தாமரைமலரில் வாழ்கிற செந்நிறமுள்ள இலக்குமியும் ஒப்பாகாத அழகையுடையவளாகிய, ஒரு பெண்பாவை - பொன்மயமான பிரதிமையைப் போன்ற ஒருபெண்ணினது, நெறி தரு பைங்குழலின்மிசை - நெறித்த கருநிறமான கூந்தலின்மேல்,வீசிய-, நீர்- நீரானது- பெருக்கு ஆற்றில் நிறை நீர் வற்றி - வெள்ளப்பெருக்கையுடைய நதியில் நிறைந்த நீர் குறைந்துபோக, அறல் படு நுண் கருமணலின் அரித்துஒழுகும் - அறுப்புப் பொருந்திய நுண்ணிய கருமணலில் அரித்துப் பாய்கிற, சில்நீரோடு - சொற்பமான நீரோடு, அமைந்தது - ஒத்தது; (எ-று.) தற்குறிப்பேற்றவணி. நெறித்தகருநிறமான கூந்தல் அறல்பட்ட நுண்ணிய கருமணலையும், அக்கூந்தலின்மேல் வீசிய நீர் அக்கருமணலில் அரித்தொழுகுஞ் சொற்பநீரையும் போலு மெனக் காண்க. பசுமை, கருமை நீலம் என்ற நிறங்களில் ஒன்றற்கொன்றுள்ள சிறிதுவேறுபாட்டை முக்கியமாகக்கொள்ளாமல் அவற்றை அபேதமாகக்கூறுவது கவிமரபு ஆதலால், கருங்குழல் 'பைங்குழல்' எனப்பட்டது. அம்மா - ஈற்றசை. முன்னொருகாலத்தில் குருசிஷ்யகிரமத்தை உலகத்தில் அனைவருக்கும் விளக்கும்பொருட்டு நாராயணனென்னுங் குருவும் நரனென்னுஞ் சிஷ்யனமாகப் பதரிகாச்சிரமத்தில் தோன்றிச் சீடனுக்குக் குரு தத்துவப்பொருள்களை உபதேசிக்கின்றதன்மையாய் வீற்றிருக்கிற திருமாலின் இருமூர்த்திகள்தாமே இங்கு முறையே கண்ணனும் அருச்சுனனுமாக அவதரித்ததனால் 'நாரணற்கு நண்பான நரனார்' என்றார். 'நரனுநாரணனுமானோம்' என முதற் போர்ச்சருக்கத்தும் கூறுவர். (731) 11. | விளிந்துமயில்புறங்கொடுக்குமெல்லியலா ளொருத்திநெடு வேயும்பாகும், சுளிந்துவருங்கடகளிற்றுச்சுவேதவா கனன்கடகத் தோளின்மீது, தெளிந்தநறுங்கத்தூரிச்சேறுபடு சிவிறியினீர்சிந்துந் தோற்றம், களிந்தகிரிமிசைக்கடவுட்காளிந்தி பரந்ததெனக்கவினு மாதோ. |
(இ-ள்.) மயில் விளிந்து புறம் கொடுக்கும் - மயில் (ஒப்பாக முன்னிற்க மாட்டாமல்) தோற்று முதுகுகாட்டிச் செல்லும்படியான, மெல் இயலாள் - மென்மையான சாயலை யுடையவளாகிய, ஒருத்தி - ஒரு பெண், நெடுவேய்உம் பாகுஉம் சுளிந்து வரும் - நீண்ட முட்கோலையும், பாகனையும் (துரத்திலே கண்டாலுங்)கோபித்து வருகிற, கடகளிறு - மதங்கொண்ட ஆண்யானைபோன்ற, சுவேத |