72. | சதையமீன்கடவுளுஞ் சசிகுலத்துநல் விதையெனமேதினி மீதுதோன்றினான் துதையளிசெறிகுழற் றோகையாயினாள் இதையமுற்றுயர்நதியென்னுமின்னுமே. |
(இ - ள்.) சதையம் மீன் கடவுள்உம் - சதயமென்ற நட்சத்திரத்துக்கு உரிய கடவுளான வருணதேவனும், சசிகுலத்து - சந்திரகுலத்திலே, நல்விதை என - சிறந்தவித்துப்போல, மேதினிமீது - பூமியின்மேல், தோன்றினான் - பிறந்தான்; இதையம்உற்று - நன்மனம் பொருந்தி, உயர் - மேன்மைபெற்ற, நதி என்னும் - நதியென்கிற,மின் உம் - மின்னல்போன்ற பெண்ணும், துதை - நெருங்கிய, அளி - வண்டுகள்,செறி - நெருங்கிய, குழல் - கூந்தலையுடைய, தோகை ஆயினாள் -மானுடப்பெண்ணானாள்; (எ - று.) இது, வருணன் பூமியில் குருகுலத்திற் பிறக்க, கங்கையாளும் மானுடமகளாதலைக் கூறும். பிரதீபமன்னனுக்குப் பிறந்தகுமாரருள் சந்தனு, இரண்டாமவனாயிருந்தும் முதல்வனான தேவாபிபோல இளமையிலேயே கானகஞ்செல்லாது இல்லறத்தைப் பூண்டு ஒழுகியதனால் வீடுமன் முதலியோர் தோன்றிக் குருகுலம் பெருக்கியமையின், 'சசிகுலத்து நல்விதை யென' என்று கூறியதென்பர். சசி = சசீ: முயலை (முயல்போன்றகறையை) யுடையது: காரணப்பெயர். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு தேவதையுண்டு : சதய நட்சத்திரத்திற்கு வருணன் தேவதை : ஆதலால், வருணனை 'சதையமீன்கடவுள்' என்றார். மேதினி = மேதிநீ: மதுகைடபர்களின் மேதசினால்[உடற்கொழுப்பினால்] நனையப்பெற்ற தென்று அவயவப்பொருள். வண்டுகள்மொய்த்தல் தேவமாதர்க்கன்றி, மானுடமகளுக்கே யுரியதாதலால், 'துதையளி செறிகுழல்தோகை' என்றதனால் மானிட மகளென்பது பெறப்படும். தோகை, மின் - ஆகுபெயர்கள். (80) 73. | தவமுறக்குடதிசைத் தலைவன்றாரமாம் அவள்வயிற்றுதித்தன ரந்தவெண்மரும் உவகையிற்பெரும நீயுணர்ந்துகொள்கென இவடிருக்கணவனு மின்னகூறுவான். |
(இ - ள்.) தவம் உற - நல்வினை பொருந்துதலால், குடதிசை தலைவன் தாரம்ஆம் - மேற்குத்திக்குக்குத் தலைவனான வருணதேவனுக்கு மனைவியான, அவள்வயிற்று - அந்தக் கங்காதேவியின் வயிற்றிலே, அந்த எண்மர்உம் உதித்தனர் - அந்தஅஷ்ட வசுக்களும் (முறையே) பிறந்தார்கள்: பெரும- பெருமையுடையோனை! நீ-,உவகையின் - மகிழ்வோடு, உணர்ந்துகொள்க- (இச்செய்தியை) அறிந்துகொள்க, என -என்று (கங்கையாள்) கூறி நிற்க,- இவள் திரு கணவன்உம் - இந்தக் கங்கையாளின்சிறந்த கணவனான சந்தனுவும், இன்ன - இவ்வாறான வார்த்தைகளை, கூறுவான் -சொல்பவனானான்; (எ-று.) - கணவன் கூறுவன மேற் செய்யுளிற் காணப்படும். வருணன் மனைவியான கங்கையாளிடத்து வசுக்களெண்மரும் தோன்றினாரென்று கங்கையாள் தான் கூறிய வரலாற்றினை |