(இ-ள்.) என்ற போதில் - என்று (அக்கினிதேவன்) சொன்ன பொழுதில்,- தனஞ்சயன் - அருச்சுனன், 'உன் இச்சையின்படி உணா ஈந்தனம் - உனது விருப்பத்தின்படி உணவை அளித்தோம்; இமை போழ்தில் சென்று கொள்க - ஒருமாத்திரைப்பொழுதிலே (நீ) போய் (அவ்வனத்தை)க் கைக்கொள்வாயாக', என கூறலும் - என்று சொன்னவுடனே,- (அவ்வக்கினிபகவான்), சிந்தை கூர் மகிழ்வு எய்தி- மனத்தில் மிக்க மகிழ்ச்சியையடைந்து,- மன்றல் அம் துழாய் மாயவன் அருளினால்- நறுமணமுள்ள அழகிய திருத்துழாய்மாலையையணிந்த கண்ணபிரானதுஅருளினால்,- வடிகணை மாளாமல் துன்று தூணிஉம் - கூர்மையான அம்புகள்எடுக்க எடுக்கக் குறையாமல் நிறைகிற (இரண்டு) அம்பறாத்தூணிகளையும், சாபம்உம் -வில்லையும், இரதம்உம் - தேரையும், சுவேதவாசிஉம் - (நான்கு)வெள்ளைக்குதிரைகளையும், ஈந்தான் - (அருச்சுனனுக்குக்) கொடுத்தருளினான்;(எ-று.) 'உன் இச்சையின்படி உணாவீந்தனம்' என்று அருச்சுனன் வாக்குத்தத்தஞ் செய்யவே அருச்சுனனது தவறாத வாய்மையையும் துணிவையும் நோக்கியதனாலான வியப்பினாலும், இனித் தனது எண்ணம் முடிந்ததென்று நிச்சயத்தினாலும், அக்கினி தேவன் மிக மகிழ்ந்து, அவன் விருப்பின்படி வில்முதலியவற்றை அன்போடு தருபவனானான். ஸ்ரீகிருஷ்ணன் தூண்ட, அருச்சுனன் அக்கினிபகவானிடத்துக் காண்டீவம் முதலியவற்றைக் கேட்டு அவன் தரப்பெற்று அடைந்தனனென்பது தோன்ற, 'மாயவனருளால் வடிக்கணை மாளாமல் நின்று தூணியும்சாபமும் *** வாசியுமீந்தான் என்றது. கணைமாளாமல் துன்று தூணி - அக்ஷய தூணீரம். இங்குக்குறித்த வில், காண்டீவமென்னும் பெயருள்ளது. சுவேதவாசி - சாதியொருமை;அடுத்தகவியில் ஈரரிரண்டிவுளி 'என வருதல் காண்க. அக்கவியில் 'ஈந்தவானரப்பதாகை நட்டு' எனக் கூறுதலால், குரங்குவடிவமெழுதிய துவசத்தையும் உடன் கொடுத்தன னென்பது விளங்கும், கண்ணபிரானை உளப்படுத்தி 'ஈந்தனம்' என்றான். தெளிவுபற்றி எதிர்காலம் இறந்தகாலமாயிற்று; காலவழுவமைதி. (747) 27.- அருச்சுனன் போர்க்கோலங்கொண்டு தேரேறுதல். ஈந்தவானரப்பதாகைநட்டீரிரண் டிவுளியுமுடன்பூட்டி ஆய்ந்தவன்றொழிற்பாகனுமருணனி லழகுறும்படிதூண்டக் காய்ந்தசாயகநாழிகைகட்டியக் காண்டிவங்கரத்தேந்தி வேய்ந்தமாமணிக்கவசமுமருக்கனி லழகுறமேற்கொண்டான். |
(இ-ள்.) ஆய்ந்த - ஆராய்ந்தறிந்த, வல் தொழில் -(போருக்கு ஏற்ற) வலிய (குதிரைத்) தொழிலையுடைய, பாகன்உம் - தேர்ப்பாகனும், ஈந்த வானரம் பதாகை நட்டு - (அக்கினிதேவன்) கொடுத்த குரங்குக்கொடியை நாட்டி, ஈர் இரண்டு இவுளிஉம் உடன் பூட்டி - நான்கு (வெள்ளைக்) குதிரைகளையும் ஒருங்கு (தேரிற்) பூட்டி, அருணனில் அழகு உறும்படி தூண்ட - (சூரியனது தேர்ப்பாகனான) அருணன்போல அழகுமிகும்படி தேர்செலுத்த,- (அருச்சுனனும்), |